தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை - 29. அவதி அவனுக்கு வசதி மக்களுக்கு ? - மூத்த பத்திரிகையாளர் ஆர். நடராஜன்

20250612062403663.jpeg

(ஏ.ஐ. படம்)

விபத்துக்களைப் பற்றி எழுதும் நிருபரே விபத்துக்குள்ளாவதும் உண்டு. காயத்தையும். கஷ்ட நஷ்டங்களை மீறித்தான் ஒரு நிருபர் வேலை செய்தாக வேண்டும். தலைமை அலுவலகத்தின் நிருபர் என்றால் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். மாவட்ட நிருபர் சின்னஞ்சிறு விபத்துகளை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து வேலை செய்தாக வேண்டும்.

அவனைப் பொறுத்தவரை வேலையே முக்கியம். ஒருநாளும் வீட்டோடு முடங்கிக்கிடந்ததில்லை. எழுத வேண்டிய செய்தி முக்கியம் என்பதால் அவன் தன் வெளியூர் பயணங்களைத் தொடர்ந்தான்.

ஒருமுறை தன் நண்பரை அழைத்துக் கொண்டு, அவரது ராஜ்தூத் மோட்டார் சைக்கிளில் நெய்வேலியில் இருந்து சிதம்பரத்திற்கு சேத்தியாதோப்பு வழியாகச் சென்றான்.

பின்னிருக்கையில் அவனது இன்ஜினியர் நண்பர் சையத்அலி அமர்ந்திருந்தார். நெய்வேலியில் இருந்து சிதம்பரம் செல்ல இரண்டு வழிகள் உண்டு. அவன் சேத்தியாத்தோப்பு வழியாகச் சென்றான்.

ஒரு இடத்தில் மோட்டார் சைக்கிள் வழுக்கியது. பிரேக் பிடித்து நிறுத்த முடியவில்லை. வாகனம் விழுந்தது.

பின்னிருக்கையில் அமர்ந்திருந்த சையத் அலி இறங்கிவிட்டார். ஓட்டிவந்த அவன் மோட்டார் சைக்கிளோடு கீழே விழுந்தான். சற்று முன்பு மழை பெய்திருந்ததால் அவனது பேண்ட் சர்ட் எல்லாம் சகதி, முழங்காலில் அடிபட்டது. வாகனத்தை ஓரமாக ஒரு வீட்டு அருகில் நிறுத்திப் பார்த்தால் சக்கரத்திற்கும், மட்கார்டுக்கும் இடையில் களிமண் நிறைய சிக்கியிருந்தது. அரும்பாடுபட்டு சையத்அலி வாகனத்தைக் கழுவினார், பிறகு அவரே ஓட்டினார்.

அவன் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டான். போக வேண்டிய இடத்திற்குச் செல்லாமல் நேராக டாக்டரைப் பார்க்க வேண்டும் உங்களுக்கு காயம் பட்டிருக்கிறது, ஊசிபோட்டுக் கொள்ளவேண்டும் என்றார் சையத் அலி. அவனோ இரண்டு இடத்திற்கும் போக வேண்டாம் முதலில் பொதுப்பணித்துறை எக்சிகியூட்டிவ் இன்ஜீனியர் அலுவலகத்திற்குப் போவோம் என்று சொல்லி விட்டான்.

நேராக சிதம்பரத்தில் உள்ள அந்த அலுவலகத்திற்கு சென்றான். சேறு சகதியுடன் கிழிந்திருந்த பேண்ட் சட்டை, கை கால்கள் எல்லாம் களிமண் என்ற கோலத்தில் அவனைப் பார்த்து பொதுப்பணித்துறை எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் நீங்கள் யார்? எதற்காக வந்திருக்கிறீர்கள்? என்ன ஆச்சு உங்களுக்கு? இடம் தவறி வந்துவிட்டீர்களா என்று கேட்டார்.

உங்கள் சாலையின் லட்சணம் இப்படி. புதிதாக ரோடு போடுகிறேன் என்று சொல்லி கற்களுக்கு மேல் Bonding material ஆகக் களிமண்ணைப் போட்டிருக்கிறீர்கள். உங்கள் மூளையே மூளை. அதில் வாகனம் வழுக்கிவிட்டது. இன்னும் எத்தனை பேர் இப்படி வழுக்கிவிழப் போகிறார்களோ தெரியவில்லை.

உங்களது சட்ட திட்டங்கள்படி நீங்கள் Bonding material ஆகக் களிமண்ணைப் பயன்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறார்களா. இதுபற்றி வழக்குத் தொடருவேன் அல்லது வேறு யாரையாவது வைத்து வழக்குத் தொடரச் செய்வேன் என்றான்.

சார் வேண்டாம் வேண்டாம். ஏதோ தப்பு நடந்திருக்கிறது. எங்களின் ஒப்பந்தக்காரர் அவசரத்திற்கு வாய்க்கால் மேட்டில் இருந்து களிமண்ணைப் போட்டு நிரப்பிவிட்டார் போலிருக்கிறது. நீங்கள் சொன்ன இடத்திற்குச் சென்று பார்க்கிறேன். சரிசெய்கிறேன். இதைப் பெரிது படுத்த வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அடுத்து, அவன் தன் டாக்டர் நண்பர் முத்துக் குமரனைப் பார்க்கச் சென்றான். அவனது அலங்கோலத்தைப் பார்த்ததும் டாக்டர் முத்துகுமரன் சொன்னார், “இதோ இருக்கிறது பாத்ரூம் முதலில் போய் குளித்துவிட்டு வாருங்கள். உங்களுக்கு வேட்டி சட்டை தருகிறேன்’’ என்றார். அதே போல் குளித்துவிட்டு உடைமாற்றிக் கொண்டு ஏ.டி.எஸ் ஊசிபோட்டுக் கொண்டு காயங்களுக்கு மருந்தும் போட்டுக்கொண்டான்.

