சாந்தனு (மகா பிஷா)
இட்சவாகு குலத்தைச் சேர்ந்த மகாபிஷா தேவ லோகத்தில் பிரம்ம தேவரை வணங்க சென்றபோது காற்றால் கங்கா தேவியின் ஆடை சற்றே விலக அவனும் நாணமின்றி நோக்கி பிரம்மாவின் சாபம் பெற்று பிரதீப மன்னனின் மகன் சந்தனுவாக பிறந்தான். சந்தனு கங்காதேவியை மீண்டும் கண்டு காதல் வயப்பட்டான்.
கங்காதேவியின் நிபந்தனையால் அஞ்சிய சந்தனு, பிறந்த ஏழு குழந்தைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக அவள் கங்கையில் வீச கண்டான். அஷ்டவசுக்களில் ஏழு பேர் போக சந்தனுவின் ஆட்சேபத்தால் மீண்டவன் தேவ விரதன் என்னும் பீஷ்மர். (முந்தைய பிறப்பில் அஷ்டவசுக்களில் ஒருவனான பிரபாசன் மனைவி சொல்படி மற்ற ஏழு வசுக்களுடன் சேர்ந்து வசிஷ்டரின் பசுவான நந்தினியை களவாடி, நீண்ட காலம் மண்ணுலகில் வாழும் சாபம் பெற்றவன்.)
கங்கை நீங்கியபின்னர் சந்தனு வாசனை கொண்ட சத்தியவதியைக் கண்டான்; மையல் கொண்டான்; உடல் மெலிந்தான். பிறகு அவளை (பீஷ்மரின் தியாகத்தால்) சந்தனு மணந்தான்.
குறளும் பொருளும்
அடக்கம் உடைமை ஒருவரை தேவருலகத்துக்கு கொண்டு செலுத்தும்; அடங்காது திரிதல் வெளிவருவதற்கரிய இருள் சூழ்ந்த நரக உலகத்தில் செலுத்தி விடும்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் 121
மனைவிக்கு அஞ்சுபவர்கள், தேவர்கள் போல வாழ்ந்தாலும் பெருமை இல்லாதவர்கள் ஆவார்கள்.
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார் தோள் அஞ்சு பவர் 906
காரியமாற்றும் சிந்தனையுடன் மன உறுதி உடையவர்களிடம் பெண்ணுக்கு அடிமையாகும் பெண்பித்து எக்காலத்தும் உண்டாகாது.
எண் சேர்ந்த நெஞ்சத்திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்தாம் பேதைமை இல் 910
மனைவியின் காம இன்பத்திற்காக அவருடைய விருப்பத்தின்படி நடப்பவர்கள் வாழ்க்கையின் சிறந்த பயன்களை அடைய மாட்டார்கள்; காரியத்தை விரும்புகிறவர்கள் விரும்பத்தகாத நடத்தையும் அதுவேயாம்.
மனைவிழைவார் மாண்பயன் எய்தார்
வினை விழைவார் வேண்டாப் பொருளும் அது 901
தளிர் நிறம், முத்து சிரிப்பு, இயற்கை வாசனை, வேல் போன்ற கண்கள், மூங்கில் தோள் அவளுக்கு (சத்தியவதிக்கு).
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்தோள் அவர்க்கு 1113
Leave a comment
Upload