தொடர்கள்
சினிமா
காவியத்தலைவி சௌகார் ஜானகி- மரியா சிவானந்தம்

20260721194650556.jpeg

முதலில் ஒரு நிஜ சம்பவம் ..

20260721193945527.jpeg

அப்போது எனக்கு பத்து வயது. இரவு முதல் ஷோ படம் பார்த்து விட்டு நான் அம்மா, அப்பாவுடன் திரும்பிக் கொண்டு இருந்தேன். இருவரும் படத்தைப் பற்றி பேசிக் கொண்டு வருகையில் நான் குறுக்கிட்டு,' அம்மா நானும் கலெக்டர் ஆவேன் மா" என்றேன். என் அம்மாவுக்கு ஒரே ஆச்சர்யம். நாம் கதையைப் பற்றி பேசுகிறோம். இவள் கலெக்டர் ஆகிறேன் என்கிறாளே " என்ற சந்தோஷத்துடன் கையைப் பற்றிக் கொண்டார். அதன் பின் கதையை மறந்து விட்டு நான் கலெக்டர் ஆவதைப் பற்றியே பேசிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம். அதன்பின் வீட்டில் நடந்த பல உரையாடல்களில் என் கலெக்டர் கனவும் கலந்திருந்தது.

20260721195121553.jpeg

அந்தத் திரைப் படம் பாலச்சந்தரின் இரு கோடுகள். கலெக்டராக நடித்து என்னைக் கவர்ந்தவர் சௌகார் ஜானகி.

அக்கால கதாநாயகிகளின் பிம்பத்தை உடைத்து, கறுப்பு கண்ணாடியும், கொண்டையுமாக கம்பீர ஆங்கிலம் பேசி மிடுக்காக வந்த கலெக்டர் ஜானகியை அன்று எனக்கு அத்தனை பிடித்திருந்தது.கண்டிப்பும் கனிவும் கொண்ட அந்த மிடுக்கான கலெக்டர் இன்றும் என் நினைவில் நீங்காமல் இருக்கிறார்.

20260721183457743.jpg

பாலச்சந்தரின் கதாநாயகிகள் ரசனையான பெண்கள். .

அக்கால கதாநாயகிகளின் பார்முலாவில் இருந்து விலகி , மாறுபட்ட சிந்தனையும், ஆளுமையும், நுண்ணிய உணர்வுகளும் கொண்ட கதாநாயகிகளைத் திரையில் காட்டினார் பாலச்சந்தர்.

அவர்களில் முதன்மையானவர் சௌகார் ஜானகி.

சுய சிந்தனை, சுய சார்பு கொண்டவராக, தன்மானம் மிக்கவராக ,குடும்ப அமைப்பின் உன்னதத்தை சிதைக்காமல், 'பெண்ணியத்துக்கு' புதிய பொருளைத் தரும் நாயகியாக திரையில் தோன்றி நம் மனத்தைக் கவர்ந்தவர் ஜானகி.

திரையில் எப்படி சித்தரிக்கப்பட்டாரோ அவ்வாறே நிஜ வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டியவர் சௌகார் ஜானகி.

அழகான ஆங்கிலம் அவரது அடையாளம். சமையலில் தேர்ச்சி பெற்றவர் என்பதால சிலகாலம் உணவகம் நடத்தினார். இறுதி வரை தனக்கு தேவையானதை தானே சமைத்து உண்டு தன்னைத்தானே கவனித்துக் கொண்டு இருந்தார். தன்னம்பிக்கையின் அடையாளமாக திகழ்ந்தார்.

சௌகார் ஜானகியின் பிற திரைப்படங்களும் என்னை மிகவும் கவர்ந்தன. பட்டுமாமியாக 'எதிர் நீச்சல்' படத்தில் பின்னி எடுப்பார். பாமா விஜயம் படத்தில் மூத்த மருமகளாக வந்து காமெடியில் கலக்குவார். தில்லு முல்லு' படத்தில் மீனாட்சி துரைசாமியை யாரால் மறக்க முடியும்?

சௌகார் நடித்த மற்றும் ஒரு திரைக்காவியம் " காவியத் தலைவி'. தேவி, கிருஷ்ணா என்று இரட்டை வேடத்தில் தாயும், மகளுமான இருவித தோற்றங்களில் நடித்திருப்பார். இரண்டு தோற்றங்களிலும் நடை, உடை, பாவனை அனைத்திலும் வேறுபாட்டைக் காட்டி நடித்திருப்பார்.

2026072118341815.jpg

"ஒருநாள் இரவு, பகல் போல் நிலவு கனவிலே என் தாய் வந்தாள் ' என்ற அப்படத்தின் பாடலைக் காட்சியுடன் கேட்டுப் பாருங்கள், ஜானகியின் முழுமையான திறமை தெரியும்.

