தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் - 2 ஜி.ஏ.பிரபா

20260324203322883.jpeg

​​​​ கருணாம்ருத ஸாகரா

கமலாக்ஷீ கல்மஷக்னீ கருணாம்ருத ஸாகரா

​கதம்ப காநநாவாஸா கதம்ப குஸும ப்ரியா. - - - ( 7 – 11 ) ​

அன்னையை பல்வேறு விதமாகப் போற்றுகிறது பல ஸ்தோத்திரங்கள்.

​சுந்தரி, சௌந்தரி, நிரந்தரி, துரந்தரி, ஜோதியாய் நின்ற உமையே என்றும், மாயவன் தங்கை, ,மரகதவல்லி, மணிமந்திரக்காரீ, மாயாசொரூபீ, மகேஸ்வரீ, மலையரசன் மகள், மீனாட்சி, சற்குணவல்லீ, தயாநிதி, விசாலாக்ஷி, தரணியில் பெயர் பெற்ற பெரியநாயகி என்று பல்வேறு விதமாகப் புகழ்கிறது.

​அவளின் புகழைப் பாட எத்தனை கவிஞர்கள் வந்தாலும் இயலாது என்பதே உண்மை.

​“அம்பிகையின் நாமங்களை என்னால் முடிந்தவரை கூறுகிறேன். அவளின் பெருமையை யாரால் உரைக்க முடியும்?” என்றுதான் ஹயக்ரீவர் கூறுகிறார்.

​த்ரிசதீ அவளின் நாமங்களையும், அதன் மூலம் அவளின் பிரபாவத்தையும் இந்த வரிகளில் விளக்குகிறது.

தாமரை போன்ற கண்களை உடையவள். அந்தக் கண்களின் கடைக்கண் பார்வையால் அவள் அருட் செல்வம், பொருட் செல்வம் இரண்டையும் தருபவள். கடைக்கண் பார்வையே சகல செல்வங்களும் தரும் எனில், முழுப் பார்வையும்!!!

​அக்ருனை என்னும் அமுதம் நிறைந்த கடல் போன்றவள். அதில் மூழ்குபவர்களின் பாவங்களை எல்லாம் நீக்குபவள் அம்பிகை. கதம்ப வனத்தில் வசிப்பவள். கதம்ப வன வாசினி என்கிறது லலிதா சஹஸ்ரநாமம்.

​கதம்ப மலர்களில் விருப்பம் உடையவள். கற்பக விருக்ஷம் ஐந்து வகைப்படும். சந்தனம், ஹரி சந்தனம், மந்தாரம், பாரிஜாதம், கதம்பம் என்பவை அவைகள். இவை மனம், புத்தி, சித்தம், அஹங்காரம், இதயம் என்னும் தத்துவங்களைக் குறிக்கிறது. ஐந்து வகையான வாசனை மலர்களைப் போல், இந்த ஐந்தும் சேர்ந்து கதம்ப நறுமணமாக அம்பிகையை ஆராதிக்கிறது.

​அம்பிகை மன்மதனால் உபாசிக்கப்பட்டவள். மனு வித்யா, சந்த்ர வித்யா ரூபிணீ. தன் கடைக்கண் பார்வையால் மன்மதனை உயிர்பித்தவள்.

​ஈசனின் நெற்றிக்கண் பட்டு எரிந்து போனவன் மன்மதன். அவனின் சாம்பலில் தோன்றியவன் பாணாசுரன் என்ற அரக்கன். அவன் ஒரு பெண்ணாலேயே தனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கேட்டதால், தேவர்கள் செய்த யாக குண்டத்தில் தோன்றியவள் அம்பிகா.

​“தேவர்ஷி, கண சங்காத, ஸ்தூய மாநாத்ம வைபவா” என்கிறது நாமம். ஹர நேத்ராக்னி- சந்தக்த காம சஞ்ஜீவ நௌஷதி: என்று இதைக் குறிக்கிறது அவளின் சஹஸ்ர நாமம்.

​பச்சைக் கற்பூரம் நிறைந்த தாம்பூல வாசனையுடன் பத்துத் திக்குகளிலும் அதன் நறுமணத்தைப் பரிமளிக்கச் செய்கிறாள் தேவி. அவளின் உதட்டுத் தாம்பூலம் நறும்னத்துடம் புவனம் முழுவதும் பரிமளிக்கிறது. கற்பூர வீடிகா என்றால் ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, கேசரி, ஜாதிக்காய், ஜாதி பத்திரி, முதலியவை கலந்த தாம்பூலம்.

​அம்பிகை அலங்காரப் ப்ரியை, வாசனைப் ப்ரியை. எனவேதான் அம்பிகை உபாசனை செய்பவர்கள் அவள் இருக்குமிடத்தை வாசனையுடன் வைத்திருப்பார்கள். நறுமண ஊதுபத்திகள், ஏற்றி, வாசனைத் திரவியங்கள் தெளித்து, அவள் இருக்கும் இடத்தை வாசனையுடன் வைத்திருப்பார்கள்.

​திருமகள் வசிக்கும் இடத்தை சுத்தமாகவும், மங்களகரமாகவும் வைத்திருக்க வேண்டும். மனச் சுத்தம், வீட்டுச் சுத்தம் என்பது அம்பிகையின் இருப்பிடத்தையே குறிக்கிறது. மாணிக்கக் கல் தான் இருக்கும் இடத்தைச் சுற்றி ஒளியைப் பெருக்குவது போல் அம்பிகையும் விளங்குகிறாள்.

​அவளின் உருவத்தைத் தியானித்த உடனே அவளின் அருள் நமக்குக் கிடைத்து விடும்.

​“தடில்லேகா தன்வீம் தபன சசி வைச்வானா மயீம்” என்கிறார் ஆதி சங்கரர். மின்னல் போன்ற சூட்சும ஒளி பொருந்திய உருவம் உடையவள். சூரியன், சந்திரன் அக்கினி ஆகிய வடிவங்களின் ஒளி பெற்று, ஆறு ஆதார சக்கரங்களுக்கு மேலே சஹஸ்ரார சக்கரத்தில் நிலை பெற்ற அவளின் கலையை, காமம், அழுக்கு, அறியாமை ஆகிய அழுக்குகள் நீங்கிய மனதினை உடைய மகான்கள் கண்டு உணர்ந்து அந்த ஆனந்தத்தை அடைகிறார்கள் என்கிறார்.

​கருணா சாகரம் அம்பிகை. அம்மா என்று அழைத்ததும் ஓடி வருபவள். பெற்ற தாய் இந்தப் பிறவிக்கு மட்டும்தான். ஆனால் லோகத்துக்கே தாயான ஜெகன்மாதா, எடுக்கும் பிறவிகள் தோறும் நம்முடன் வருகிறாள்.

​மனித வாழ்வின் ஆனந்தங்கள் மட்டுமல்லாமல், நிலையான முக்தியையும் அவள் அருளுகிறாள்.

​மனிதப் பிறவி எடுத்த நாம் ஸ்ரீ லலிதையை தியானம் செய்தாலே அந்த ஆனந்தத்தை அடைந்து விட முடியும்.