சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பெண் வழக்கறிஞர் தொடர்ந்து ஒரு வழக்கு விசாரித்த நீதிபதியையே அழ வைத்துவிட்டது.
`கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது அந்தப் பெண் வழக்கறிஞர் ஒருவரை காதலித்தார். அவர் திருமணம் செய்து கொள்வதாக தந்த வாக்குறுதியை நம்பி அவருடன் நெருக்கமாக இருந்திருக்கிறார். அப்படி ஒரு நெருக்கமாக இருந்ததை அவரது காதலர் தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். ஆனால் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை.
அந்த ஆண் நண்பர் பெண் வழக்கறிஞருடன் நெருக்கமாக இருந்த வீடியோ காட்சிகளை புகைப்படங்களை இணையதளங்கள், ஆபாச வலைதளங்கள், சமூக வலைதளங்களில் பதிவு செய்திருக்கிறார். இதை ஒரு நண்பர் இந்த பெண் வழக்கறிஞர் கவனத்திற்கு கொண்டு சென்ற பொழுது தான் அவர்கள் முன்னாள் காதலன் ரகசியமாக செல்போனில் பதிவு செய்திருப்பது தெரிந்தது. ஏப்ரல் மாதம் பெண் வழக்கறிஞர் புகார் தர அவரை ஏமாற்றியவர் உள்பட இரண்டு பேரை காவல்துறை கைது செய்து வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தற்சமயம் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
பெண் வழக்கறிஞர் சமூக வலைதளங்கள், இணையதளங்கள், ஆபாச வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோக்களை முடக்கவும் நீக்கவும் எதிர்காலத்தில் அது பரவாமல் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஜூன் பதினெட்டாம் தேதி மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தமிழக டிஜிபி ஆகியோரிடம் புகார் அளித்திருக்கிறார்.
அந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்தப் பெண் சார்பாக வாதாடிய வழக்கறிஞர்கள் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின் கீழ், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மட்டுமே வீடியோக்களை பரவாமல் தடுத்து அவற்றை அகற்றுவதற்கு வழிமுறைகளை வழங்க அதிகாரம் பெற்றது என்று சொன்னார்கள்.
அவர்கள் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி 48 மணி நேரத்திற்குள் அந்த காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவு போட்டார். மேலும் தீர்ப்பைப் பற்றி குறிப்பிடும் போது "அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நினைத்து நான் வருந்துகிறேன். அந்தப் பெண் வழக்கறிஞரை நேரில் சந்தித்து அவருக்கு தைரியம் அளிக்க விரும்புவதாக கனத்த குரலுடன் சொன்ன நீதிபதி கண்கலங்கி உணர்ச்சிவசப்பட்டார்.
மாலையில் அந்தப் பெண் வழக்கறிஞர் அந்த நீதிபதியை சந்தித்து தனக்கு ஏற்பட்ட அந்த கொடூர அனுபவத்தை நீதிபதியுடன் சொல்ல அவரும் அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்.
Leave a comment
Upload