தொடர்கள்
ஆன்மீகம்
ஆடி கிருத்திகை விழா துவக்கம்-மாலா ஶ்ரீ

20250612064024155.jpeg

‘அழகென்ற சொல்லுக்கு முருகா’ என்று பக்தர்களால் வணங்கி அழைக்கப்படும் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான். நூற்றாண்டு காலங்களுக்கு முன்னரே சான்றோர்களால் புகழப்பட்ட திருத்தணிகை மலையில் ஞானசக்தி, கிரியாசக்தி, இச்சாசக்தி ஆகிய 3 குணம் நிறைந்த வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணிய முருகப்பெருமான் காட்சியளிப்பதே தனிச் சிறப்பாகும்.

மேலும், இக்கோயிலில் வரும் 16-ம் தேதி ஆடி மாதப் பிறப்பைத் தொடர்ந்து, ஆடிக் கிருத்திகை விழா நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. இந்நாட்களில் திருத்தணி மலைக்கோயிலுக்கு காவடிகளுடன் வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இக்கோயிலில் ஆடி அஸ்வினி, பரணி கிருத்திகையைத் தொடர்ந்து 3 நாட்கள் சரவணபொய்கை திருக்குளத்தில் தெப்பத்திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

திருத்தணி முருகனின் தல வரலாறு:

முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் திருத்தணிகை மலையில், அசுரர்களின் தலைவன் சூரபத்மன் உள்பட அசுரர்களையும் முருகப்பெருமான் போரில் வதம் செய்து, இங்கு கோபம் தணிந்து அமர்ந்ததால், இது ‘தணிகை மலை’ எனப் போற்றப்படுகிறது. எல்லா முருகன் கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடந்தாலும், இங்கு மட்டும் புஷ்பாஞ்சலி நடைபெறுவது தனிச் சிறப்பு. ஆண்டின் ஒவ்வொரு நாளை குறிக்கும் வகையில், இங்கு சரவணப் பொய்கை குளத்திலிருந்து மலைக்கோயிலுக்குச் செல்ல 365 படிக்கட்டுகள் அமைந்துள்ளது.

இக்கோயிலில் ஒரு லட்சம் ருத்ராட்சை காய்களால் ஆன ருத்ராட்சை மண்டபம், முருகனின் வாகனமான மயிலுக்கு பதில் யானை கீழ்நோக்கி பார்த்தபடி இருப்பது சிறப்பாகும். மலையடிவாரத்தில், சரவணபொய்கை குளத்திலிருந்து முருகப்பெருமானின் அபிஷேகத்துக்கு குடங்களில் தீர்த்தம் எடுத்து செல்லப்படுகிறது. இங்கு கந்தசஷ்டி விழா, புஷ்பாஞ்சலி, தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு உள்பட திருப்படி திருவிழா, மாசி, சித்திரை பிரமோற்சவம், தீபாவளி, பொங்கல் உற்சவங்கள் தவிர, பிரதி கிருத்திகை, செவ்வாய்கிழமை ஆகிய நாட்களில் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

20250612064114431.jpg

கோயில் சேவைகள்:

மலைக்கோயிலில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்தே இருக்கும். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு தரிசன, அபிஷேக டிக்கெட், குடில்கள் முன்பதிவு வசதிகளை கோயில் நிர்வாகம் சிறப்பாகச் செய்துள்ளது. மேலும் உண்டியலில் காணிக்கை ஆன்லைன் மூலமும் செலுத்தும் வசதி செய்யப்பட்டு, கோயிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள இ-பாஸ் மெஷின் மூலமும் செலுத்தும் வசதி செய்து தரப்பட்டுள்ளது.

குற்ற சம்பவங்கள் தடுக்கும் வகையிலும் ஆங்காங்கே சிசிடிவி காமிரா கண்காணிப்பு அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் வழங்கப்படும் விபூதி, சந்தன பிரசாதங்கள், தீராத வியாதிகளைத் தீர்க்கும் அருமருந்தாக விளங்குகின்றன. பேச்சு குறைபாடுள்ள குழந்தைகளும் அவர்களின் பெற்றோரும் பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 மணிவரை) இக்கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்து, முருகப்பெருமானை வேண்டிக் கொண்டால் குறை தீர்ந்து நலம் பெறுவர் என்பது பக்தர்களது நம்பிக்கை.

திருத்தணியில் பக்தர்கள் எடுக்கும் காவடிகள் வித்தியாசமானது. நீண்ட குச்சியின் ஒரு முனையில் பூக்களும், மற்றொரு முனையில் அர்ச்சனை பொருட்களும் கட்டி காவடி எடுப்பது திருத்தணியில் மட்டுமே உள்ள வழக்கம். இக்கோயிலில் முடி காணிக்கை, எடைக்கு எடை நாணயம் வழங்கல், பொங்கல் படைத்தல், சுவாமிக்கு சந்தனக்காப்பு, பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் பால் அபிஷேகம், அன்னதானம் வழங்குவது, நெய்விளக்கு ஏற்றுதல், பால் குடம் எடுத்தல், காவடி எடுத்தல் ஆகியன்வை இத்தலத்தின் முக்கியமான பிரார்த்தனைகளாகும்.