தொடர்கள்
கவர் ஸ்டோரி
ரிதன்யாக்கள் ஏன் சாகிறார்கள்? -தில்லைக்கரசிசம்பத்

20250611194609509.jpeg

நன்றி:இந்தியன் எக்ஸ்பிரஸ்

இந்தியாவில் 2017–2021 ஆண்டுகள் இடைவெளியில் மட்டுமே 35,493 வரதட்சணை சாவுகள் என்கிறது தேசியகுற்ற ஆவணக்காப்பகம்(NCRB). ஒரு நாளைக்கு 20பெண்கள் என்ற கணக்கில்.. மற்ற மணமான பெண்கள் நன்றாகதானே உள்ளனர் என நினைக்கவேண்டாம்.

சரியாக சீர் செய்யவில்லை என அடியும் உதையும் பட்டினியுமாக சித்ரவதைகளை அனுபவித்துக்கொண்டிருப்பதால் இன்னும் பல பெண்கள் முழுமையாக சாகவில்லை.

இந்த கொடுமைகளில் உ.பி 11,874 , பீஹார் 5,354 ,ம.பி 2,859, மேற்குவங்கம் 2,389, ராஜஸ்தான் 2,244 வரதட்சணை சாவுகள் என வடமாநிலங்கள் தான் அதிலேயும் முன்னே நிற்கின்றன.

பதிவு அலுவலங்களில் சில ஆயிரங்களில் முடியவேண்டிய திருமணங்களை லட்சங்கள், கோடிகள் என பணத்தை மண் போல் இறைத்து செய்யப்படும் திருமணங்களில் பல, இன்று குடும்பநீதிமன்றங்களில் விவாகரத்துக்காக நின்று கொண்டிருக்கிறது.

விவாகரத்துக்கு வழியில்லாத பெண்களோ, சாவை தேர்ந்தெடுக்கிறார்கள்.

2025061119481958.jpeg

சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா வழக்கில் என்ன நடந்தது?

ரிதன்யா தற்கொலைக்கு முன் மாமியார், மாமனார்,கணவர், ஆகியோர் வரதட்சணை பாக்கி கேட்டதையும், தொடர்ந்து அவமானப்படுத்தியதையும் பேசி பதிவு செய்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் மனகுமுறலோடு, திருமண உறவின் உண்மைத்தன்மையைப் பற்றிய சமூகக்கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

அதற்கு இந்த சமூகம் என்ன பதில் சொல்கிறது என்பதை பார்க்கும் முன், ரிதன்யாவின் தந்தை என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.

“ என் மகள் இறந்தது வருத்தமாக இருந்தாலும் அவள் ஒருத்தனுக்கு ஒருத்தி என்கிற முறையில் இறந்து போனதை நினைத்து பெருமை கொள்கிறேன்!” என அவர் பேசியது தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மகளை இழந்து பரிதவிக்கும் தந்தையின் வார்த்தைகளை பெரிதுப்படுத்த வேண்டாம்.

ஆனால் அந்த கேள்வி சிந்தனைக்குரியது. அது இந்தியசமூகம் எவ்வளவு மடத்தனத்துடன் கட்டமைத்த யாருக்கும் உதவாத கொள்கைகள், கலாச்சாரம் பண்பாடு என்கிற பெயரில் எத்தனை பெண்களை காவு வாங்கிக்கொண்டிருக்கிறது என்பதை காட்டிக்கொண்டிருக்கிறது.

“ஒருவனுக்கு ஒருத்தி” – இந்த கொள்கை இந்திய பண்பாட்டு வேர்களின் ஒன்று. நியாயமானதே!

அந்த ஒருவனோ ஒருத்தியோ கொடுமைக்காரராக இருந்தாலும் சகித்துக்கொண்டு வாழவேண்டும் என்பது அர்த்தமற்றது.

பழம்பெரும் தமிழ் மரபில் ‘தாலி’ என்பது ஒரு புனிதம். பெண்கள் ஒருமுறை திருமணம் செய்துவிட்டால், அதுதான் “முழுமையான வாழ்க்கை”. “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்ற அபத்தமான பழமொழிகள் போதிக்கப்பட்டன.

