மாணவர்கள் அறிவு ஜீவியாக மட்டும் இருந்தால் போதாது!- மயில்சாமி அண்ணாதுரை

பாடத்திட்ட வடிவமைப்பு குழு தலைவராக தமிழக அரசு இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை நியமனம் செய்திருக்கிறது. தமிழக கல்வி பற்றி அவரிடம் பேசினோம்.
ஒவ்வொரு ஆட்சியின் போதும் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்று ஒரு குழு அமைப்பது வாடிக்கையான விஷயம் என்று ஆகிவிட்டதா ?
இதை நாம் வாடிக்கையான விஷயம் என்று ஒதுக்கி விட முடியாது கல்வியில் இப்போது மாற்றங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. சொல்லிக் கொடுக்கும் முறையே சில நாடுகளில் மாற்றி இருக்கிறார்கள். பாடச்சுமை, புத்தகப் பை சுமை இவற்றையெல்லாம் கூட மாற்றி இருக்கிறார்கள். நாமும் மாறுவதில் எந்த தவறும் இல்லை. நான் ஏற்கனவே முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் புதிய பாடத்திட்டத்திற்கு அமைக்கப்பட்ட குழுவில் உறுப்பினராக இருந்தேன். இப்போது அந்த குழுவின் தலைவராக இருக்கிறேன்.
தமிழகத்தை பொறுத்தவரை பள்ளிக் கல்வி இலவசம். மாணவர்கள் வந்தால் மட்டும் போதும் என்ற சூழ்நிலையில் பொதுத் தேர்வில் தனியார் பள்ளியுடன் அரசுப்பள்ளி போட்டி போட்டு வெற்றி பெற முடியவில்லை ஏன்?
இதில் மூன்று பேருக்கு பொறுப்பும் கடமையும் இருக்கிறது ஆசிரியர், பெற்றோர் ,மாணவர் இப்படி வரிசைப்படுத்தி பார்க்க வேண்டும் ஆசிரியர் முழுமூச்சோடு தனது ஆசிரியர் கடமையை செய்தால் தனியார் பள்ளியுடன் போட்டி போடுவது சாத்தியம்தான். பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பியதுடன் நமது கடமை முடிந்து விட்டது என்று நினைக்காமல் மாணவர் என்ன படித்தார் இன்று என்ன பாடம் நடந்தது போன்றவற்றை கேட்டறிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்விதான் நமது எதிர்காலத்தை வடிவமைக்கும் என்ற உண்மையை தெரிந்து கொண்டு படிப்பில் கவனம் செலுத்தினால் எல்லாமே சாத்தியம் தான்.
சென்னை மாநகராட்சியில் குறிப்பிட்ட சில பள்ளிகள் மட்டும் பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெறுகின்றன. மற்ற மாநகராட்சி பள்ளிகள் அப்படி சாதிப்பதில்லை அது ஏன்?
நீங்கள் அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள் ஏன் போட்டி போட முடியவில்லை என்று கேட்டீர்கள் அதற்கு மூவரின் கடமை பற்றி சொன்னேன். நான் குறிப்பிட்ட ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்திருக்கிறார்கள். அதனால் இது சாத்தியம். இது மற்ற மாநகராட்சி பள்ளிகளும் முன்னுதாரணமாகக் எடுத்துக்கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
அரசு பள்ளி மாணவர்களை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை எந்த சூழலிலும் கூடாது. தனியார் பள்ளிகளிலும் கற்பிக்கும் அதே பாடங்களை தான் அரசு பள்ளியில் கற்பிக்கிறார்கள். பாடத்திட்டம் கொஞ்சம் மாற்றியமைக்கப்பட்டிருக்கும் அவ்வளவுதான். நான் அரசு பள்ளியில் தான் படித்தேன். இதை சொல்ல எனக்கு வெட்கமோ, தயக்கமோ,கூச்சமோ கிடையாது.
மொழி அரசியல் தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை பெரிய அளவு பாதிக்கிறது. இரு மொழிக் கொள்கையில் பிடிவாதமாக இருக்கிறது மாநில அரசு. மும்மொழிக் கொள்கையை கடைப்பிடித்தால் தான் நிதி என்கிறது மத்திய அரசு. இதை எப்படி பார்க்கிறீர்கள் ?
