தொடர்கள்
கவர் ஸ்டோரி
பகவத் கீதை படித்தாலே போதும் - ஹாங்காங்கில் சுவாமி ஸ்வரூபானந்தா - ராம்

20260506062148253.jpg

ஹாங்காங் ஒரு வணிக நகரம். சாலைகளில் எந்த இடத்தில் பார்த்தாலும் மக்கள் காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு ஏதோ ஒரு இலக்கை நோக்கி விறுவிறுப்பார்கள்.

ஹாங்காங் வாழ் இந்தியர்களும் விதிவிலக்கல்ல. ஊர் அப்படி.

உலககெங்கும் புலம் பெயர் இந்தியர்களுக்கு அவர்களின் வேரைத் தேடி செல்லும் வார இறுதிகள் முக்கியமானவை.

அதிலும் அடுத்த சந்ததிகளுக்கு தங்கள் கலாச்சாரத்தை கொண்டு செல்லும் அவஸ்தை அலாதியானது.

பல சமய அமைப்புகள் இந்த இடத்தில் உதவிக்கு வருகின்றன. ஹாங்காங் சின்மயா மிஷன் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சமீபத்தில் ஹாங்காங்கில் ஆயிரத்து ஐநூறு பேருக்கும் மேல் இணைந்து 11 முறை அனுமன் சாலிசா பாடி ஒரு மகா யஞ்யம் ஒரு பிரம்மாண்டமான இடத்தில் நடைபெற்றது.

ஹாங்காங்கில் நடைபெற்ற ஹனுமன் சாலிசா மகா யஞ்யத்தில் வீடியோ இங்கே...

ஹாங்காங் போன்ற ஒரு குட்டி நகரில் இத்தனை பேர் கூடுவதற்கான இடம் கிடைப்பது சுலபமல்ல. அதை திறம்பட செய்து காட்டியது சின்மயா மிஷன்.

இதற்கு பின்னணியில் அனுமதி வாங்குவதிலிருந்து ஒரு சின்ன பிசகில்லாமல் இதை நடத்தி காட்டியது வரை ஹாங்காங் சின்மயா மிஷனின் உழைப்பு திட்டமிடல் அசாத்தியமானது.

சின்மயா மிஷன் (Chinmaya Mission) அமைப்பின் 75-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் விதமாக இந்த மகா யஞ்யம் ஹாங்காங்கில் ஒருங்கிணைக்கப்பட்டது. "பிரார்த்தனை ஹாங்காங் அமைதி ஹாங்காங்" (Chant Hong Kong, Shant Hong Kong) என்ற உன்னத நோக்கத்துடன் இந்த கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

20260506062852677.jpeg

சின்மயா மிஷனின் உலகளாவிய தலைவர் சுவாமி ஸ்வரூபானந்தா (Swami Swaroopananda)அவர்களின் முன்னிலையிலும் ஆசியுடனும் இந்த ஆன்மீகக் கூடுகை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒன்றிணைந்து, ஒரே குரலில் ஹனுமான் சாலிசாவை 11 முறை கூட்டுப் பிரார்த்தனையாகப் பாடினர்.

மைதானத்தில் 21 புனித பீடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 'அல்டார் ஆபரிங்' (Altar Offering Experience) முறையில், ஒவ்வொரு ஹனுமான் சாலிசா பாராயணத்தின் போதும் பக்தர்கள் முன்வந்து பீடங்களில் தங்களின் தனிப்பட்ட சிறப்பு வழிபாட்டையும் பிராத்தனைகளையும் செலுத்தினர். இது ஹாங்காங்கிர்கு புதுசு.

20260506063357519.jpeg

பாராயணத்தின் போது பக்திப் பாடல்களும் (Bhajans) வாத்திய இசையும் முழங்க, மைதானம் முழுவதும் நேர்மறை ஆற்றலும் பக்தி அதிர்வுகளும் நிறைந்திருந்தன.

குடும்பத்தோடு வந்திருந்த பக்தர்களின் வசதிக்காகக் குழந்தைகளுக்கென்று தனியாக 'கிட்ஸ் கார்னர்' (Kids' Corner) அமைக்கப்பட்டிருந்தது. அங்கு ஆன்மீகக் கதைகள், விளையாட்டுகள் மற்றும் கைவினைப் பயிற்சிகள் மூலம் குழந்தைகள் உற்சாகமாக வைக்கப்பட்டனர்.