ஒருவகையில் தமிழ் சினிமாக்கள் போதித்த தாலி கலாச்சாரம், (அந்த ஏழு நாட்கள் போன்றவை) சினிமா ரத்தத்தில் ஊறிப் போன தென்னிந்தியர்களுக்கு சாபமாகிப் போனது. தாலி கட்டி விட்டால் யாராவது பைத்தியமாக இருந்தால் கூட மனைவியாக வாழ வேண்டும் என்ற பிற்போக்குத் தனமான சிந்தனைகளை விதைத்தது தென்னிந்திய குறிப்பாக தமிழ் சினிமா.

விவாகரத்து, மறுமணம் என்ற விஷயங்கள் தகாதவை, கலாச்சார பண்பாட்டுக்கு எதிரானவை, ஒழுக்கக்கேடு என போதிக்கப்பட்டன. இன்று நிலைமை மாறி வருகிறது.

சில காலம் முன்பு வரை கொடுமையான கணவன் அமைந்தாலும், பெண்கள் விலக முடியாமல் தங்கள் வாழ்நாளையே அழித்துக்கொண்டிருந்தனர்.

இப்போது பெண்கள் படிப்பு, வேலை என சுயகால்களில் நின்று முந்தைய தலைமுறைபெண்கள் தொலைத்த சுயத்தைத் தேடி எடுத்து வருகின்றனர்.

“ஆஹா .. முன்னேறி விட்டோமடா..!” என நினைக்கும் போது ரிதன்யாக்களின் சாவுகள் நம்பிக்கையை புரட்டிப்போடுகிறது. “சதி” வழக்கம் ஒழிந்து நூறாண்டுகள் ஆனது என்றிருந்தபோது ராஜஸ்தானில் ரூப்கன்வரின் பெருமைக்குரிய(!) தீக்குளிப்பு இந்திய சமூகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது நினைவிருக்கலாம்..இன்றும் அங்கே சுற்றுபட்டு கிராமங்களிலிருந்து "சதி மாதாவை" வணங்கி செல்ல ரூப்கன்வரின் சமாதிக்கு வருகிறார்கள்.

“ஒருவனுக்கு ஒருத்தி” என்ற முறையில் நான் இறந்து போகிறேன் என சொல்லி தற்கொலை செய்வதற்கும், கணவர் இறந்து விட்டால் சதிநெருப்பில் குதித்து மாண்டு போவதற்கும் என்ன வித்தியாசம்? மறுமணம் செய்யாமல் வேறெந்த ஆணும் வாழ்வில் இனி தேவையில்லை என்று கூட வாழ்ந்திருக்கலாமே!

அதற்கு ஏன் உயிரை விடவேண்டும்?

20250611195025173.jpeg

பொய்யான வரதட்சணை குற்றச்சாட்டை வைத்து நல்ல கணவர்களை சிறைக்கு அனுப்பும் சில அடாவடி பெண்களும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.

ரிதன்யா போன்ற அப்பாவி பெண்களே கடைசியில் சாகிறார்கள்.

திருமணம் என்பதை பெண்ணின் பெற்றோர்கள் கடமையாக பார்ப்பதை விட மகளின் உரிமை என்று பார்ப்பது அவசியம். வாழ்க்கைப்பாதை என்பது எப்போதும் மலர்விரிப்பு அல்ல.

கற்களும் முட்களும் கொண்டது என்பதை சொல்லி, மகள்களுக்கு படிப்போடு சுயமரியாதையும், தைரியமும், தன்னம்பிக்கையும், பிரச்சனைகளை சமாளிக்கும் அறிவையும் சொல்லிக்கொடுத்து வளர்த்து விடவேண்டும்.

சமூகத்தை முழுமையாக மாற்ற முடியாது. ஆனால் பெண்கள் தெளிவாக இருந்தால் இந்த சமூகத்தால் என்ன செய்ய முடியும்?! எண்ணற்ற சமூக கொடுமைகளிலிருந்து இதுவரை பெண்ணினம் தப்பித்து வரவில்லையா?!

திருமணம் மட்டுமே வாழ்க்கையல்ல..

சாவதில் உள்ள தைரியத்தை வாழ்வதில் காட்டினால் வாழ்க்கை நம் வசப்படும்.