அலாவுதீன் கில்ஜி...
அமலுக்கு வந்த மதுவிலக்கு!

ராணி முல்லிக் ஜஹான் எச்சரித்ததையும் அமைச்சர் அஹமது ஹபீப் வெளிப்படுத்திய கவலையையும் அலட்சியப்படுத்தினார் சுல்தான் ஜலாலுதீன் கில்ஜி. மகாராணியும் மந்திரியும் பயந்தபடியே விபரீதம் நிகழ்ந்தது. சுல்தான் பாசத்துடன் வளர்த்த கடா முதுகில் பாய்ந்து அவர் உயிரையே குடித்த கொடுமை பற்றி காஸிம் ஃபெரிஷ்டா போன்ற பல வரலாற்று ஆசிரியர்கள் வேதனையுடன் குறிப்பிடுகிறார்கள்.
சுல்தான் ஜலாலுதீன் தலை கீழே துண்டிக்கப்பட்டு வீழ்ந்தவுடன் உடனடியாக அலாவுதீன் படை டெல்லியை நோக்கி வேகமாக முன்னேறியது. செய்தி கேள்விப்பட்ட ராணி முல்லிக் ஜஹான், அவைப் பெரியவர்களிடம் ஆலோசனை செய்யாமல் தப்பாகக் காய் நகர்த்தினார். தன் மகன் ருக்னுதீன் இப்ராஹிமை அவசர அவசரமாகத் தூக்கிக்கொண்டு வந்து அரியணையில் அமர்த்தினார். ஆம், தூக்கிக் கொண்டுதான். காரணம் - இப்ராஹிம் பத்து வயது நிரம்பாத பாலகன்!
முல்தான் பிரதேசத்தின் நிர்வாகத்தை ஏற்றிருந்த மூத்த மகன் ஆர்காலிகான் நல்ல வீரர். அவரை உடனடியாக ராணி அழைத்திருந்தால் அலாவுதீனைச் சற்றேனும் சமாளித்திருக்கலாம். ஆனால், தன் செல்வாக்குப் போய்விடுமோ என்று ராணி அச்சப்பட்டாரோ என்னவோ, ஒரு குட்டிப் பையன் தலையில் அசந்தர்ப்பமான சூழ்நிலையில் மகுடம் ஏறியது. தொடர்ந்து தன் படை வீரர்களைப் பார்த்து, “அந்தத் துரோகி அலாவுதீனை விரட்டி அடியுங்கள்” என்று விஷயம் புரியாமல் ஆணையிட்டாள் ராணி முல்லிக் ஜஹான்.
எதிர்க்கப் போகிறார்கள் என்று தகவல் வந்தவுடன் “எல்லோரையும் வெட்டித் தள்ளிவிட்டு அரண்மனைக்குள் செல்வோம் சுல்தான்” என்று அலாவுதீனின் தளபதிகள் பரபரத்தனர். “அவசரம் வேண்டாம். அரண்மனைக்குள்ளே மந்திரிப் பிரதானிகளும் வெளியே மக்களும் நம்மீது ஏகமான எரிச்சலில் இருக்கிறார்கள். இத்தனை வெறுப்புக்கு நடுவே அரண்மனைக்குள் போய் நான் நிம்மதியாகத் தூங்க முடியாது. எதற்கும் கூடாரம் அமைத்து ஓய்வெடுப்போம். வேடிக்கை பாருங்கள். வாளை . உயர்த்த வேண்டிய அவசியம் இருக்காது. என்றே நினைக்கிறேன்!” என்றார் அலாவுதீன் விஷமப் புன்னகையோடு.
உடனடியாகக் கூடாரங்கள் பூத்தன. அமரிக்கையாக அமர்ந்து மற்றவர்களுடன் மதுக்கோப்பையுடன் சிறிது நேரம் ஓய்வெடுத்த அலாவுதீன், தன் மெய்க் காவலனை அழைத்து “தங்க நாணயங்கள், நகைகள், வைர, வைடூரியங்கள் கொண்ட நூற்றுக்கணக்கான மூட்டைகளில் ஒன்றில் தங்க உருண்டைகள் இருக்கும். அந்த மூட்டையைக் கொண்டுவா. கூடவே ஒரு உண்டி வில்!” என்று ஆணை பிறப்பித்ததைக் கண்டு தளபதிகள் ஒன்றும்புரியாமல் விழித்தனர். பிறகுதான் அந்த அதிசயம் நடந்தது!