கூட்டுப் பிரார்த்தனைக்கு அசாத்திய வலிமை உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில், ஹாங்காங் வாழ் இந்தியர்களும் பிற நாட்டு ஆன்மீக அன்பர்களும் சாதி, மத பேதமின்றி இந்த மகா ஹனுமான் சாலிசா யஞ்யத்தில் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக சுட்டெரிக்கும் வெயிலில் வியர்வையை பொருட்படுத்தாமல், பொறுமையாக பக்தர்கள் கலந்து கொண்டது வியப்பான விஷயம் தான்.

20260506063658561.jpeg

இந்த மஹா ஹனுமன் சாலிசாவிற்காக வந்திருந்தார் சின்மயா மிஷனின் தலைவர் சுவாமி ஸ்வரூபானந்தா.

அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு.

சுவாமி ஸ்வரூபானந்தா அவர்கள் வணிகக் குடும்பப் பின்னணியில் வளர்ந்தவர். ஆரம்பத்தில் சின்மயா மிஷனின் தூண்களான பூஜ்ய சுவாமி சின்மயானந்தா மற்றும் சுவாமி தேஜோமயானந்தா ஆகியோரின் ஆன்மீகச் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார்.

இவர்களின் வழிகாட்டுதலால், தன் வெற்றிகரமான வணிகப் பாதையைத் துறந்து, மும்பையில் உள்ள 'சின்மயா சந்தீபனி சாதனாலயா' ஆசிரமத்தில் தீவிர

வேதாந்தப் படிப்பை மேற்கொண்டார். 1984 ஆம் ஆண்டில் ஆன்மீகப் பணியில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார்.

சின்மயா மிஷனின் முந்தைய தலைவரான சுவாமி தேஜோமயானந்தா அவர்களுக்குப் பிறகு, 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுவாமி ஸ்வரூபானந்தா சின்மயா மிஷனின் உலகளாவிய தலைவராக (Head of Chinmaya Mission Worldwide) பொறுப்பேற்றார்.

இவரின் தலைமையின் கீழ் சின்மயா மிஷன் உலகளவில் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் கல்வி, ஆன்மீகம் மற்றும் சமூகச் சேவைகளில் தொடர்ந்து மிகச்சிறப்பாகச் செயலாற்றி வருகிறது.

சுவாமி ஸ்வரூபானந்தா அவர்களின் சொற்பொழிவுகள் மிகவும் தர்க்கரீதியாகவும், நவீன கால வாழ்வியலுக்குப் பொருந்தும் வகையிலும் இருக்கும்.

பகவத் கீதை, உபநிடதங்கள் மற்றும் ஆதிசங்கரரின் நூல்களுக்கு இவர் அளிக்கும் விளக்கங்கள், ஆன்மீகத்தை ஒரு தத்துவமாக மட்டுமல்லாமல், அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு நடைமுறை வழிகாட்டியாக மாற்றுகின்றன குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்களின் மேலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஆன்மீக கருத்துக்களையும் மன அமைதிக்கான மேலாண்மைத் திறன்களையும் (Stress Management & Leadership) கொண்டு சேர்ப்பதில் இவர் வல்லவர்.

சின்மயா மிஷனின் உலகளாவிய தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, இவர் சின்மயா சர்வதேச குடியிருப்புப் பள்ளியின் (CIRS - Coimbatore) இயக்குநராகப் பணியாற்றினார். மேலும், சின்மயா மிஷனின் தூதுக்குழு மையங்களை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் தூரக் கிழக்கு நாடுகளில் (Far East countries) வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார்.

"நம்முடைய உண்மையான பலம் வெளியில் இல்லை, நமக்குள் இருக்கும் ஆத்ம சக்தியில்தான் உள்ளது" என்ற தத்துவத்தை மையமாகக் கொண்டு உலகெங்கும் அமைதியையும், அன்பையும் விதைத்து வரும் ஒரு மாபெரும் ஆன்மீக வழிகாட்டியாக சுவாமி ஸ்வரூபானந்தா விளங்குகிறார்.

20260506063815218.jpeg

இவரது வழிகாட்டலில் ஹாங்காங் சின்மயா மிஷனை பொறுப்பேற்று நடத்தி வருபவர் சுவாமினி சுப்ரியானந்தா.