என்னைப் பொறுத்தவரை தாய் மொழிக் கல்வியே சிறந்தது. தாய் மொழியில் நாம் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக என்னுடைய அறிவியல் சிந்தனையும் அறிவுப்பூர்வமான ஆக்கபூர்வமான சிந்தனையும் என்னுடைய தாய் மொழியில் தான் இருக்கும். நான் அதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்வதற்கு அவர் அவர்களுக்கு புரியும் மொழியில் சொல்லலாம். என்னுடைய சிந்தனை தாய் மொழியில் தான் இருக்கும் இதை அரசியல் தலைவர்கள் புரிந்து கொண்டு என்ன படிக்கலாம் என்பதை மாணவர்களிடம் விட்டுவிட்டால் பிரச்சனை கிட்டத்தட்ட முடிந்தது போல ஆகிவிடும்.
ஆரம்பக் கல்வி உயர்நிலைக் கல்வி இவை இரண்டையும் இப்போது வித்தியாசப்படுத்தி விட்டது போல் தெரிகிறதே.
நான் அப்படியெல்லாம் பார்க்கவில்லை. ஆரம்பக் கல்வி என்பது அடிப்படைக் கல்வி. அதில் மாணவரின் புரிதல், தேர்ச்சி இதெல்லாம் தான் அவரை உயர்கல்வியில் எளிதில் உட்கார வைக்கும். அந்தப் பாடங்களையும் அவர் கற்றுத் தேர்வதற்கு அவருக்கு எளிதாக இருக்கும். ஆரம்பப் பள்ளி கல்வி உயர்நிலைப் பள்ளி கல்வி இரண்டையும் அவர் தாய் மொழியில் படிப்பது தான் நல்லது. அதற்காக நான் ஆங்கிலத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆங்கிலம் மட்டுமல்ல எந்த மொழியையும் புறக்கணிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆங்கிலமோ இந்தியே எதுவாக இருந்தாலும் அதுவும் ஒரு மொழி என்ற அளவில் தான் அதன் பயன்பாடு இருக்க வேண்டும். தாய் மொழியை புறக்கணித்து எந்த மொழியை திணித்தாலும் அது கல்விக்கு வெற்றியை தேடி தராது.
ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள் இது அனைத்து பள்ளிகளுக்கும் சாத்தியமா ?
இதற்கான பணிகள் எனக்குத் தெரிந்த முதலிலேயே தொடங்கி இருக்கு. நீங்க பார்த்தீங்கன்னா, பல தன்னார்வலர்களை வச்சுக்கிட்டு நாம ஒரு ஒரு இதுவா ஆரம்பிச்சோம், பைலட் மாதிரி ஆரம்பிச்சோம். நானே கடந்த 4-5 வருஷமா நான் படிச்ச பள்ளிகள் எல்லாத்துலயும் ஸ்மார்ட் கிளாஸ் கிட்டத்தட்ட கொண்டு வந்திருக்கோம். அதே மாதிரி, ஒரு முதல் கட்டமா ஒரு 500-600 வகுப்புகள் வந்துச்சு. அப்புறம் அப்படி மெதுவா மெதுவாக வந்து, கிட்டத்தட்ட 80% - 85% மேற்பட்ட வகுப்புகள்—அதாவது ஆரம்பப் பள்ளிகளுக்கு—இது வந்து சாத்தியமாகி இருக்குது. கிட்டத்தட்ட 22,000-க்கும் மேற்பட்ட பள்ளிகள்ல இது சாத்தியப்படுத்தப்பட்டிருக்கு.
கொஞ்சம் குறைவாக இருக்கு, கொஞ்சம் கம்மியா இருக்கு. அதையும் நிவர்த்தி செய்வதற்கு முயற்சி பண்ணுவோம். அதுவும் கூட அந்தப் பள்ளியில் இருக்கக்கூடிய உட்கட்டமைப்பை ஸ்மார்ட் கிளாஸ், ஸ்மார்ட் போர்டு வைக்கிற அளவுக்கு கொஞ்சம்... அதுவும் மாற்ற வேண்டியிருக்கு. சில இடங்களில் அப்படியே கொண்டு போக முடியாது. அது மாற்றப்படும். அது மாதிரியான பள்ளிகள் மிகக் குறைவுதான். ஆனால் அதற்குப் இப்போது முயற்சி எடுத்து பண்ணனும். அவங்களுக்கு வந்து அனேகமாக ஸ்மார்ட் போர்டைத் தாண்டியும் கூட சில சலுகைகள், சில சிறப்புகள் கொடுக்கணும் அப்படின்னு விவாதித்துக் கொண்டிருக்கிறோம். முடிஞ்சா அதுவும் போய் சேரும்னு நினைக்கிறேன்.
