
சென்னை, திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுமார் 450 ஆண்டுகள் பழமையான கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் ஒரு ஆங்கிலேய அதிகாரியின் தாராள மனதுக்கும் அவரது உதவியாளரின் தீவிர விஷ்ணு பக்திக்கும் மிகச்சிறந்த வரலாற்றுச் சான்றாகத் திகழ்கிறது.
இக்கோயிலில் உள்ள மூலவர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மூலவர் திருமேனியைப் போன்றே, மிகக் கம்பீரமாக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
வீரராகவாச்சாரியாரின் தீவிர பக்தி:
18-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (சுமார் 1717-1720 CE), சென்னை மாகாணத்தின் கவர்னராகவும் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியாகவும் ஜோசப் கோலட் என்பவர் இருந்தார். இவரிடம் மொழிபெயர்ப்பாளராகவும், நம்பிக்கைக்குரிய முகவராகவும் வீரராகவாச்சாரியார் என்ற தீவிர விஷ்ணு பக்தர் பணிபுரிந்து வந்தார். அவர் தினமும் காஞ்சிபுரம் சென்று அங்குள்ள வரதராஜ பெருமாளையும், பவளவண்ண பெருமாளையும் தரிசித்த பிறகே தனது அன்றாடப் பணிகளைத் தொடங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். வீரராகவாச்சாரியார் காஞ்சிபுரம் சென்று வருவதால் சில நேரங்களில் அலுவலகத்திற்குக் காலதாமதமாக வரநேரிட்டது.
கோலட்துரை கட்டிய கோயில்:
வீரராகவாச்சாரியார் தினந்தோறும் காஞ்சிபுரம் சென்று வருவதைப் பார்த்த கோலட்துரை, அவரின் உண்மையான பக்தியைக் கண்டு வியந்து போனார். அதனால் அவர் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே காஞ்சி வரதராஜ பெருமாளைப் போன்றே ஒரு கோவிலைக் கட்டிக் கொடுக்க முன்வந்தார்.

அதன்படி, நெசவாளர்கள் மற்றும் துணிகளில் ஓவியம் வரையும் கலைஞர்களை திருவொற்றியூர் பகுதிக்கு அருகே குடியேற்றி, 1718-ஆம் ஆண்டிற்குள் ஒரு புதிய நகரை உருவாக்கினார்.
அந்தப் பகுதிக்கு கோலட்பேட்டை என்று பெயரிட்டு, இதுவே காலப்போக்கில் மருவி காலடிப்பேட்டை என மாறியது.
அங்குக் காஞ்சிபுரம் மூலவர் வரதராஜ பெருமாளைப் போன்றே சிலை பிரதிஷ்டை செய்து, வரதராஜ பெருமாள் கோவில் கட்டப்பட்டது. காஞ்சிபுரத்தின் உற்சவர் அழகில் ஈர்க்கப்பட்டு வீரராகவாச்சாரியார் மீண்டும் அங்குச் சென்றதால், ஆளுநர் கோலட் துரை காஞ்சிபுரத்தைப் போன்றே இருக்கும் பவளவண்ண பெருமாள் உற்சவர் சிலையையும் இக்கோயிலுக்குக் கொண்டு வர ஏற்பாடு செய்தார் என்றொரு வரலாறும் கூறப்படுகிறது.

இந்த கோவில் கட்டப்பட்ட பிறகு அதன் தினசரி வழிபாட்டுச் செலவுகளுக்காக, அந்தப் பகுதியில் நடக்கும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகத்தில் சிறிய அளவிலான வரியை வசூலித்துக் கொள்ள கோலட் துரை அனுமதி அளித்தார். ஒரு பிரிட்டிஷ் ஆளுநர் தனது இந்து உதவியாளரின் ஆன்மீகப் பற்றை மதித்து, ஒரு பெருமாள் கோயில் உருவாகக் காரணமாக இருந்த இந்த நிகழ்வு, மத நல்லிணக்க வரலாற்றுக்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வீரராகவாச்சாரியாருக்குப் பின் அவரது குடும்பத்தினர் இக்கோவிலை நிர்வகித்து வந்தனர். தற்போது இக்கோவில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இக்கோயிலின் சிறப்பம்சங்கள்:
இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் நான்கு கரங்களுடன் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். காஞ்சி வரதராஜ பெருமாளின் அதே உருவ அமைப்பை இங்கும் தரிசிக்கலாம்.
மூலவருக்கு இடப்புறம் தாயார் பெருந்தேவி தாயார் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

பெருமாள் சந்நிதிக்கு வலதுபுறத்தில் ஆண்டாள் நாச்சியாருக்கான தனி சந்நிதி உள்ளது. கோயிலின் உள் பிராகாரத்தில் ஸ்ரீராமர், சக்கரத்தாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் ஆகியோருக்குத் தனித்தனி சந்நிதிகள் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன.
பொதுவாகப் பெருமாள் கோயில்களில் நவகிரக சந்நிதிகள் இருக்காது. ஆனால் இக்கோயிலின் பிரகாரத்தில் தாமரை இதழ் வடிவ வட்ட பீடத்தில் ஒன்பது கிரகங்களும் அருள்பாலிக்கும்படி தனித்துவமான நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது.
இங்குள்ள உற்சவர் பவளவண்ணப்பெருமாள் மிகவும் பிரசித்தி பெற்றவர். இவர் இடது கையில் தண்டம் வைத்தபடி காட்சி தருகிறார்.

திருவிழாக்கள்:
சித்திரையில் இராமானுஜர் விழா, வைகாசியில் பிரம்மோற்சவம், கிருஷ்ண ஜெயந்தி, மாசிமகம், பங்குனி உத்திரம், இராமநவமி போன்றவை இங்கு வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்கள்.

வழிபாட்டுப் பலன்:
திருமணத்தடை நீங்கவும், குடும்ப ஐஸ்வர்யம் பெருகவும் இத்தலத்துப் பெருமாளுக்கும், தாயாருக்கும் விசேஷ திருமஞ்சனம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பக்தர்களுக்குத் திருமண வரத்தை வழங்குவதால் இத்தலத்துப் பெருமாள் “கல்யாண வரதராஜப்பெருமாள்” என்று அழைக்கப்படுகிறார்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினமும் காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சனிக்கிழமைகள் மற்றும் விசேஷ திருவிழா நாட்களில் வழிபாட்டு நேரங்கள் மாறுபடலாம்.

எப்படிச் செல்வது:
சென்னை எக்மோர் இருந்து 12 கி.மீ., சென்ட்ரலில் இருந்து 7 கி.மீ., கோயம்பேட்டில் இருந்து 22 கி.மீ., தூரத்தில் திருவொற்றியூர் இருக்கிறது. எலக்ட்ரிக் ட்ரெயினில் பீச் ஸ்டேஷன் சென்று அங்கிருந்து பஸ்சில் செல்லலாம். இங்குள்ள காலடிப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு நடந்தும் செல்லலாம். நேரடி பஸ் வசதியும் உள்ளது.

Leave a comment
Upload