சுவாமி சுப்ரியானந்தா அவர்கள் சின்மயா மிஷனின் வேதாந்த நெறிகளால் ஈர்க்கப்பட்டு, அதன் பாரம்பரிய ஆசிரமப் பயிற்சியின் மூலம் முறையான ஆன்மீகக் கல்வியைப் பெற்றவர். சின்மயா மிஷனின் உலகளாவிய தலைவர் சுவாமி ஸ்வரூபானந்தா மற்றும் முந்தைய மூத்த ஆச்சார்யார்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆன்மீகப் பாதையில் தடம் பதித்தார். ஹாங்காங்கில் வாழும் இந்திய வம்சாவளியினர், குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் குடும்பங்கள், தங்களின் கலாச்சார மற்றும் ஆன்மீக வேர்களைத் தக்கவைத்துக் கொள்ள இவர் தொடர்ந்து பல்வேறு வகுப்புகளையும் ஆன்மீகக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான வகுப்புகள்: சின்மயா மிஷனின் புகழ்பெற்ற 'பால விஹார்' (Bala Vihar) மற்றும் 'யுவ கேந்திரா' (CHYK) அமைப்புகளின் மூலம் ஹாங்காங்கில் உள்ள குழந்தைகளுக்குப் பக்தி, நன்னெறி மற்றும் இந்தியப் பண்பாட்டைக் கற்பிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். பகவத் கீதை மற்றும் உபநிடத வகுப்புகள்: பெரியவர்களுக்காக எளிய ஆங்கிலத்தில் பகவத் கீதை, தத்துவ நூல்கள் மற்றும் தியான வகுப்புகளை வாராந்திர அடிப்படையில் ஹாங்காங்கில் நடத்தி வருகிறார். நவீன உலக சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இவருடைய ஆன்மீக விளக்கங்கள் அமைகின்றன. ஹாங்காங்கில் உள்ள வெஸ்ட் கவுலூன் கலாச்சார மாவட்டத்தில் (WestK) பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட 'மகா ஹனுமான் சாலிசா யஞ்யம்' போன்ற பிரம்மாண்டமான ஆன்மீக விழாக்களையும், சமூக நலத்திட்டங்களையும் முன்னின்று வெற்றிகரமாக ஒருங்கிணைத்த பெரும் பங்கு இவருடையது தான்.

இந்த மகா யாகத்தை முன்னிட்டு ஹாங்காங் வந்த சுவாமி சுப்ரியானந்தா மூன்று நாட்கள் பிரத்யேகமாக பக்தர்களிடையே சொற்பொழிவாற்றினார்.

20260506064131958.jpeg

அதில் கேள்வி பதில் பகுதிகளும் அடக்கம்.

சில முக்கியமான கேள்விகளுக்கு அவர் அளித்த பதில். (மொத்த வீடியோவும் ஆங்கிலத்தில் இங்கே இருக்கிறது.)

fireside Chat என்ற நிகழ்ச்சியில் சுவாமி ஸ்வரூபாந்தாவின் கேள்வி பதில்..முழு வீடியோ...

கே: கோவிலுக்கு செல்லும் போது குழந்தைகள் வர மாட்டேன் என்கிறார்கள். அவர்களை வற்புறுத்தி அழைத்துச் செல்லலாமா ???

சுவாமி: எந்த வயது குழந்தைகள் என்பதை பொறுத்து தான் பதில் சொல்ல முடியும். எனக்கு ஒன்று சொல்லுங்கள் நீங்கள் சொன்ன உடன் எந்த குழந்த எதை தான் உடனடியாக செய்கிறார்கள். அவர்களுக்கு கவனமெல்லாம் வேறு எங்காவது தான் இருக்கும்.

பரதநாட்டிய வகுப்போ அல்லது செஸ் வகுப்போ அல்லது இசைப் பயிற்சியோ உங்களுடைய உந்துதலால் தானே அவர்கள் கற்க துவங்குகிறார்கள்.

அது போலவே தான் கோவிலுக்கும். வர மாட்டேன் என்றவுடன் சரி பரவாயில்லை என்று விட்டு வருவது சரியல்ல. ஒரு ஜெண்டில் புஷ், ஒரு மென்மையான அழுத்தக் கொடுக்க வேண்டியது அவசியம்.

சிறு வயதில் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்ய எதிர்பார்க்காதீர்கள். இங்கு வந்து விளையாடாட்டும். பின்னர் வயதாக வயதாக அவர்களுக்கு நாட்டம் வரும். அழைத்து வரவேயில்லை என்றால் அது தான் பிரச்சினை.

கே: சுவாமி, ஒரு இஸ்லாமியருக்கு குரான் இருக்கிறது. ஒரு கிறிஸ்துவருக்கு பைபிள் இருக்கிறது. ஆனால் ஒரு இந்துக்கு ஒரு லைப்ரரியே இருக்கிறது ஏராள சமய நூல்கள், வேதம், உபநிஷத்துக்கள், ஸ்மிரிதி இப்படி எண்ணற்ற நூல்கள் இருக்கிறது. எப்படி ஒரு இந்துவால் அத்தனையும் படிக்க முடியும். எப்பொழுதுமே முழுமையாக சமய நூல்கள் படிக்கவில்லையே என்று குற்ற உணர்ச்சி இருக்கிறதே.. ????

