தொடர்கள்
அனுபவம்
விம்பிள்டன் மைதானத்தில் ஒரு நேரடி அனுபவம் - லண்டனிலிருந்து கோமதி

20260610235329438.jpg

விக்ரமாதித்தனின் விடாமுயற்சி போன்று, நானும் விம்பிள்டன் டென்னிஸ் பார்க்க டிக்கெட் வாங்க முயற்சி செய்துகொண்டே இருந்தேன். பத்து வருடங்கள் தொடர் முயற்சியின் பலன் இந்த வருடம் நம்பர்.1 கோர்டுக்கான டிக்கெட் கிடைத்தது, இவ்வளவு காலத் தவம் சென்டர் கோர்டுக்கான நுழைவு கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் கூடவே ஒட்டிக் கொண்டது. அந்த நாளன்று நேரே சென்று வாங்கலாம் என்ற நம்பிக்கை வார்த்தையை கொடுத்த என் கணவரின் பேச்சை முதல் முறையாக கேட்கத் துணிந்தேன். பதினான்கு நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரின் ஒன்பதாவது நாள் ஆட்டத்தை நாங்கள் இருவரும் காணும் பாக்கியம் பெற்றோம்.

2026061023540792.jpg

விம்பிள்டன் விளையாடுவது பூர்வ ஜென்ம பலன். அதைப் பார்ப்பதும் கூடத் தான் என்று சொல்வேன் என்னைக் கேட்டால்.

டிவியில் பார்க்கும் அந்த திரைப்புள்ளிகளின் கோலம், நேரில் பார்க்கும் போது ஒரு மாயா ஜாலம். அத்தனை பரிசுத்தமான ஒரு விளையாட்டு மைதானம்.

20260610235434768.jpg

(விம்பிள்டன் கனவு நிறைவேறியது)

கால் இறுதி ஆட்டம் என்று தெரிந்திருந்தாலும் எந்த கோர்ட்டில் யார் ஆடுவார்கள் என்கிற அறிவிப்பு ஆட்டத்தின் முந்தைய நாள் தான் தெரிய வரும். ஆவலோடு காத்திருந்த எங்களுக்கு முன்னணி வீரரான ஜானிக் சின்னரின் ஆட்டம் காணப்போகிறோம் என்பது ஆஹா நல்லதொரு ஆட்டத்தை காணப்போகிறோம் என்கிற மன நிறைவைத் தந்தது. காலையிலேயே சென்டர் கோர்ட்டுக்கான டிக்கெட் வாங்கும் கியூவில் சேர்ந்து கொண்டோம். பதிவு செய்த பின்பு, அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கு எஸ்எம்எஸ் வரும், அதிலேயே டிக்கெட் வாங்கிக்கொள்ளுங்கள் என்று எங்களை வாழ்த்தி அனுப்பிவைத்தனர். மதியம் நடைபெற்ற கால் இறுதிச் சுற்றில் இத்தாலியை சேர்ந்த யானிக் சின்னர், ஜெர்மனியின் ஸ்ட்ரூப்பை, 7-5,7-6,6-3 என்ற நேர் செட்களில் வென்று அறை இறுதிச் சுற்றுக்கு தேர்வு பெற்றார். அதனை தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான கால் இறுதி ஆட்டத்தில் செக் குடியரசை சேர்ந்த கரோலினா முசோவா, ஜப்பானின் நயோமி ஒசாகாவை, 7-6,6-4 என்ற நேர் செட்களில் தோற்கடித்தார்.

இந்த விளையாட்டுகளைத் தாண்டி, விம்பிள்டன் டென்னிஸ் மைதானத்தை சுற்றி பார்ப்பது என்பதே ஒரு தனி அனுபவம் தான்.

இன்று உலக அளவில் இயற்கை புல் தரை மைதானங்களில் (Grass Courts) நடத்தப்படும் ஒரே கிராண்ட் ஸ்லாம் தொடர் விம்பிள்டன் மட்டும்தான்.

