தொடர்கள்
அரசியல்
திருமண ஊர்வலத்துக்கு காரை ஹெலிகாப்டராக மாற்றியவருக்கு அபராதம்! - மாலா ஶ்ரீ

20240222223843675.jpeg

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஈஸ்வர் தீன். இவர் பழைய கார்களை வாங்கி, அவற்றை பல்வேறு மாடல்களாக வடிவமைத்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் ஒரு பழைய காரை ஈஸ்வர் தீன் வாங்கி, அதை ஹெலிகாப்டர் போல் வடிவமைத்தார். பின்னர் அந்த கார் ஹெலிகாப்டரை பெயின்டிங் பணிக்காக காஜுரி பஜார் பகுதியில் ஈஸ்வர் தீன் ஓட்டிச் சென்றுள்ளார்.

இதை போலீசார் கண்டறிந்து, ‘இந்திய வாகன சட்டத்தின்படி, எந்தவொரு வாகனத்தையும் உரிய அனுமதி பெறாமல் மாற்றக்கூடாது’ என்ற விதியை எடுத்து கூறி, அந்த காரை பறிமுதல் செய்து, ஈஸ்வர் தீனுக்கு ₹2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், காரில் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் வடிவிலான பாகங்களை உடனடியாக அகற்றும்படி ஈஸ்வர் தீனுக்கு போலீசார் உத்தரவிட்டனர்.

இதுகுறித்து ஈஸ்வர் தீன் கூறுகையில், ‘‘இந்த காரை திருமண ஊர்வலப் பணிக்காக ₹2.50 லட்சம் செலவு செய்து ஹெலிகாப்டர் போல் மாற்றி வடிவமைத்தேன். இதன்மூலம் ஏராள வருவாய் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். தற்போது முதலுக்கே மோசமாகிவிட்டது. இதேபோல் ஹெலிகாப்டராக மாற்றி அமைக்கப்பட்ட பல்வேறு கார்கள் பீகார் உள்பட பல்வேறு வடமாநிலங்களில் ஓடிவருகிறது. அதன்படிதான் இங்கு எனது காரையும் மாற்றினேன்!’’ என்று வேதனை தெரிவித்தார். ஈஸ்வர் தீனால் ஹெலிகாப்டராக மாற்றியமைக்கப்பட்ட கார், தற்போது அம்பேத்கர் நகர காவல் நிலையத்தில் வைக்கப்பட்டு உள்ளது. எனினும், ஹெலிகாப்டராக மாற்றி வடிவமைக்கப்பட்ட கார் குறித்து பல்வேறு சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சட்டத்தை பொறுத்தவரை Ignorance is not an Excuse. வேறென்ன சொல்ல.