ஒரு மூட்டையைத் திறக்கச் செய்த அலாவுதீன் ஒவ்வொரு தங்க உருண்டையாக எடுத்தார். அவற்றை உண்டி வில்லில் பொருத்தி அரண்மனையை நோக்கி எய்ய ஆரம்பித்தார். அரண்மனைப் படை வீரர்கள் மத்தியிலும் மக்கள் பகுதியிலும் ‘விர்’ரென்று தங்க உருண்டைகள் ஜொலித்தவாறு பறந்து சென்று விழுந்தன. சில விநாடிகளில் எதிர் தரப்பில் களேபரம்! வாட்களை வீசியெறிந்து விட்டு ராணியின் படை வீரர்கள் ஓடிவந்து தங்க உருண்டைகளைப் பொறுக்க ஆரம்பித்தார்கள். மக்களும் ஆர்வத்துடன் இந்தச் சேகரிப்பில் சேர்ந்துகொண்டனர்.
‘வந்திருப்பவர் எதிரியல்ல, வள்ளல்!’ என்ற செய்தி மின்னல் வேகத்தில் பரவியது!
பிறகென்ன?!
ஒட்டுமொத்தமாக அரண்மனைப்படை, அலாவுதீன் பக்கம் கட்சி மாறியது! நிராதரவான ராணி முல்லிக் ஜஹான், தன் மூத்த மகன் ஆர்காலிகான் தங்கியிருந்த முல்தான் பிரதேசத்துக்கு ஓட வேண்டி வந்தது.
இப்படியாக, ஒரு துளி வியர்வைகூடச் சிந்தாமல் கம்பீரமாக ஆஸ்தான மண்டபப் படிகளேறி அரியணையில் அமர்ந்தார் அலாவுதீன் கில்ஜி! முடிசூட்டு விழா நடந்தது - அக்டோபர் 3, கி.பி. 1296.
அமர்ந்த கையோடு தன் நெருக்கமான விரர்களை அழைத்த அலாவுதீன் கில்ஜி, “இப்ராஹிம் சுல்தானைக கைவிட்டுவிட்டு நம்மிடம் வந்த முக்கிய அமைச்சர்கள், தளபதிகளை உடனே தீர்த்துக்கட்டுங்கள். இப்படிக் கட்சி மாறும் துரோகிகள் எப்போதுமே ஆபத்தானவர்கள்!” என்று ஆணையிட்டார். அலாவுதீன் பக்கம் ஆவலுடன் வந்து சேர்ந்த அத்தனை பேரும் பரலோகம் அனுப்பி வைக்கப்பட்டார்கள்!
முல்தான் நாட்டுக்கு ஓடிய அரச குடும்பத்தையும் சுல்தான் மறக்கவில்லை. மன்னிக்கவுமில்லை. ஜாபர்கான் என்ற தளபதியின் தலைமையில் அலாவுதீன் அனுப்பிய படை கிளம்பிச் சென்று அவர்களைச் சிறைபிடித்தது. ஆர்காலிகானும் இளம் இப்ராஹிமும் கொல்லப்பட்டனர்.
இதுபோன்ற விஷயங்களில் அலாவுதீன் உச்சக்கட்ட கொலை வெறியுடன் நடவடிக்கை எடுப்பதில் இரக்கப்பட்டதேயில்லை. மிக மிக நெருங்கிய விசுவாசிகளைத் தவிர யாரையும் அவர் நம்பியதும் இல்லை... விட்டுவைத்ததுமில்லை!
