
அன்னா! என்ற ருக்குவின் கதறலில் அலறியடித்து எழுந்த அய்யாசாமி,
என்ன ருக்கு ?
ஏன் இப்படி காலங் கார்த்தால கத்தறே?
இங்கே இருந்த வெள்ளிக்
கிண்ணத்தைக் காணலை,தேடுங்கோ!
என அதட்ட
நான் எங்கேன்னு தேடுவேன்,நீதான் எங்காவது மறதியா வச்சுட்டு,வடிவேலு கிணத்தை தேடினக் கதையா தேடுவாய் என்றதும்,
என் புலம்பல் உமக்கு காமெடியா இருக்கா?
200 கிராம் வெள்ளிக் கிண்ணம் அது. கல்யாணத்தின் போது அம்மா கொடுத்தது இத்தனை நாள் சுவாமிக்கு அதில்தான் நைவேத்யம் பண்ணுவேன் என்றாள் ருக்கு.
அத்தனைப்பழசா ?!
விடு.. கிடைக்கும் என்ற அய்யாசாமியின் அலட்சியப்பேச்சு
ருக்குவை இன்னும் அதிகம் கோப மூட்டியது.
பழசாயிருந்தாலும்,
இன்றைய மதிப்பில்
ரூ 50000/- மாக்கும் என்றதும்,
ஐம்பதாயிரமா! என வாயைப் பிளந்த அய்யாசாமி கிண்ணத்தை சீரியசாகதேடத் துவங்கினார்.
சந்திரா மாமிதான் நேத்து ஆத்திற்கு வந்தாள்... ஏற்கனவே இந்த கிண்ணத்தைப் பார்த்து நல்லா கிண்ணுனு இருக்கு என சொன்னாள்.
ஒருவேளை அவள்..!
சீ என்ன இது?!
என் புத்தி ஏன் இப்படி போறது?! என தனக்குத்தானே தலையில் அடித்துக் கொண்டாள்.
ஏண்டி தலையிலே அடிச்சுக்கிறே?!
உம்மை கட்டிண்டத்திற்கு அதான் செய்யமுடியும் என முப்பது வருட வசனம் வரவும்,
சத்தம் போடாமல் கொல்லைப்
பக்கத்திற்குச் சென்றார் அய்யாசாமி கிண்ணத்தைத்தேடி.
திரும்ப வந்தவர் ஆமாம்! நேற்று சுவாமிக்கு என்ன நைவேத்யம் செய்தாய்?! என துப்பறியும் சாம்புவாக மாறி கேள்வி கேட்டதும்,
வழக்கம் போல முந்திரியும் திராட்சையுந்தான் என்றாள் ருக்கு.
சாமியறையுள் விளக்கினைப் பார்த்தார்,அதில் எண்ணெய் இல்லாது திரி கீழே தரையில் கிடந்ததைப் பார்த்தார்.
விரலைச் சொடுக்கியவர்,இது யார் செய்த வேலைனு எனக்கு தெரிச்சுடுத்து என்றார் பெருமிதமாக..
யார்னா?!
எலிதான் என்றவர் கொல்லையில் உள்ள பொந்து ஒன்றின் அருகில் சென்றுப் பார்த்தார் கிடந்தது அங்கே வெள்ளிக் கிண்ணம்.
பார்த்தியா?! இதற்குதான் அய்யாசாமி இருக்கனுங்கிறது
என பெருமை பீற்றிக்கொண்டதை ருக்கு ரசிக்கவில்லை என தெரிந்தது,
அவள் முகவாய் தோள்பட்டை வரை சென்றதிலிருந்து.
இன்றைக்கே பொறி வையுங்கோ, பிடியுங்கோ அந்த எலியை என உத்தரவிட்டாள் ருக்கு.
பாவம் ருக்கு,
அது பாட்டுக்கு இருக்கட்டும், பிள்ளையாரின் வாகனம் அது,
நாம் ஜாக்கிரதையாக இருப்போம் என்று பல்லுயிர்கள் உரிமை
பற்றி பேசியதை ருக்கு ஏற்கவில்லை,
ஓஹோ...என்று முறைத்தாள் ருக்கு.
அந்த முறைப்பிற்கு ஒன்று நான் இருக்கணும் அல்லது அந்த எலி இருக்கணும் என்று அர்த்தம் என்பது மட்டும் புரிந்தது.
தேங்காய் பத்தையைச் சுட்டு பொறியில் வைக்கும்போதே ருக்குவின் கை அந்த பொறியில் மாட்டிக் கொண்டு வலியால் கத்தியதையும்,
மறுநாள் காலை
பொறி வைத்தப் படியே இருக்க,தேங்காய் பத்தை மட்டும் காணாமல் போய் இருந்ததைப்பார்த்த அய்யாசாமிக்கு சிரிப்பை அடக்க முடியாமல் போக வாயை மூடிக் கொண்டே வெளியில் சென்றுவிட்டார்.
மறுநாள் இரவு வைப்பதற்கு Rat killer கேக் வடிவில் வாங்கிவந்த ருக்கு, இதனை சாமி அலமாரிகிட்ட வையுங்கோ என்று கொடுத்தாள்.
விடிந்ததும்,
அந்த கேக்கும் காணமல் போக அப்பாடா! என நிம்மதி பெருமூச்சு விடும்போதே அந்தப்பக்கமாக எலி பாய்ந்துப் போனதைக்கண்டு,
அய்யா...சாமி! நேற்று கேக்கை வைக்கச் சொன்னேனே வைத்தேளா? என கேட்டதும்...
