தொடர்கள்
ஆன்மீகம்
தேஜோவதி 10 - கொல்கத்தா இராதாகிருஷ்ணன்

20240220205003512.jpg

சேனையுடன் பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா சபையில் வரவு

பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா கையிலாயத்தில் பவனி வரும் அழகை ஆதிசங்கரர் தனது ஸ்லோகத்தில் அழகாக வர்ணிக்கிறார்.

“ஆரூட ப்ரௌட வேக ப்ரவிஜித

பவனம் துங்க துங்கம் துரங்கம்

சேலம் நீலம் வஸான கரதல்

விலஸத் காண்ட கோதண்ட தண்ட

ராகத்வேஷாதி நானாவித ம்ருக

படலீ பீதிக்ருத்பூத பர்த்தா

குர்வன்னா கேடலீலாம் பரிலசது

மன:கானனே மானகீனே”

“தன் அளப்பறிய வேகத்தால் வாயுவையும் வென்ற உயரமான குதிரையின் மீதேறி, நீலாம்பரதரனாக, கையில் கோதண்டம் தாங்கி, ராகத்வேஷம் முதலான பற்பல மிருகங்களுக்கு பீதியை உண்டாக்கும் பூதனாதன், என் மனமாகிய கொடுங்காட்டில் தன் வேட்டையை நடத்தி சந்தோஷமடையட்டும்”.

பகவான் அழகான ஸேனையுடன் சபையில் வருவதை மணிதாசர் தனது விருத்தத்தில் இவ்விதம் கூறுகிறார்.

நட்ட பூதம் நடு விளக்கு எடுக்க, வெஞ்சிலை பூதம்

எதிரேற்று கட்டியம் கூற, வெள்ளைக்கல் பூதம்

விருது சொல்ல, அசனி ஐயனின் காளாஞ்சி ஏந்த,

ரணவெரியன் அடப்பம் எடுக்க கறுப்பன்

அடப்பக்காரனாக நின்று அடப்பம் கட்டி

சுருள் கொடுக்க, குடகுருட்டி குந்தம் எடுத்து ஆட,

சரகுருட்டி கூத்தாட, சாவலர் தாளம் போட,

ரணவீரன் உடைவாள் பிடித்து வர,

வெள்ளைக்கல் இண்டலையான் விசிறி வீச,

வேதாளம் குடை பிடிக்க, முல்லைக்

குமாரியும் ஸுந்தர யக்ஷியும் சாமரம் போட

அய்யனும் ஸபையில் வருகின்றாரே”

இவர்களோடு, ஆவேசரங்கம் செய்து வரும் கருப்பனுடன் புண்டரீகத்தலைவன் என்ற செல்லப்பிள்ளை ஸுமதி முன்னோடி வர பகவானின் அழகை அள்ளிப்பருக வருபவர்களை இசைந்து வசமாக்கும் இசக்கியும் கூடவர, வாதுக்கல் இசக்கியுடன் பத்ரகாளியும், பெரிய பேச்சியும், பிரம்ம யக்ஷியும் ஆடி வர, மின்னாடி மாடன் முழங்கியே வர, மற்ற பூத கணங்கள் வில், அம்பு, கதை, கட்டாரி, வல்லயம், ஈட்டி, வேல், பரசு, வாள், சுரிகையும் தாங்கி வர, சுவாமி மந்தஹாசத்துடன், கோடி சூரியப் பிரகாச பிரபை ஒளியோடு குவலயக்கண்ணன், த்ரிபுவன வஸ்யன் நீல கோமளாங்கப் பிரகாசன், நவரத்ன கிரீடம், கடகம், திவ்ய கேயூர ஹாரம், அணிந்து மாணிக்கப் பாத்திரம் கரும்பு வில் ஏந்தி அபயக்கரம் காட்டிக்கொண்டு, காலில் சலங்கை கலீர் கலீர் என ஒலிக்க, மார்பில் மணிமாலை அழகாய் அசைந்தாட பரம கம்பீரமாக மதயானை போல் வரும் அழகே அழகு.

மணிதாசர் தனது மூன்று சொரி முத்தைய்யன் பஞ்சகங்களில் பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா தன் சேனைகளுடன் சவாரி வருவதை பின்வருமாறு வர்ணிக்கிறார்.

“தஞ்சமென வந்தவர்க்கு தருணத்தில் முன் நின்று தற்காக்கின்ற கோமான் சவாரி வருகின்றதைப் பார். உலகில் அந்தணர் சதுர்வேத மாரி பொழிய வெஞ்சிலை பூதம் எதிரேற்றி கட்டியம் கூற, வேதாளம் குடை பிடிக்க, பிறகினில் ஸுந்தர யக்ஷியும் முல்லைக்குமாரியும் வெண் சாமரங்கள் வீச, அஞ்சாத ரணவெறியன் அடப்பம் எடுக்க, அசனி காளஞ்சி ஏந்த, அமராதியர் புஷ்ப வர்ஷம் சொரிய, வெடி வினோதகள் அகில வாத்தியமும் முழங்க, புன்சிரி கருணாகரன் ஜகன் மோஹனன் பொங்கும் பாக்கியங்கள் தருவார் பொன் சொரியும் முத்துப் பொதிகைச் சரிவில் உத்திரன் புத்திர சந்தானபதியே”

“ஆதாரமான பொன்னம்பலவனும் பவனியாய் சவாரி வருகின்றதைப் பார். ஆரியப் பட்டரொடு ரணவீரன் உடைவாள் கொண்டு அகம்பிடி பிடித்து வரவும், பாதாள பூதம் எதிற்சூது சாவலன் பட்டச் சங்கன் பெயர் பெற்ற நீலகண்டன் இருளன், அண்டையில் பலவேசன், ஆடலதிபன் தவசி வாதாடும் வன்னியன் தூதோடு வன் சுடலை மாடனும், கூடி வருவார் மந்திர மூர்த்தித்தலைவனும் துயர் அகற்றி நம் மனதபீஷ்டங்கள் தருவார் பூதாதிபன் துரிய வேத சாஸ்த்திராகம புராணங்கள் ஓதும் பொருளாம் பொன்சொரியும் முத்துப் பொதிகைச் சரிவில் உத்திரன் புத்ர ஸந்தான பதியே.

எங்கும் நிறைந்த சிவன் அங்கம் புணர்ந்து மால் ஈன்றெடுத்து ஆண்ட பெருமான் இக்கலியுகத்தில் கருணைக்கடல் இவர்க்கு நிகர் இக்குவலயத்தில் ஏது? துங்கரண சிங்கனெனக் கனக சங்கிலி தோளன் இருளன், காளி, தளவாய் துஷ்டரை விரட்டிடும் அடியோட்டி கட்டாரி முத்தோடுடைய பட்டராயன் துங்கன் சுருட்டி முருகன் சரகுருட்டியும் சூழ்ந்து இலங்கும் பக்தாந்தரங்கனென்றும் துன்பம் துடைத்து அருள் இன்பம் கொடுத்து உபரி தொண்டரை ஆட்கொண்டிடுப்பார் பொங்கு புகழ் பொன்னாட்டு சிங்கநகர் தென்னாட்டு புலி ராஜ குல நேசனென்றும் பொன் சொரியும் முத்துப்பொதிகைச் சரிவில் உத்திரன் புத்திர சந்தானபதியே.

தொடரும்…….