வேண்டாம் இந்த விளையாட்டு...

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 162 இன் கீழ் மாநிலத்திற்கான சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து அரசாணை வெளியிட்டது. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் இந்த யோசனையை அரசுக்கு தெரிவித்தனர். முதல்வரும், மத்திய அரசு மீதான அச்சமின்றி தைரியமாக இந்த முடிவை எடுத்துவிட்டார்.
தற்போது தமிழக ஆளுநரும் ஒப்புதல் அளித்து விட்டதாக பத்திரிக்கை குறிப்பில் ஆளுநர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. '26.9.2020 அன்று மத்திய செலிசிட்டர் ஜெனரல் அவர்களின் கருத்து கேட்டு இந்த சட்ட மசோதாவை அனுப்பியதாகவும், 29.10.2020 அன்று அவர் தனது கருத்தை அனுப்பியதாகவும்... அதன் அடிப்படையில் இந்த ஒப்புதல் தரப்படுகிறது' என்று ஆளுநர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறது.
இது சம்பந்தமான வழக்கில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ‘அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆளுநர் விரைவாக முடிவு எடுக்க வேண்டும்... இந்த விஷயத்தில் ஆளுநர் தன் மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும்’ என்று கூறினார்கள்.
தற்போது ஆளுநர் ஒப்புதல் இல்லாமலே இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசு ஆணை இட்டு இருந்த நிலையில், ஆளுநர் ஒப்புதல் தந்திருக்கிறார். ஆளுநரின் மனசாட்சி ரொம்பவும் காலதாமதமாக அவரை முடிவெடுக்க தள்ளி இருக்கிறது.
ஏற்கனவே கொரோனாவை காரணம் காட்டி கல்லூரிகள் இயங்குவதில்லை. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை எப்போதும் ஜூன் மாதம் முடிந்து வகுப்புகள் துவங்கிவிடும். நீட் மற்றும் இட ஒதுக்கீடு சர்ச்சைகள் காரணமாக தொடர்ந்து மூன்று, நான்கு வருடமாக மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை ஜூன் மாதத்திற்குள் நடப்பதில்லை, செப்டம்பர் மாதம் வரை இழுக்கப்பட்டு அதன் பிறகுதான் மாணவர் சேர்க்கையே நடைபெறுகிறது. இந்த ஆண்டு இன்னமும் மோசம்! அக்டோபர் முடிந்து, சேர்க்கையே இப்போது கேள்விக்குறியாகி ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது என்றாலும் மாணவர்களின் கல்வியில் இந்த அரசியல் ஆட்டத்தை ஆளுநர் நடத்தி இருக்கக்கூடாது, அது மிகவும் கண்டனத்துக்குரியது.
உண்மையில் மத்திய அரசின் சட்ட நிபுணர்கள் கருத்தை ஆளுநர் கேட்க விரும்பியிருந்தால், மசோதா அவரது ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட அன்றே அதனை அனுப்பி அவர்கள் கருத்தை கேட்டு தனது முடிவை விரைவில் அறிவித்து இருக்கலாம். ஆனால், அப்படி அவர் செய்யாமல் காலதாமதம் செய்து மாணவர்களின் எதிர்காலத்தில் இந்த அரசியல் விளையாட்டை நடத்தியிருக்கிறார். ஆளுநர் வரலாற்றில் நிச்சயம் இது ஒரு கரும்புள்ளி தான்.

Leave a comment
Upload