சுவாமி : யார் சொன்னார்கள் இப்படி. பகவத் கீதை படியுங்கள். இதில் அத்தனை வேதத்தின் உபநிஷத்துக்களின், சமய நூல்களின் சாரம் இருக்கிறது.

அடுத்த முறை யாரேனும் உங்களிடம் உங்கள் சமய நூல் என்னவென்றால் பகவத் கீதை என்று தைரியமாக சொல்லுங்கள். பகவத் கீதை படித்தால் மட்டுமே போதும்.

இந்தியர்கள் இந்துக்கள் இந்த விஷயத்தில் ஒன்று பட்டு கற்றுக் கொண்டு அனைவரும் ஒரு ஐந்து ஸ்லோகங்களாவது சொல்ல வேண்டும்.

அமெரிக்காவிற்கு சென்ற போது ஒரு பல்கலைக் கழத்தில் அவரவரர் கலாச்சாரத்திற்கேற்ப ஏதேனும் ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்ற போது இந்திய வம்சாவளியினருக்கு மட்டும் எதுவும் சொல்லத் தெரியவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

கீதையிலிருந்து இந்த ஐந்து ஸ்லோகங்கள் அனைவரும் சொல்லியே ஆக வேண்டும்.

சுவாமி ஸ்வரூபானந்தா ஹாங்காங்கில் உரையாற்றிய அத்தனை சொற்பொழிவுகளிலும் இதைத் தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

பகவத் கீதையின் அந்த ஐந்து முக்கிய ஸ்லோகங்களையும், அவற்றின் சமஸ்கிருத உச்சரிப்பு மாறாமல், நீங்கள் எளிதாகப் படிக்கும் வகையில் அப்படியே தமிழில் (Transliteration) கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

சின்மயா வலியுறுத்தும் ஐந்து கீதை ஸ்லோகங்கள்

1. கர்மண்யேவாதிகாரஸ்தே... (அத்தியாயம் 2, ஸ்லோகம் 47)

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன | மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோஸ்த்வகர்மணி ||

2. யதா யதா ஹி தர்மஸ்ய... (அத்தியாயம் 4, ஸ்லோகம் 7)

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத | அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம் ||

3. பத்ரம் புஷ்பம் பலம் தோயம்... (அத்தியாயம் 9, ஸ்லோகம் 26)

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி | ததஹம் பக்த்யுபஹ்ருதமஷ்நாமி ப்ரயதாத்மனஃ ||

4. அநந்யாஸ்சிந்தயந்தோ மாம்... (அத்தியாயம் 9, ஸ்லோகம் 22)

அநந்யாஷ்சிந்தயந்தோ மாம் யே ஜனாஃ பர்யுபாஸதே | தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகக்ஷேமம் வஹாம்யஹம் ||

5. ஸர்வ தர்மான் பரித்யஜ்ய... (அத்தியாயம் 18, ஸ்லோகம் 66)

ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாமேகம் ஷரணம் வ்ரஜ | அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷுசஃ ||

இந்த ஸ்லோகங்களைத் தமிழ் எழுத்து வடிவில் படிக்கும் போது, வடமொழி ஒலிகளை (க்ஷ, ஷ, ஸ, ஹ, ஃ) சரியாக உச்சரித்துப் பாடினால் அதன் முழுமையான அதிர்வையும் அமைதியையும் உணர முடியும்.

அதற்கான ஒலி வடிவும் இங்கே.

2026050606485538.jpeg

(படம் ; பரத் கேம்லானி)

சுவாமி ஸ்வரூபானந்தாவிடம் ஆட்டோகிராஃப் போட்டு ஒரு புத்தகத்தை வாங்கிய போது, இந்தியாவில் டெல்லியில் பாரத் மண்டபத்தில் அக்டோபர் 23 முதல் 25 வரை சுவாமி சின்மயா மிஷனின் 75 வது ஆண்டை முன்னிட்டு ஒரு பிரம்மாண்ட சத்சங் நடக்கிறது தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரத்யேக அழைப்பு விடுத்தார்.

என்னென்ன நிகழ்ச்சிகள் இருக்கும் என்று கேட்டதற்கு இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் போரடிக்காமல் அற்புதமாக நிகழ்ச்சிகள் அமையப் பெறும். உடனடியாக பதிவு செய்து அனைவரும் வாருங்கள் புரியம் என்று புன்னகைத்தார்.

அக்டோபருக்கு காத்திருப்போம்.