ராஜஸ்தானில் உள்ள பிகானிர் நகரில் ஒட்டகங்களுக்கான தேசிய ஆராய்ச்சி மையம் (NRCC) இயங்கி வருகிறது. இம்மையத்தின் சமீபத்திய ஆய்வில், ‘ஒட்டகங்களின் ஒரு துளி கண்ணீர் மற்றும் அதன் நோய் எதிர்ப்பு அமைப்பிலிருந்து பெறப்பட்ட ஆன்டிபயாடிக் மருந்துகள் பாம்புகளின் விஷத்தை முறியடிக்க உதவுகிறது’ என்று தகவல் தெரியவந்துள்ளது. இதன்மூலம் பாம்புக் கடிக்கு சிகிச்சை அளிக்க ஒரு புதிய வழி உருவாகியுள்ளது. இது வெற்றிகரமாக அமைந்தால், ஒட்டகம் வளர்க்கும் விவசாயிகளின் வருமானத்தையும் இது கணிசமான அளவில் அதிகரிக்கும் என்றும் ஆய்வு தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆய்வில், மிக கொடிய ‘எகிஸ் கரீனடஸ் சோசுரேகி’ பாம்பின் விஷத்தை என்ஆர்சிசி ஆய்வாளர்கள் ஒட்டகங்களுக்குச் செலுத்தி பரிசோதித்தனர். அந்த ஒட்டகங்களின் ரத்தம் மற்றும் கண்ணீரிலிருந்து எடுக்கப்பட்ட ஆன்டிபயாடிக்கை ஆய்வு செய்தபோது, அது பாம்பின் விஷத்தைவிட அதிக வீரியமாக எதிர்த்துப் போராடுவது கண்டறியப்பட்டது. அதே நேரம், குதிரையின் இம்யூனோகுளோபலின் மூலம் தயாரிக்கப்படும் பாம்பு விஷ முறிவு மருந்துகள், வழக்கமான விஷ முறிவு மருந்துகளைவிடக் குறைந்த அலர்ஜியைத்தான் ஏற்படுத்துகிறதாம். வழக்கமான விஷ முறிவு மருந்துகளைவிட செலவு குறைவு. எளிதாக உற்பத்தியும் செய்யலாம். மேலும், சாதாரண முறிவு மருந்துகளைவிட செயல்திறனும் அதிகமாக இருக்கிறதாம்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 58,000 பாம்புக்கடி இறப்புகள் ஏற்படுகின்றன. மேலும் 1.4 லட்சம் பேருக்கு மோசமான உடல்நிலை பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கிராமப்புறங்களில், பாம்புக்கடி சம்பவங்கள் அதிகமாக இருக்கும் இடங்களில் மருத்துவ சிகிச்சை தாமதமாகும். அதுபோன்ற பகுதிகளில் குறைந்த செலவில், பாதுகாப்பான சிகிச்சை கிடைப்பதை ஒட்டகம் மற்றும் குதிரையின் விஷ முறிவு மருந்துகள் உறுதி செய்யும்.
மேலும், இது பிகானிர், ஜெய்சால்மர், ஜோத்பூர் பகுதிகளில் ஒட்டகம் வளர்ப்பவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொருளாதார ரீதியாக உதவும். தங்களின் ஒட்டகங்களை உள்ளூர் விவசாயிகள் அளித்தால், அதன் கண்ணீர் மற்றும் ரத்த மாதிரிகளை என்ஆர்சிசி எடுத்துக் கொள்கிறது. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு நல்ல வருமானத்தை வழங்குகின்றனர். இப்போது ஒட்டகத்தில் இருந்து பெறப்பட்ட ஆன்டிப்யாடிக் மருந்துகளின் ஆய்வுகளை சீரம் உள்பட பிற தனியார் நிறுவனங்களும் துரிதப்படுத்தி உள்ளனர்.
பொதுவாக, இந்திய ஒட்டகங்கள் தனித்துவமான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. மேலும், அவை அதிக தட்பவெப்ப நிலைகளுக்கும் வாழும் வகையில் தகவமைத்துக் கொண்டன. இந்த ஒட்டகங்களில் இருந்து கிடைக்கும் அதிக வீரிய தடுப்பு மருந்துகள், நவீன மருத்துவ உலகில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அது சரி எப்படி ஓட்டகத்தின் கண்ணீரை எடுப்பது ?? ஒரு வேளை தமிழ் டிவி சீரியல்களை போட்டு விட்டு பார்க்க விட வேண்டுமோ ????
Leave a comment
Upload