வஞ்சகம் மட்டுமல்ல... வீரமும் ஏராளமாக இருந்தது அலாவுதீனுக்கு. கிளர்ந்தெழுந்த பல சிற்றசர்கள், சுல்தானின் வாள்வீச்சில் ஓட்டமெடுத்தார்கள். எனினும், மங்கோலியர் பிரச்னைதான் தொடர்ந்து தலைவலி தந்தது. இந்தியாவுக்குள் புகுந்த ஒரு பெரும் மங்கோலியப் படையை அலாவுதீனின் தளபதியான ஜாபர்கான் தலைமையில் கிளம்பிய படை இன்றைய பஞ்சாப், ஜலந்தர் அருகில் எதிர்கொண்டு புரட்டியெடுத்துவிட்டது. ஒரு வருடம் கழித்து ஆவேசத்துடன் மறுபடியும் மங்கோலியர்கள் வருகை தந்தார்கள். இம்முறையும் ஜாபர்கான்முன் தாக்குப்பிடிக்க முடியாமல் மாற்றார்கள் ஓட்டமெடுத்தார்கள்.
ஓராண்டு கழித்து கி.பி.1299-ல் குத்லூஹ்கான் என்ற பெரும் வீரன் தலைமையில் மங்கோலியர்கள் விடாப்பிடியாக டெல்லி எல்லையில் புகுந்தார்கள். எதிர்ப்பட்ட சுல்தான் படையின் தலைமையில் ஜாபர்கானைப் பார்த்தவுடன் “மறுபடியும் இந்தத் தளபதியா..?!” என்று மங்கோலியர்களுக்கு வெறுத்துவிட்டது. ஒரு ‘தனி நபர் அரணாக’ நின்று வீரப் போர் புரிந்தார் ஜாபர்கான். அவர் தலைமையில் மற்ற வீரர்களும் பிரமாதமாக வாள் சுழற்றினார்கள். அப்போது தந்திரமாக ஒளிந்திருந்த எதிரிப் படையின் இன்னொரு பகுதி, பின்புறமாக வந்து சூழ்ந்துகொள்ள... மங்கோலிய வியூகத்தில் சிக்கினார் ஜாபர்கான்...
ஒரு விநாடி திகைத்த ஜாபர்கானுக்கு நிலைமையின் விபரீதம் புரிந்தது. மறுகணம், குதிரையில் அமர்ந்திருந்த அந்த வீரரின் வாள் நாலாபுறமும் அனாயாச வேகத்தில் சுழல, ஆயிரக்கணக்கில் சூழ்ந்துகொண்ட மங்கோலியப்படை வீரர்களால் ஜாபர்கானை நெருங்க முடியவில்லை! திணறிப் போன குத்லூஹ்கான் “முதலில் அந்தக் குதிரையைக் கொன்று தள்ளுங்கள்!” என்று அலறினார். தன் எஜமானனுக்காக ஆவேசமாக ஒத்துழைத்த அந்த அற்புதமான குதிரை மீது ஏராளமான ஈட்டிகள் பாய்ந்தன. செத்து வீழ்ந்தது அந்த விசுவாசமான குதிரை. சமாளித்து எழுந்து நின்ற ஜாபர்கானின் வாளையும் ஒரு ஈட்டி வீழ்த்தியது.
வாட்போரில் மட்டுமல்ல... வில்வித்தையிலும் தேர்ந்தவர் ஜாபர்கான். ஒரு வில்லை எடுத்துக்கொண்டு, விடாமல் போரைத் தொடர்ந்தார் அவர். அவரிடமிருந்து சீறிப்பாய்ந்த அம்புகள் மங்கோலியர்களைச் சிதற அடித்தன.
குத்லூஹ்கான் பிரமித்துப் போனான். குரலை உயர்த்தி “ஜாபர்கான்... நீ ஒரு மாவீரன். நீ இறப்பதை நான் விரும்பவில்லை. தயவு செய்து சரணடைந்துவிடு. தனிப்பட்ட முறையில் உன்னை நான் என் நண்பனாக ஏற்றுக்கொள்ளத் தயார்!” என்று அறிவித்தான்.