ஒவ்வொரு நாளும் காலையில் இந்த புற்கள் சரியாக 8 மில்லி மீட்டர் அளவிற்கு மிகத் துல்லியமாக வெட்டப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

மேலும், இங்கு விளையாடும் வீரர்கள் அனைவரும் கண்டிப்பாக முழு வெள்ளை நிற ஆடைகளை (All-White Dress Code) மட்டுமே அணிய வேண்டும் என்பது இன்றும் கடைப்பிடிக்கப்படும் ஒரு கடுமையான, ஆனால் அழகான பாரம்பரியம்.

விம்பிள்டன் சென்றால் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய ஒன்று இந்த ஸ்ட்ராபெர்ரி மற்றும் கிரீம்.

1877-ல் நடந்த முதல் தொடரிலிருந்தே இந்த வழக்கம் இருந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த இரண்டு வார காலத்தில் மட்டும் சுமார் 25 டன்களுக்கும் அதிகமான புதுமையான ஸ்ட்ராபெர்ரி பழங்கள் ரசிகர்களால் ரசித்து உண்ணப்படுகின்றன!

உங்களுக்கு மெயின் கோர்ட் (Centre Court) டிக்கெட் கிடைக்கவில்லை என்றாலும் கவலைப்படத் தேவையில்லை. 'ஹென்மேன் ஹில்' (Henman Hill அல்லது Murray Mound) என்று அழைக்கப்படும் புல்வெளி குன்றில் அமர்ந்து, அங்குள்ள பிரம்மாண்ட திரைகளில் நேரலையாக மேட்ச்சை பார்க்கலாம்.

நூற்றுக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து பிக்னிக் கொண்டாடிக்கொண்டே, கைதட்டி ஆரவாரம் செய்வது ஒரு தனி அலாதியான அனுபவம்.

20260610235803538.jpg

அதே குன்றில் அமர்ந்து, ஜோகோவிச் மற்றும் ஃபீலிக்ஸ் இடையேயான ஆட்டத்தை கண்டு களித்துக் கொண்டிருந்தோம்.

39 வயதான ஜோகோவிச், தன்னுடன் 14 வருடங்கள் இளையவரான ஃபீலிக்ஸுடன் சரிக்கு சமமாக விளையாடியதை ரசிக்காமல், பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

அப்பொழுது காலையில் எங்களை வாழ்த்தி அனுப்பியவரின் வாழ்த்து பலித்தது, சென்டர் கோட்டுக்கான டிக்கெட் வாங்கவும் என்ற செய்தி வந்தவுடன், அலறி அடித்துக்கொண்டு சென்டர் கோர்ட்டுக்குள் நுழைந்தோம்.

20260610235829445.jpg

இத்தனை இடர்பாடுகளை ஒன்றுமே இல்லை என்று கூறுமளவிற்கு இருந்தது அந்தப் போட்டி. ஐந்து மணி நேரம் சிறிதும் சோர்வடையாமல், வெல்ல வென்றும் என்கிற வெறியோடு இருவரும் ஆடினார்கள்.

இறுதியில் அனுபவமிக்க ஜோகோவிச் 7-6, 3-6, 6-3, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் ஃபீலிக்ஸை வீழ்த்தி இந்த த்ரில்லருக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்தார்.

வயது வெறும் எண்தான் என்பதைத் தன் செயலின் மூலம் நிரூபித்து, இந்தப் போட்டியை பற்றி கூறும்பொழுது ஜோகோவிச், இப்படிப்பட்ட தருணங்களுக்காகவே தான் டென்னிஸ் விளையாடுவதாகவும் குறிப்பிட்டார்.

20260610235916165.jpg

சுருக்கமாகச் சொன்னால், விம்பிள்டன் அனுபவம் என்பது பிரம்மாண்டம், அமைதி, மற்றும் பல நூற்றாண்டு காலப் பாரம்பரியம்,போட்டியில் பங்குபெறுவோரின் மன வலிமை ஆகியவற்றை நேரில் உணர்வது. டென்னிஸ் மாட்ச் அப்படியே போனஸ்.

ஏகாந்த அனுபவம்.

விகடகவியில் வீடியோ போடலைன்னா எப்படி ??? இதோ......