
வாழ்வின் ஒரு சின தினங்கள் மறக்க முடியாதவை.
உனக்கு ரத்தக் குழாய் ஒன்று அடைத்துக் கொண்டு விட்டது என்று யாரேனும் வந்து சொன்னால் அதற்கு எப்படி ரியாக்ஷன் கொடுப்பது என்று யோசிப்பது கூட சுலபமல்ல.
அடுத்த வருடங்கள் என்று யோசிக்காமல் அடுத்த சின தினங்கள் என்பது வரை மட்டுமே திட்டமிடுதல் முதுகுத்தண்டு சில்லிடும் நிமிடங்கள்.
வெளிநாடுகளில் உள்ள மருத்துவர்களின் பார்வை வேறு நம்மூர் மருத்துவர்களின் அணுகுமுறை வேறு.
மருத்துவர் சுரேஷ்குமாரிடம் ஹாங்காங்கில் ரொம்ப ரிஸ்க் என்று சொல்கிறார்கள் என்ற போது லேசாக சிரித்தார். இங்க வா. ஒரே நாள் சரி பண்ணிடலாம். அப்புறம் ஒரு 5 நாள் ரெஸ்ட். அப்புறம் வேலைய பாரு என்று போனை வைத்து விட்டார்.
விகடகவி ஆசிரியர் குழுவில் இருப்பதற்கு ஆஞ்சியோ ஒரு தகுதி போலும். நம்மை ற்றிலும் "ஸ்டெண்ட்" கலைஞர்கள் தான்.
ஆஞ்சியோ சமாச்சாரத்தில் ஒவ்வொருவரும் ஒரு யோசனை சொல்கிறார்கள். ஸ்டெண்ட் போடு என்று ஒரு கோஷ்டி. போடாதே என்று ஒரு கோஷ்டி. ஆயுர்வேதம் போதும், நேச்சுரோபதி தான் சிறந்தது, ஸ்டெண்ட் வைத்தால் அது கொஞ்ச வருடம் தான், காலம் முழுவதும் மருந்து சாப்பிடவேண்டும், மலையேறு, ஏறாதே, நட, நடக்காதே..... இப்படி நம் மண்டைக்குள் மேடை போட்டு சீமான் ரேஞ்சுக்கு பேசிக் கொண்டேயிருப்பார்கள்.
இவையெல்லாம் மீறி மனதில் ஒரு குரல் கேட்கும். அதை மட்டும் கேட்க வேண்டும். ஒவ்வொரு உடலும் ஒவ்வொரு வகை. எல்லோரும் ஒரே போல் உருவாக்கப்படும் எம்.ஆர்.எஃப் டயர் இல்லை.
மருத்துவமனையிலிருந்து பக்கத்தில் தான் ஜாகை பிடித்தோம்.
என் மனைவியின் முகத்தில் தெரிந்த கலவரம் மேலும் களேபரப்படுத்தியது.
பயமாயிருக்கா என்று வேறு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கேட்டுக் கொண்டிருந்தாள். நான் என்ன முடி வெட்டிக்கவா போறேன். கொஞ்சம் பயமாத்தான் இருக்கும் என்றேன் அவ்வப்போது.
காவேரி மருத்துவமனையின் பின்னே தான் இருக்கிறார் ஆஞ்சனேயார். பாங்க் ஆஞ்சனேயராம். வரப்பிரசாதி.

நடந்தே சென்று அட்மிட் ஆகுமுன் ஆஞ்சனேயரை ஒரு எட்டு பார்த்து விட்டுத் தான் காவேரி மருத்துவமனைக்கு நடந்தேன்.
ஆஞ்சனேயா ஆஞ்சியோவுக்கு துணைக்கு வா.........
ஒரு இரவு நேரத்தில் விமானம் தரையிறங்கியது. அடுத்த நாள் காலை பத்து மணிக்குள் கைமணிக்கட்டிலிருந்து ஒரு டியூப் வழியாக நெஞ்சத்தின் ரத்தக் குழாய்களுக்குள் நுழைந்து அடைபட்டிருந்த சமாச்சாரங்களை நீக்கி மீண்டும் புது ரத்தம் பாயச் செய்து விட்டார் கே.பி.சுரேஷ்குமார்.
எந்த இதய நோய் மருத்துவராக இருந்தாலும் இதைத் தான் செய்திருக்கக் கூடும்.

(மருத்துவர் சுரேஷ்குமார். இருதய நோய் நிபுணர்)
ஆனால் சுரேஷ்குமார் கொஞ்சம் ஸ்பெஷல் எப்படி எனில் அம்மாவை மூச்சு வாங்க ஒரு நாள் கூட தாங்கமாட்டாள் என்ற நிலையில் ஆஞ்சியோ செய்ய வேண்டும் என்ற ஒரு மருத்துவரிடமிருந்து பல வருடங்களுக்கு முன் காப்பாற்றியவர் அவர்.
ஒரே நாளில் அம்மாவை ஆசுவாசப்படுத்தி நிலையாக இருத்தி பல வருடங்களுக்கு அவளை எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொண்டவர் அவர். அவருடன் இணைத்து சுகரை சுகராக வைத்துக் கொண்ட மருத்துவர் சுரேந்தர்.