“தளபதி என்கிற முறையில் என் பணியைச் செய்யும்போது மரணம் நிகழந்தால் அதைவிடப் பெருமை எனக்குக் கிடைக்காது!” என்று ஜாபர்கானிடமிருந்து பதில் வந்தது.
அதற்கு மேலும் பொறுக்கமாட்டாத மங்கோலியத் தளபதி குத்லூஹ்கான், லேசாகக் கலங்கிய கண்களுடன் தலையசைக்க, நூற்றுக்கணக்கான மங்கோலிய வீரர்கள் ஏக காலத்தில் பாய்ந்து, கடைசி விநாடி வரை தன் தலைவன் அலாவுதீன் கில்ஜிக்காகப் போரிட்ட ஜாபர்கான் என்ற அந்த மாவீரரை வெட்டிச் சாய்த்தார்கள்.
ஜாபர்கானின் வீரத்தைப் பார்த்துத் திகைத்துப் போன மங்கோலியர்கள் என்ன நினைத்தார்களோ, அந்த வீரத் தளபதி வீழ்ந்த பிறகு எதிரிப்படை ஏனோ திரும்பிச் சென்றுவிட்டது. அதற்குப் பிறகு பல ஆண்டுகள் தங்கள் குதிரைகள் தடுமாறினாலோ, முரண்டு பிடித்தாலோ “ஜாபர்கான் ஆவி எதிர்ப்பட்டிருக்கும்!” என்று மங்கோலியர்கள் சொல்வது வழக்கமாக இருந்ததாகச் சரித்திர ஆசிரியர்களால் கூறப்படுகிறது!
தன்னைத் தவிர இன்னொருவர் ஹீரோவாகக் கருதப்படுவதை அலாவுதீனால் தாங்க முடியாது. ஜாபர்கான் வீரத்தை நாலு பேர் புகழ்ந்தது அலாவுதீன் மனதில் கொஞ்ச காலமாகப் பொறாமைத் தீயை மூட்டியிருந்தது. அந்த மாவீரர் தனக்காக உயிர் விட்ட செய்தி வந்தவுடன் “அப்பாடா! ஒழிந்தானா ஜாபர்கான்?!” என்ற விஷம் தோய்ந்த வார்த்தைகள் சுல்தானிடமிருந்து வந்தன!
அலாவுதீனின் கொலைவெறி தொடர்ந்து நீடித்தது. மறைந்த சுல்தான் ஜலாலுதீன் காலத்திலிருந்து இஸ்லாமிய மதம் மாறி டெல்லி அருகே வாழ்ந்து கொண்டிருந்தனர், பல்லாயிரக்கணக்கான மங்கோலியர்கள். அவர்களில் சிலர் தன்னைக் கொல்லத் திட்டம் போட்டதாகக் கேள்விப்பட்டார் சுல்தான்.
விளைவு - ‘புதிய முஸ்லிம்கள்’ என்று அழைக்கப்பட்ட அந்தப் பல்லாயிரக்கணக்கான நிராயுதபாணிகளை அலாவுதீனின் படை சூழ்ந்துகொண்டது. ஒரே நாளில் முப்பதாயிரம் பேர் ஈவு இரக்கம் இல்லாமல் வெட்டி வீழ்த்தப்பட்டனர்.
தொடர்ந்து...
பிரச்னை தந்துகொண்டிருந்த குஜராத் பிரதேசத்தை நோக்கி அலாவுதீன் படை கிளம்பியது. எவ்வளவோ வீரத்தோடு போர் புரிந்தும் ராஜபுத்திர அரசர் ராய் கர்ண தேவாவினால் சுல்தான் படையைச் சமாளிக்க முடியவில்லை. குஜராத், சுல்தான் கையில் விழுந்தது. கூடவே அழகு, கவர்ச்சி, பத்திசாலித்தனம் நிறைந்த ஓர் அடிமையும் வந்து சேர்ந்தான். ‘அலி’யான இவன் பெயர் மாலிக் கஃபூர். இந்த அடிமை ஒரு இந்து. பிறகு, முஸ்லிமாக மதம் மாறியவன். அலியாக இருந்தாலும் மாலிக் கஃபூர் ஒரு பெரும் வீரன், போர்த் தந்திரங்களில் தேர்ந்தவன். இது தெரிந்த அலாவுதீனுக்கு ஏக மகிழ்ச்சி! கஃபூரைப் பிரதம தளபதி அளவுக்குப் பதவி உயர்வு தந்து அவன் மீது எக்கச்சக்கமான நம்பிக்கை வைத்தார் சுல்தான். அதற்கேற்ப, சென்ற இடமெல்லாம் வென்று திரும்பினான் மாலிக் கஃபூர்.
