
75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை ஓட்டு சதவீதம் 85 சதவீதத்தை தாண்டி இருக்கிறது.
20 லட்சத்துக்கு அதிகமான வாக்காளர்கள் வாக்களித்து இருக்கிறார்கள். சரியான பஸ் வசதி இல்லை. இதனால், எங்களால் வாக்களிக்க முடியவில்லை என்று பல ஆயிரம் பேர் ஆதங்கப்படுகிறார்கள்.
ஓட்டு சதவீதம் அதிகரித்ததை பிரதான கட்சிகள் பாராட்டினாலும் உள்ளுக்குள் இந்த வாக்குகள் எல்லாம் விஜய் கட்சிக்கு போயிருக்குமோ என்ற பயம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளவில்லை.
திமுக தலைவர் ஸ்டாலின் ஓய்வுக்காக கொடைக்கானல் போவதற்கு முன்பு சுற்றுப்பட்டு மாவட்ட வேட்பாளர்களை அழைத்து ஓட்டுப்பதிவு அதிகரிக்க காரணம் விஜய் கட்சிக்கு எவ்வளவு வாக்கு பதிவு போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.
வாக்குப்பதிவு அதிகரித்ததை தொடர்ந்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அரசியலை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டுப்படுத்தியும் கட்டுப்படுத்தியும் வைத்தவர்களின் மாயாஜால கணக்குகள், சாதாரண வெகுஜன மக்களால் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன.
அரசியல் என்பது ஏதோ அசகாய சூரர்களுக்கானது மட்டுமே, பதவிகளை அனுபவிப்பவர்களுக்கானது என்ற கணக்கு நொறுக்கப்பட்டுள்ளது.
அரசியலை கண்டு கொள்ளவே மாட்டார்கள் என்று இதுவரை அனுமானிக்கப்பட்ட இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசத் தொடங்கிய அதிசயமும் அவசியமும் நிகழத் தொடங்கி விட்டது.
இது எப்போதிலிருந்து தொடங்கியததென நடுநிலை மனம் கொண்டோர் அனைவரும் உணர்வர். இதுவரை பெரும் அளவிலான குறிப்பிட்ட சதவீத வாக்குகள் வாக்குச்சாவடி பக்கமே வராமல் இருந்தன.
2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வரலாற்று நிகழ்வாக பதிவாகியுள்ளது. 85 சதவீதம் வாக்குப்பதிவு என்பதெல்லாம் தமிழ்நாடு காணாத ஒன்று.
வாக்குச்சாவடி எங்கும் கோவில்களில் காணப்படும் கூட்டம் போல, குடும்பம் குடும்பமாக குழந்தை குட்டிகளுடன் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதோர் எவரும் இருக்கவே வாய்ப்பில்லை.
அதுமட்டுமா, வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வாக்களிப்பதற்காகவே பெரும்பொருள் செலவு செய்து வந்த ஜனநாயகர்களை இருகரம் கூப்பி வணங்காமல் இருக்க முடியுமா ?
தேர்தல் திருவிழா என்று சொல்லப்படுவதன் அர்த்தம் சுகப்பட்டதே நேற்றுதான்.
இந்த 26, ஏப்ரல் 23 தான்.
இது ஒரு தொடக்கம் மட்டுமே.
தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா தங்கைகள் என் தாத்தா, அப்பா அண்ணன், தம்பிகள் என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிதனைக் காணிக்கையாக்குகிறேன்.
குறிப்பாக நம் குடும்பத்தினரை வழி நடத்திய என் குட்டி நண்பா நண்பிஸ்க்கு என்னுடைய -உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும் என்று சொல்லி இருக்கிறார்.

விஜய் பொறுத்தவரை இளம் தலைமுறை பெண்கள் அதிக அளவு வாக்களித்தது தனக்கும் தன் கட்சிக்கும் தான் என்று நம்புகிறார்.
விஜய் என்ற பூதம் செய்தது என்ன என்பது மே நான்காம் தேதி தெரியும்.

Leave a comment
Upload