(எம்.ஆர்.சி நகரில் கிளினிக் வைத்திருக்கும் மருத்துவர் சுரேந்தர் பேசினாலே போதும். மருந்து இல்லாமலே சுகரை குறைத்து விடுவார். அத்தனை மென்மையான பேச்சும் அணுகுமுறையும்)
இதயத்தின் ரத்தக் குழாய்களுக்குளே விரவிக் கொண்டே பேசுகையில், எனக்கு உன் நெஞ்சமெல்லாம் அம்மாவின் பிம்பம் தான் தெரிகிறது என்று சொல்லிச் சிரித்தார் சுரேஷ்.
அருகிலிருந்த மருத்துவர்களிடம், இவரது தாய் என்னை பார்க்கவரும் போதெல்லாம் மருத்துவ ரிப்போர்ட் கொண்டு வராவிட்டாலும், குழிப் பணியாரமும் காபியும் கொண்டு வந்து விடுவார் என்று சொல்லிச் சிரித்தார்.
மருத்துவம் எத்தனையோ முன்னேறி விட்டது.
கையை அசைக்காமல் படுக்க வைத்து விட்டு குழாய்கள் இருதய வாவ்வுகளில் இன்னமும் வியாபித்திருக்க, இரு உன் வீட்டாரிடம் பேசி விட்டு வருகிறேன் என்று பாதியில் டிவிஎஸ் பிஃப்டியை சர்வீஸ் விட்டு டீ குடிக்க போவது போல சென்றார்.
ஹலோ என்னங்க பாதில விட்டுட்டு போயிட்டார் என்று நான் கலவரமாக, இருங்க வந்துருவார் என்று யாரோ ஒரு நர்ஸின் குரல் கேட்டது.
சிறிது நேரத்தில் வந்தார். ஓகே. இன்னும் ஒரு மணி நேரம் தான். ஸ்டெண்ட் போட்டு எல்லாம் சரி பண்ணிடலாம் என்ற சுரேஷிடம் இன்னும் ஒரு மணி நேரமாகுமா என்றேன்.
ஆபரேஷன் படுக்கையருகே முகத்தை க்ளோசப்பில் கொண்டு வந்து காதை செல்லமாக முறுக்கினார். " ஏன் எங்கியாவது போகணுமா ??" ஒரு மணி நேரம் ஆனால் என்ன என்று சிரித்தார் செல்லமாக.
ஆவட்டும் ஆவட்டும். ஒரு வேலை இல்லை என்றேன். எங்கே அவசரப்படுத்தினால் அடைப்பை பாதியில் விட்டுவிடுவாரோ என்ற பயம் வேறு இருந்தது.
அந்த கணத்தில் கையில் தொலைபேசியில்லை, கடிகாரமில்லை,வாட்ச் இல்லை, ஹெல்த் பேண்ட் இல்லை, எந்த வித தகவல் தொடர்பு சாதனமும் இல்லை. சிலுக்கு ஸ்மிதா போல அல்லது தமன்னா போல ஒரு கவுன், கையெங்கும் ஊசி குத்தி குழாய்கள்,கண்களில் கலவரம், வெளியே நிற்கும் சொந்தங்களும், நட்புகளும் என்ன மன நிலையில் இருக்கிறார்களோ என்ற கவலை, ஒரு விமானத்தில் ஏறி அமர்கையில் நம் வாழ்க்கையின் சந்தோஷங்களை, நம்பிக்கைகளை எதிர்கால திட்டங்களை முன்பின் தெரியாத விமானியிடம் ஒப்படைப்பது போல, நன்கு தெரிந்த ஒரு மருத்துவரிடம் ஒப்படைத்து விட்டு அக்கடா என்று படுக்க மட்டுமே நம்மால் முடியும் என்ற எண்னம் வருகையில்.....
வாழ்க்கை மிக மிக அற்பமாக தெரியும் நேரம்.
முகத்தில் பொருத்திய ஆக்சிஜன் முகமூடி மேலே ஏறி ஏறி கண்னை மறைத்தது.... அது ஒன்று தான் உபாதை. மற்றபடி எல்லாம் சடுதியில் முடிந்து விட்டு படுக்கையில் கிடத்தி, கிட்டத்தட்ட மறு ஜென்மம் உணர்வு.
சுரேஷ்குமார் கையைப் பிடித்துக் கொண்டு மறு பிறவி கொடுத்து விட்டீர்கள் என்ற போது நான் என்ன செய்தேன் எல்லாம் அவன் செயல் என்று இறைவனுக்கு நன்றி சொன்னார்.