ராஜஸ்தானில் உள்ள சித்தூரில் நடந்தது சரித்திரப் பிரசித்தி பெற்ற போர். முனைப்பாக நடந்த இந்த யுத்தத்தில் ராஜபுத்திரப் படை தோற்று ராணா ரத்தன் சிங் உயிரிழந்ததைக் கேள்விப்பட்ட சித்தூர் ராணி பத்மினியும் மற்ற அந்தப்புரப் பெண்களும் தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்தார்கள்.
சித்தூரை வெற்றிகண்ட அலாவுதீனின் படை தெற்கு நோக்கிக் கிளம்பியது. கோதாவரி நதிக்கறையில் உள்ள தேவகிரி ராஜ்யம், தெலுங்கானா பகுதி, வாரங்கல், மைசூர் பிரதேசங்களை ஆண்ட மன்னர்கள் எல்லோரும் அலாவுதீனிடமும் அவரது தளபதி மாலிக் கஃபூரிடமும் தோற்றுப் போனார்கள்.
பிறகு, மாலிக் கஃபூர் படை தெற்கே மதுரையில் புகுந்தது. மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் இரு மகன்களான சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே நிலவிய கோஷ்டிச் சண்டை மாலிக் கஃபூர் வேலையைச் சுலபமாக்கியது!
தெற்குப் படையெடுப்பை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு டெல்லிக்குத் திரும்பினான் மாலிக் கஃபூர். கூடவே ஏராளமான செல்வத்தோடு அறுநூறு யானைகளையும், இருபதினாயிரம் குதிரைகளையும் கைப்பற்றி சுல்தானுக்குப் பரிசாக எடுத்துச் சென்றான் இந்தத் தளபதி. தன் நம்பிக்கைக்குரிய தளபதிக்கு மேலும் பதவி உயர்வு, பரிசுகள் தந்து பாராட்டினார் அலாவுதீன் கில்ஜி.
தொடர்ந்து போரில் வெற்றிகள் குவியக் குவிய, சுல்தான் தலை கனத்துப் போனது. அகம்பாவம் அதிகமானது. தன்னை ‘இரண்டாவது அலெக்ஸாந்தர்’ என்று அவ்வப்போது கர்வத்துடன் சொல்லிக் கொள்ள ஆரம்பித்தார் அலாவுதீன்.
“குதுப்மினாரைத் தூக்கிச் சாப்பிடும் உயரத்துக்கு இன்னொரு மினாரைக் கட்டுவேன்!” என்று முழங்கிய சுல்தான், அதற்கான வேலைகளைத் துவக்கினார். ஆண்டவன் சத்தம் வேறுவிதமாக இருந்தது! எத்தனையோ அரசுகளை வெற்றிகொண்ட சுல்தானால் குதுப்மினாரை வெற்றிகொள்ள முடியவில்லை. அரைகுறையாக, முதல் மாடி வரை மட்டுமே எழும்பிய ஒரு அரைகுறை ‘மினாரை’ இன்றும் நாம் குதுப்மினார் அருகே காணலாம்.