இப்படியும் கிடைத்தார்கள் டாக்டர் நண்பர்கள். அவனுக்கு குளிக்க இடம் கொடுத்து, புதிய உடை கொடுத்து, காயத்திற்கு மருந்து தடவி, ஊசி போட்டு அனுப்பும் நண்பர்கள். எல்லோருக்கும் இது கிடைக்குமா? அந்த வசதி அவன் நிருபர் என்பதால் அல்ல மாணவ பருவத்திலேயே அறிமுகமாகியிருந்ததால்.

சிதம்பரம், நெய்வேலி நகர டாக்டர்கள் அவனது நட்பு வட்டத்தில் இருந்தவர்கள். ஆகவே அவர்களும் அவனுக்கு வைத்தியம் தேவைப்பட்டால் ஓடோடி வந்து உதவியவர்கள். அவன் நிருபர் தொழிலை விட்டபிறகும் அவனுடன் நட்பைத் தொடர்ந்து வருபவர்கள். நிருபர் தொழிலில் சிலர் அவனுடன் சண்டையிட்டாலும், பலர் நண்பர்களாகவே இருந்தது அவனது கொடுப்பினை.

அதன்பின் சிதம்பரத்தில் பார்க்க இருந்த வேலையை முடித்துவிட்டு நெய்வேலி திரும்பினான். அவன் மறுநாளும் சிதம்பரத்திற்கு வந்தான், வேறு பாதை வழியாக. அதே இன்ஜினியரிடம் இந்த சாலை போட உங்கள் திட்ட மதிப்பீடு என்ன, எவ்வளவு செலவு செய்திருக்கிறீர்கள், யார் ஒப்பந்தக்காரர் என்றெல்லாம் கேள்விகளாக அடுக்கினான்.

அந்த இன்ஜினியர் சில கேள்விகளுக்கு பதில் சொன்னார். சில கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. இருந்தாலும் கிடைத்த பதில்களை வைத்துக்கொண்டு அவன் அந்த சாலையின் லட்சணம் பற்றி ஹிண்டுவில் கால்பக்க அளவிற்கு ஒரு செய்திக்கட்டுரை எழுதினான். அதில் முக்கியமான வரி ஒரு கார் அந்தச் சாலையில் சென்றால் மூன்று சக்கரங்கள் சாலையில் இருக்கும். ஒரு சக்கரம் தானாகச் சுழன்று கொண்டிருக்கும் இப்படியாகக் கார்கள் அந்தச் சாலையில் மூன்று சக்கர வாகனங்களாகச் சென்றன என்பது அழுத்தமான வரி. அடுத்த இரண்டு மாதங்களில் அந்த சாலை சீர் செய்யப்பட்டது.

இதுபற்றி மக்கள் திருப்திபட்டதை ஒரு பஸ் பயணத்தின் போது அவன் தன் காதுபட கேட்க நேர்ந்தது. இரண்டு பயணிகள் இப்படி பேசிக்கொண்டார்கள், “இந்த ரோடு இப்ப நல்லா ஆயிடுச்சய்யா” “ஹிண்டுக்காரன் புண்ணியம் கட்டிக்கொண்டான். அவன் எழுதினான் பாருங்க...” பஸ்ஸின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அவன் இந்த உரையாடலைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தான். அந்த இருவருக்கோ பஸ்ஸில் பயணம் செய்த பிறருக்கோ, அவன் யாரென்று தெரியாது.

எங்கள் செய்தியின் விளைவு இது என்று அவனோ, அவனது பத்திரிகையோ அந்த சாலை மேம்பாடு பற்றி பெருமை பேசிக் கொண்டதில்லை. எழுதுவது அவன் கடமை. வெளியிடுவது பத்திரிகையின் பொறுப்பு; எல்லாமே வாசகர்களின் நன்மைக்காகத்தான்.

இந்த சம்பவம் பற்றிப் பேசும் போது முதலில் உடன் வந்த இன்ஜினியர் சையத்அலி சொன்னார், ‘சார் அன்று நாம் வேறு பாதையில் போயிருந்தால் நீங்கள் விபத்தில் சிக்கியிருக்க மாட்டீர்கள். அப்போது அவன் பஸ்ஸில் கேட்க நேர்ந்த உரையாடலை அவரிடம் சொன்னான்.

அவன் அன்று அந்த சாலையில், மோட்டார் சைக்கிளில் செல்லாமல் இருந்தால் சாலை பற்றி அவனுக்கு தெரிய வந்திருக்காது. எனவே எல்லாம் நன்மைக்கே என்று சொல்லிவிட்டான். அவனை வீழ்த்தி தன்னை வாழ வைத்துக் கொண்டது சாலை.

வாழ்க்கையின் முரண்களில் அதுவும் ஒன்று.