தொடர்கள்
அனுபவம்
வேலையே செய்யாமல் சம்பளம். !! 12 ஆண்டு தகிடுதித்தம் - மாலா ஶ்ரீ

20250612063141851.jpg

மத்திய பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தை சேர்ந்த ஒரு வாலிபர், கடந்த 2011-ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தார். அவருக்கு போபால் போலீஸ் லைனில் பணி நியமனம் வழங்கப்பட்டது. அங்கு பணிக்கு சென்ற வாலிபரை, காவலருக்கான அடிப்படை பயிற்சி பெறவேண்டும் என்பதற்காக, சார் காவலர் பயிற்சி மையத்துக்கு அனுப்பி வைத்தனர். எனினும், அந்த வாலிபர் காவலர் பயிற்சி மையத்துக்கு செல்லாமல், எந்த அதிகாரிகளிடமும் தகவல் தெரிவிக்காமல், தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். அதன்பிறகும் அவர் முறையான காவலர் பயிற்சிக்கும் செல்லாமல், வீட்டிலேயே இருந்துள்ளார்.

எனினும், அந்த வாலிபர் சமயோசிதமாக, அவ்வப்போது தனது காவலர் பயிற்சி குறித்த விவரங்களை மட்டும் போபால் காவல்நிலைய உயர் அதிகாரிகளுக்கு விரைவு தபால் மூலம் தகவல் அனுப்பி வைத்துள்ளார். இதில் அவர், சாகர் காவலர் மையத்தில் பயிற்சி பெறுவது போல் குறிப்பிட்டு வந்துள்ளார். இதனால் அவரை காவல்துறை அதிகாரிகள் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அந்த வாலிபரை பயிற்சி மையத்தில் இருப்பதாகவே நினைத்தனர். இதனால் அவருக்கு முறையான மாதச் சம்பளம் வழங்கப்பட்டது.

அந்த வாலிபருக்கு இதேபோல் கடந்த 12 ஆண்டுகளாக வங்கிகள் மூலம் மாதந்தோறும் சம்பளம் சென்றிருக்கிறது. இந்த குட்டு கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி, அந்த வாலிபரும் காவல்துறை அதிகாரிகளிடம் வசமாகச் சிக்கினார். எப்படியெனில், கடந்த 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலருக்கான சம்பள உயர்வு குறித்த நடவடிக்கை தொடங்கியது. அப்போதுதான், அந்த வாலிபர் கடந்த 12 ஆண்டுகளாக காவலர் பணிக்கே வராமல்

ரூ.28 லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்தை பெற்றது காவல்துறை உயர் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணையில், தான் மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால்தான் பணிக்கு செல்லவில்லை என்று அந்த வாலிபர் கூறி, அதற்கான மருத்துவ சான்றிதழ்களையும் வழங்கியுள்ளார். அதை பரிசீலனை செய்த போலீசார், பணிக்கே வராமல் பெற்ற சம்பளத்தை திரும்ப செலுத்தும்படி வாலிபரிடம் தெரிவித்தனர். மேலும், அந்த வாலிபரை எச்சரித்து, மீண்டும் அவரை காவல்துறை பணியில் சேர்த்துக் கொண்டனர்.

தற்போதுவரை, அந்த வாலிபரிடம் வேலை செய்யாமல் கடந்த 12 ஆண்டுகளாக வாங்கிய ரூ.28 லட்சம் சம்பளத்தில் இருந்து இதுவரை ரூ.1.50 லட்சம் மட்டுமே பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள பணம், அவரது மாதச் சம்பளத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பிடிக்கப்படுகிறது. தற்போது அந்த வாலிபர், போபால் போலீஸ் லைன் காவல்நிலையப் பணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம ஒரு நாள் வேலைக்கு போகலைன்னாலே தேடுறாய்ங்க...12 ஆண்டுகள்.... இது பலே தில்லுமுல்லா இருக்கே !!