ஆஸ்பத்திரி ஒரு போதிமரம். அந்த கட்டிலில் கிடைக்கும் ஞானோதயங்களும், சூளுரைகளும் வேறு எங்கும் நிகழ்வதில்லை.
போகிறபோக்கில் மஹாத்ரேயாவிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியதற்கு எப்பொழுதேனும் தான் பதில் போடுவார். அப்படி ஒரு பதில் வந்தது வேறு கண்ணை நனைத்தது.
எத்தனை பிரார்த்தனைகள். எத்தனை வாழ்த்துக்கள். உலகில் பல நாடுகளிலிருந்து என் நலம் விரும்பிகள் அனுப்பிய குறுஞ்செய்திகள்......
சுற்றிலும் பாட்டிகள் சூழ ஒரு நாள் படுத்திருக்க வேண்டி வந்திருந்து. எல்லாம் என்.ஆர்.ஐ பாட்டிகள்.
நாங்க பிராமிண்ஸ் எப்ப வேணா காபி கேட்போம் மோர் கேப்போம் கொடுக்கணும் என்று அடம் பிடித்த பாட்டி, எதிரே தண்ணீர் கொடுக்க கூடாது என்ற அடக்கி வைக்கப்பட்ட பாட்டி, அதோ அவருக்க்கு மட்டும் சூடா பால் கொடுக்கறேளே என்று என்னை கைக்காட்டி கோள் சொன்ன ஸ்வீட் பாட்டி, அவரது மகன் அக்மார்க் என்.ஆர்.ஐத் தனதுடன் மருத்துவர்களிடமும் நர்ஸுகளிடமும் பேசி அளவளாவிய காட்சி, பக்கத்தில் மனைவியை அட்மிட் செய்து விட்டு தொலைபேசியில் யாரிடமோ அப்டேட் செய்து கொண்டேயிருந்த கணவன், இப்படி அத்தனை கதைகளையும் கவனித்துக் கொண்டே இருந்ததில் கை ரத்தம் கட்டிக் கொண்டு ஹெமடோமோவோ என்னவோ அதை சரி செய்கிறேன் பேர்வழி என்று ஒரு மருத்துவர் பாஹுபலி ரேஞ்சுக்கு கையை அழுத்தி வலியின் உச்சத்திற்கு சென்று உடலெல்லாம் வியர்த்து, பல்ஸ் கடககடவென கீழே பயணித்து... சுற்றிலும் எட்டு பேர் சூழ
ஏன் என்னை எட்டு பேர் சூழந்து பார்க்கிறீர்கள் என்றதும் நீங்க கவுன்சிலர் இல்லையா அதான் என்று கலாய்த்த சுரேஷ்குமார்........
இன்னொரு விஷயம் ஆஞ்சியோ முடிந்த பிறகும் ஏராள உபதேசங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். வாட்சப் மருத்துவர்கள் நிறைந்த காலம் இது. போதாததற்கு கூகுள் ஜெமினி சனியன் வேறு. நீட் தேர்வு இல்லாமல் பாஸ் செய்த டாக்டர்கள் தொந்தரவு ஏராளமாக இருக்கும்.
"எமெர்ஜென்சி மருத்து கொடுத்துருப்பாங்களே"
"பத்து நாள் முன்னாடி உடம்பு வேற இப்ப வேற ஏதோ ஒன்னு மிஸ ஆவது ஆக ஜாக்கிரதை"
"எப்பவுமே சார்பிட்ரேட் வைத்துக் கொள்"
"எனக்கு தெரிஞ்சு இப்படித்தான் ஒருத்தர்..."
"பிளட் தின்னர் எடுக்கும் போது கத்தியை எடுக்காதே..காய்கறி வெட்டாதே"
இப்படி பல விதமான டயலாக்குகளை கடக்க வேண்டியிருக்கும். பொறுமை, பொறுமை மட்டுமே இதற்கு தீர்வு. ஆல் இஸ் வெல் ஆல் இஸ் வெல்... சொல்லிக் கொண்டேயிருப்பது நலம்.
மீண்டும் ஆஞ்சனேயர் சன்னதி. என்னப்பா ஆஞ்சியோ முடிந்தத என்று வெணைக்காப்பினுள் இருந்து சிரித்த படி கேட்டார்.
அருகே கையில் மருத்துவ சோதனைகளை இடுக்கிக் கொண்டு இன்னொரு ஆஞ்சியா ஆசாமியை கவனித்துக் கொண்டிருந்தார் ஆஞ்சினேயர்.
ஆஸ்பத்திரி ஒரு போதிமரம். அந்த கட்டிலில் கிடைக்கும் ஞானோதயங்களும், சூளுரைகளும் வேறு எங்கும் நிகழ்வதில்லை.

முக்கியமான பின் குறிப்பு. ஆஞ்சினேயர் ஆஞ்சியோவிற்கு முன் என்றால் எல்லாம் முடிந்த உடன் இருதயாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று ஒரு நன்றி சொல்வதும் தற்போது மரபு.
திருநின்றவூரில் இருக்கும் பூசலார் கட்டிய கோவில் இது.

Leave a comment
Upload