வச்சனே! நேக்குத் தெரியாதா... அந்த கேக்கை எலி சாப்பிட்டால் உடனே தண்ணீர் தேடி அலையுமாம்...
அதனால் பக்கத்துலே ஒரு பாத்திரத்திலே தண்ணீரையும் பிடித்து வச்சேனே என்றதும்,
வாச்சேளே எனக்குனு வந்து ?! என்ற போது,
நாம நல்லது பண்ணினால் யாரு பாராட்டுறா?! கெட்டப் பேருதான் என புலம்பியபடி நகர்ந்தார்.
இதெல்லாம் ஏன் செய்கிறாய்?! உனக்கு எலியை விரட்டணும் அவ்வளவுதானே,
ஆமாம் என்று ஆர்வமாய் கேட்ட ருக்குவிடம்..
பூனையை வளர்க்கலாம் அது இருந்தால் எலி இந்தப்பக்கமே வராது என்ற அய்யாசாமியின் யோசனையை பின்பு பரிசீலிப்போம் என அமைதியானாள் ருக்கு.
பூனையோடு வந்த அய்யாசாமியைப்
பார்த்து,"மடியில் கட்டிண்டு சகுனத்தைப் பார்த்தக் கதையா இருக்கு" உமது நடவடிக்கை, விரட்ட ஆயிரம் வழி இருக்கு இது தேவையா என்றாள் ருக்கு.
இன்றைக்குப் பாரு அந்த எலி என்ன கதியாகப்போகிறது என சவால் விட்டார் அய்யாசாமி. அன்றைய இரவு மோசமான விளைவுகளை தரப் போவதைறியாமல்.
இரவு எலியைக்
கண்ட பூனை விரட்டிக்கொண்டு வரவும், எலி அடுப்படிக்குள் துள்ளி ஓடியது. பாத்திரங்கள் உருளும் சப்தம் கேட்டு எழுந்த ருக்கு, அய்யாசாமி இருவருக்கும் லைவ்வாக "டாம் அண்ட் ஜெரி" நிகழ்ச்சி நடத்திக்காட்டியது.
மேடையிலிருந்த பாலைக்கொட்டியப் பூனை அதனை நக்கி குடிக்க ஆரம்பித்தது.
எலி டியூப் லைட்டில்
டிராவல் செய்து ஊறுகாய் ஜாடியருகே நின்று பூனையைப் பார்த்தது. பூனை ஒரே தாவலில் ஜாடியின் மீது மோதிட ஜாடி விழுந்து சிதற ஊறுகாய் இருவர் முகத்திலும் தெறித்தது.
இரண்டையும் வெளியே விரட்டிவிட்டு அடுப்படியைச் சுத்தம் செய்து முடிக்கும் போது மறுநாள் பொழுது விடிந்திருந்தது.
என்ன இப்படியாடுத்து? வேண்டுமானால் ஒரு நாயை வளர்க்கலாமா ? என கேட்ட அய்யாசாமியை
ஹலோ "மிஸ்டர் பயோ டைவர்சிட்டி"என்றவள் "போதும்!" என சைகையில் எச்சரித்தாள்.
இந்த எலியாலே இரண்டு நாட்களாக நிம்மதியில்லாமல் போச்சே, என்ன செய்யலாம் என அய்யாசாமி யோசித்துக்கொண்டிருந்ததைப் பார்த்த ருக்கு,
ஐயோ...இது இப்படி உட்கார்ந்து யோசிக்கிறதே,
அடுத்து என்ன ஏழரையை கூட்டப்போறதுன்னு தெரியலையே என உள்ளுக்குள் பயந்தாள்.
எலியை உயிரோடு பிடிக்க யாரிடமோ ஆலோசனைக்கேட்ட அய்யாசாமி வெளியே செல்லக் கிளம்பினார்
தனது காரை ஸ்டார்ட் செய்ய முயன்றார். எவ்வித சலனமுமில்லாமல் இருந்தது.
ஸ்டியரிங் டைட்டாகி திருப்பமுடியாமலும், தானியங்கி சென்சார் விளக்குகள் எறியாமல் இருந்ததைக் கண்டு கார் எலக்ட்ரீஷியனை அழைத்தார்.
சோதனை செய்த எலக்ட்ரீஷியன்,
"சார் வயரையெல்லாம் எலி கடிச்சி வச்சிருக்கு,பாருங்க நாற்றமும் அடிக்குது என்றார்.
உள்ளே இருந்த ருக்கு பலமாக சிரிப்பது வாசல் வரைக் கேட்டது.
என்ன செலவாகும் என்று பயந்தபடி அய்யாசாமி கேட்க..
குறைந்தது 25000/- ஆகும் சார் என்றார்
எலக்ட்ரீஷியன்.
பூமி பிளந்து கீழே ஸ்ட்ரைட்டா டிராவல் ஆவது போலிருந்தது அய்யாசாமிக்கு.
காரை சர்வீசுக்கு அனுப்பிவிட்டு கடைத்தெருவிற்குச் சென்றார் அய்யாசாமி.
வீடு திரும்புகையில்
ஒரு கையில் எலி பிடிக்கும் கூண்டு,
ஒரு கையில் புதிய எலிப்பொறி,கவரில் எலி கேக், ரேட் கம் பேடு வயலில் பிடிக்க உதவும் கிட்டி,மற்றும் ரேட் ஸ்பிரே, புகையிலை,
நாப்தலின் பால்ஸ் என கையில் ஏந்தி எலியைப் பிடிக்கவந்த ஏலியன்ஸ் போல் காட்சியளித்தார் அய்யாசாமி.

Leave a comment
Upload