மேலே சொன்ன அத்தனை படங்களும் பாலச்சந்தரின் படங்கள் என்பது ஓர் இனிய ஒற்றுமை. அவரது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் தலைச் சிறந்த நடிகையாக விளங்கினார் சௌகார் ஜானகி. இதே வரிசையில் பாலச்சந்தரின், "புதுப்புது அர்த்தங்கள்' படத்தில் வயது முதிர்ந்த மனைவியாக காதலுக்கு இலக்கணம் சொல்லும் 'ரூபி ஆண்டி' யாக நடித்திருப்பார்

இந்த திரைப்படத்தைப் பற்றி பேசாவிட்டால் நிறையவே நிறையாது.

அப்படம் 'புதிய பறவை ' . சிவாஜி, சரோஜாதேவி இருவரும் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். அவர்களுக்கும் மேலே ஒரு படி சென்று ஸ்டைலான 'சித்ரா ' பாத்திரத்தில் கொள்ளை கொள்வார். 'கோபால்,லதாவை எவ்வாறு நம்மால் மறக்க முடியாதோ சித்ராவையும் நம்மால் மறக்க முடியாது "பார்த்த ஞாபகம் இல்லையோ" பாடலும் அவரது உடையும், அலங்காரமும், நடனமும் அவ்வளவு அழகு. அத்திரைப்படத்தில் அவரது நடிப்பு அதிரடியாக இருக்கும் .

20260721183544703.jpg

உயர்ந்த மனிதன், பச்சை விளக்கு, பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், படிக்காத மேதை போன்ற படங்களில் சிவாஜியின் ஜோடியாக நடித்திருப்பார். அப்படங்களில் அவரது கதாபாத்திரம் தனித்தன்மையுடன் ஒளிரும்.

இவ்வளவு அழகான, திறமையான நடிகையை கண்ணீர் சிந்த வைக்கிறார்களே என்று நமக்கு கோபம் வரும் அளவுக்கு பல திரைப்படங்கள் இருக்கும்.

பாக்கியலட்சுமி , பார் மக்களே பார், பாபு, ஒளி விளக்கு போன்ற படங்களில் அவரைப் பிழிய பிழிய அழ வைப்பார்கள். சலிக்காமல் சோக நடிப்பில் ஜொலிப்பார்.

20260721183622268.jpg

இந்த திரைப்படங்களில் பாடல் காட்சிகளில் உயிரோட்டம் கலந்த நடிப்பை வழங்கி இருப்பார்.

" நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே "

"மாலைப் பொழுதின் மயக்கத்திலே ஓர் கனவு கண்டேன் தோழி "போன்ற பாடல் காட்சிகளில் ஒரு காவியத்தன்மை தெரியும்

ஒளி விளக்கு படப்பாடலான " ஆண்டவனே ,உன் பாதங்களை என் கண்ணீரில் நீராட்டினேன் " பாடல் எம்ஜியார் உடல் நலமின்றி இருந்த போது பட்டி தொட்டி எங்கும் இரவு பகலாக ஒலித்ததும், அந்த இசைத்தட்டு தேய்ந்ததும் நினைவுக்கு வருகிறது.

20260721195150190.jpeg

எழுபது ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் சாதித்த சௌகார் ஜானகி அம்மா, ஏழு தலைமுறை நடிகர்களுடன் நடித்துள்ளார்.

இளம் பெண்ணாக தன் பெண் குழந்தைகளுக்காக அவர் 1950 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு வந்தார். போராட்டம் நிறைந்த வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் நடத்தியவர். துணிவும், அறிவும், திறமையும் அவரது அடையாளமாகவே திகழ்ந்தன.

20260721183704458.jpg

தென்னிந்திய மொழிகளில் அவருக்கான இடம் நிலையானது. அவர் நடித்த பாத்திரங்களால் 'சிறந்த நடிகை ' என முத்திரை பதித்தவர். கலைமாமணி, பத்மஸ்ரீ விருது பெற்றவர். அவரது திரைசாதனைக்காக அரிசோனா பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் தந்தனர்

மீண்டும் முதல் பாராவுக்கு வருவோம். கல்லூரி முடித்த பின் நானும் கலெக்டர் ஆக ஐஏஎஸ் தேர்வு எழுதினேன். தேர்ச்சி பெறவில்லை. ஆனால் மத்திய அரசில் முதல் நிலை அலுவலராக உயர்ந்தேன். அவ்வுயர்வுக்கு காரணமான கலெக்டர் ஜானகி என்றும் என் நினைவில் உங்கள் நினைவில் என்றும் வாழ்வார்.

20260721195222824.jpeg

நம்மிடையே வாழ்ந்து மறைந்த காவியத்தலைவி சௌகார் ஜானகி !