நினைத்திருந்தால் அலாவுதீனால் இன்னொரு பல்பனாக உருவெடுத்திருக்க முடியும்... ஆனால், துரதிர்ஷ்டவசமாக பல்பனின் நிதானமான, தீர்க்கமான, சட்டதிட்டங்களுக்கு மதிப்பு தரும் அணுகுமுறை அலாவுதீனிடம் காணப்படவில்லை. இருப்பினும், அலாவுதீன் ஆட்சியில் விலைவாசிகள் கட்டுக்குள் இருந்தன. ஒரு பஞ்சம் ஏற்பட்டபோதும் அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு முறையாக விநியோகிக்கப்பட்டன. வியாபாரிகள் இரவு நேரத்தில்கூடப் பயமில்லாமல் தங்கள் சரக்குகளுடன் நாடு முழுவதும் பயணித்தனர். ஒரு கொள்ளைக்காரர்கூட நாட்டில் இல்லாததுதான் காரணம்!
போகப் போக, அதிகாரபோதை தலைக்கேற, ‘என்னால் எதையும் சாதிக்க முடியும்!’ என்ற எண்ணம் அலாவுதீன் கில்ஜி மூளையில் மேலோங்கியது. ‘மது அருந்துகிறோம் பேர்வழி என்று கூட்டமாகப் பிரபுக்கள் சங்கமிக்கிறார்கள். சதித் திட்டங்கள் உருவாக இதுவும் காரணம்!’ என்று முடிவெடுத்த சுல்தான், உடனே சாம்ராஜ்யத்தில் பூரண மதுவிலக்கை அமலுக்குக் கொண்டுவந்தார்! முதல் ஆளாகத் தன் மதுக்கோப்பைகளையும் ஜாடிகளையும் தர்பாருக்குக் கொண்டுவந்து கீழே போட்டு உடைத்தார். ஆனால், மதுவிலக்குத் திட்டம் தோல்வியைத் தழுவியது. டெல்லி சந்து பொந்துகளிலெல்லாம் கள்ளச்சாராயம் காய்ச்ச ஆரம்பித்ததுதான் காரணம்!
கடைசியில் அலாவுதீன் கில்ஜியின் கிறுக்குத்தனம் அளவுக்கு மிஞ்சியது. யாருக்கும் தோன்றாத விபரீத எண்ணம் விஷச் செடியாக அலாவுதீன் மனதில் துளிர் விட்டது. தன்னைக் கடவுளின் ஒரு தூதர் என்று ஏன் அழைக்கக்கூடாது எனத் தனக்குத்தானே கேட்டுக்கொண்டார் சுல்தான். அலா-உல்-மூல்க் என்னும் டெல்லியில் நீதிபதி ஸ்தானத்தில் உள்ள முதிர்ந்த, மரியாதைக்குரிய அறிஞரை அழைத்து இதுபற்றிக் கருத்துக் கேட்டார்.
திகைத்துப் போனார் பெரியவர் மூல்க். பிறகு சுதாரித்துக் கொண்டு “சுல்தான்! இந்த ஆபத்தான எண்ணத்தை உடனே விட்டுவிடுங்கள். சில சமயம் கடவுளின் தூதுவர்கள் அரசரின் கடமைகளை நிறைவேற்றியது உண்டுதான். ஆனால், மன்னர்கள் எல்லாம் இறைவனின் தூதுவராகிவிட முடியாது. மன்னர்கள் இன்று வருவார்கள்... நாளை போவார்கள். ஆனால், ‘அல்லாஹ்’ ஆட்சி நிரந்தரமானது. முடிவு இல்லாதது!” என்று துணிவுடன் நிமிர்ந்து நின்று எடுத்துச் சொல்ல, சபையில் இருந்த அடிவருடிகள் சிலர், “முதியவரின் தலை அவ்வளவுதான்” என்று முடிவுகட்டினார்கள்.
ஆனால்...
சுல்தான், வெகுநேரம் அந்த அறிஞரின் முகத்தை ஊடுருவிப் பார்த்தார். பிறகு, மெள்ளத் தலையசைத்து “நீங்கள் சொல்வது சரிதான்... தவறு செய்துவிட்டேன்!” என்று ஒப்புக்கொண்ட அலாவுதீன் கில்ஜி, பெரியவருக்குப் பரிசுகள் தந்து கெளரவித்து மரியாதையுடன் திருப்பி அனுப்பினார்...!

Leave a comment
Upload