இப்போது இருக்கிற நிலைமையில் அது முடியும்னு நினைக்கிறேன். கிட்டத்தட்ட 80 - 85% வகுப்பறைகளுக்குப் போய்ச் சேர்ந்துடுச்சு.
மாணவர்களே கேள்வி கேட்டு அதற்கான பதிலை அவர்களே கூறும் வகையில்பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று சொல்லி இருக்கிறீர்கள் அதை சற்று விளக்கமாக சொன்னால் நல்லது !
இந்த முறை ஆக்சுவலா வந்து, நான் சிறு வயதில் இருக்கும்போது என்னுடைய வகுப்பில் நடந்ததுதான். இது எப்படி அப்படின்னா, ஒரு பாடம் படிக்கிறோம். அந்த பாடத்தைப் படிச்சிட்டு, பாடத்திற்குப் பின்னால புத்தகங்களில் ஒரு கேள்வி இருக்கும். அந்த கேள்விக்குப் பதில் தேடிக் கண்டுபிடிக்கிறதைத் தாண்டி, வரிக்கு வரி படிப்பாங்க. படிச்சுகிட்டு அதில் மனசில் தோன்றதை ஒரு கேள்வியாக வரலாம் அப்படிங்கற மாதிரி.
அதாவது, "பூமி தன்னைத்தானே சுற்றி வர 24 மணி நேரம்"—அது 23 மணி நேரம், 54 மணித்துளிகள் அப்படி எல்லாம் வருது இல்லையா, 56 வருதில்ல—அப்படி படிக்கிறோம். ஆனால், இப்போது இப்படி பூமி ஆண்டாண்டு காலமாக எப்படி சுத்திக்கிட்டே இருக்குது, இதற்கு விசை கொடுப்பது யாரு? இந்த கேள்வி நான் கேட்டிருக்கேன் சின்ன வயசில். இந்த கேள்விக்கான பதில் அந்தப் புத்தகத்தில் இல்லாம இருக்கலாம். ஆனால், பதிலை ஆசிரியர்கள் அவங்களும் தேடணும் அப்படிங்கற மாதிரி வச்சுக்கோங்களேன்.
இதுமாதிரி பாடத்தில் இருக்கிறதையும் தாண்டி சில கேள்விகள் கேட்கலாம். பாடப்புத்தகத்திலேயே பார்த்தீங்கன்னா ஒரு இரண்டு பக்கம் இருக்குதுன்னா, இரண்டு பக்கத்திற்கு ஒரு ஐந்து கேள்வி, ஆறு கேள்வி கேட்டிருப்பாங்க. இதைத் தாண்டியும் கூட உபரியாக கேள்விகள் கேட்கலாம். நான் படிக்கும்போது அப்படித்தான் பண்ணுவோம். ஆசிரியர்கள் வந்து இரண்டு குழுவாக பிரிச்சிடுவாங்க. ஒரு குழு வந்து அதே மாதிரிதான், பின்னால் இருக்கிற கேள்வியைத் தாண்டி வேற ஏதாவது கேள்விகள் அந்த புத்தகத்தில் இருந்து எடுத்துக்க முடியுமா அப்படின்னு கேள்வி கேட்டு, அதை பார்த்து கேள்வி கேட்க சொல்வாங்க. இன்னொரு குழு வந்து அதற்குப் பதில் சொல்லும்.
அதே மாதிரி அடுத்த குழு வந்து இந்த பாடத்தில் ஏதாவது ஒரு வரியை எடுத்து அவங்க கேள்வி கேட்பாங்க. அந்த கேள்விக்கான பதில் மாணவர்கள் முழு பாடத்தையும் படிச்சிருந்தாங்கன்னா சொல்ல முடியும். முழு பாடத்தையும் படிச்சு புரிஞ்சிருந்தாங்கன்னா சொல்ல முடியும் அப்படிங்கற வகையில் தான் அது எல்லா பாடத்திற்கும் வரும். அதனால் என்ன ஆகுதுன்னா, எல்லா பாடத்தையும் பதில் சொல்வதற்காக படிக்கிறது ஒன்று, கேள்வி கேட்பதற்காக என்ன கேள்வியாக கேட்கலாம் அப்படிங்கறது ஒன்று.
