
மீனாட்சி அம்மன் மீது கொண்ட அதீத பக்தி காரணமாக, விலைமதிப்பற்ற மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட தங்கப் பாதுகை (தங்கச் செருப்பு) காணிக்கை செலுத்திய ஆங்கிலேயர் ரவுஸ் பீட்டர்.
இவர் 1812 முதல் 1828 வரை மதுரையின் கலெக்டராகப் பணியாற்றியவர்.
இவர் மதுரை மீனாட்சி அம்மன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்ததாலும், மக்களின் கலாச்சாரம் மற்றும் மத உணர்வுகளை மதித்து நடந்ததாலும், மதுரை மக்களால் அன்புடன் "பீட்டர் பாண்டியன்" என்று அழைக்கப்பட்டார்.

ஒரு நாள் தன்னை ஆபத்தில் இருந்து காத்த சிறுமி (மீனாட்சி அம்மன்) வெறுங்காலுடன் ஓடியதை உணர்ந்து, மீனாட்சி அம்மனின் பாதம் வலிக்குமே என்று, தன் உயிரைக் காத்த அம்மனுக்கு நன்றி செலுத்தும் விதமாக, 412 மாணிக்கங்கள், 72 மரகதங்கள் மற்றும் 80 வைரங்கள் பதிக்கப்பட்ட விலை உயர்ந்த தங்கக் காலணிகளைக் காணிக்கையாக வழங்கினார். அந்த பாதுகையில் அவரது பெயர் "பீட்டர்" என்று பொறிக்கப்பட்டது. இன்றுவரை அந்த ஒரு ஜோடி பாதுகை 'பீட்டர் பாதுகைகள்' என்றே அழைக்கப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாளில், அஸ்வ (குதிரை) வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும்போது அணிவிக்கப்படுகின்றது.

இவர் தன்னுடைய பதவிக் காலம் முடிந்த பிறகும் மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பாமல், தனது கடைசி நாட்களை மதுரையில் தான் கழித்தார். மதுரையிலேயே காலமான அவரது உடல், மதுரை மேல ஆவணி மூல வீதியில் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. பீட்டரின் கல்லறை, தேவாலயத்தின் பலிபீடத்தின் அடியில் ஒரு பாதாள அறையில் அமைந்துள்ளது. அந்த அறையில் அவரது இறுதி விருப்பப்படி, அவரது முகம் மீனாட்சி கோயிலை நோக்கி இருக்குமாறு வைத்து அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் இன்றும் ரவுஸ் பீட்டர் நினைவாக, அம்மன் சந்நிதி அருகே உள்ள வீதிக்கு பீட்டர் துரை வீதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.


Leave a comment
Upload