இதை வந்து ஆசிரியர்கள் எல்லாம் ஒத்துக்கிட்டாங்க. ஏன்னா, சில சமயம் இதுமாதிரி அவங்க அதைத் தாண்டி ஒரு கேள்வி கேட்கும்போது ஆசிரியர்கள்... மாணவர்கள் பதில் சொல்றாங்க. அப்புறம் இதை நாம் ஊக்குவிச்சுட்டே போனோம்னா, அது மாதிரியான மாணவர்கள் நாம் மேலே கொண்டு வர முடியும். கிட்டத்தட்ட எல்லாரையும் எல்லாருமே வந்து பாடத்தில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்க முடியும்.
இந்த கேள்வி கேட்கிறது ஆசிரியர் மட்டும் இல்லை, மாணவனும் கேள்வி கேட்கலாம் அப்படிங்கறது இன்னொரு வகையான ஒரு மன ரீதியில், தானும் பங்கெடுக்கிறேன் அப்படிங்கற ஒரு இதை கொடுக்க முடியும். இது என்னுடைய அனுபவம். இது சரியாக வரும்னு நினைக்கிறேன்.
கற்றுக்கொள்ளும் முறையை மாற்ற முயற்சித்து வருகிறோம் என்று உங்கள் முயற்சிக்கு ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அவசியம் தேவையே அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
ஆசிரியர்கள் அந்த பாடத்திட்டத்திற்கு கண்டிப்பா தேவை. அதற்கு பல வழிகளில் எடுக்கிறோம். ஒன்று வந்து கண்டறியப்பட்ட சில ஆசிரியர்கள்—தேர்ந்தெடுக்கப்பட்ட சில ஆசிரியர்கள்னு வச்சுக்கோங்களேன்—கிட்டத்தட்ட ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒருத்தர் இருக்கிற மாதிரி இருக்கும், ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் அதுமாதிரி. அவங்களே வந்து இந்த பாடத்திட்டத்திலிருந்து அதை புத்தகமாக மாற்றுகிறோம் இல்லையா, அந்த புத்தகமாக மாற்றக்கூடிய அந்த பாடங்களுக்கு அதைப்பற்றி நாம் விவாதிப்பது, அதை பாடமாக நாம ஒரு அச்சடி வடிவில் கொண்டு வருவோம் இல்லையா, அதுவரைக்கும் அவங்களும் பங்கெடுப்பார்கள். ஆக, ஆசிரியர்களுடைய பங்களிப்பும் அதில் இருக்கும்.
வகுப்புக்குத் தகுந்த மாதிரி, மாணவர்களுக்குத் தகுந்த மாதிரி எப்படி பாடத்திட்டம் என்று சொல்லி இருப்போமோ, அந்த பாடத்திட்டத்தை எடுத்து அந்த வரைவிலிருந்து பாடமாக மாற்றும்போது அவர்கள் இருக்கிறார்கள், ஆசிரியர்களுடைய பிரதிநிதிகள் மாதிரி இருக்கிறார்கள் ஆசிரியர்கள். அப்புறம் அவர்களும் அதை கற்றுக்கொடுப்பதற்கு சேர்த்துக்கொண்டு, இப்போது வந்து பாடப்புத்தகத்திலேயே முதலில் வந்து ஆசிரியர்களுக்குத் தனியாக இருப்பது மாதிரி இல்லாமல், பாடப்புத்தகமே கிட்டத்தட்ட அதுமாதிரி வருகிற மாதிரி இருக்கும். அப்புறம் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் மேற்கொள்ளப்படும்.
அந்த வகையில், இப்போது இருக்கக்கூடிய முறையில் நிறைய செய்ய முடியும். இப்போது ஆன்லைன் வகுப்பு எல்லாம் வந்திருக்கிறது, இதுமாதிரி எல்லாம் வந்திருப்பதனால் அதை வைத்துக்கொண்டு அவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸஸ் எப்படி எடுப்பது அப்படிங்கறது. அப்போ அதற்கான ஸ்மார்ட் கிளாஸ் எடுக்க, பாடத்திலிருந்து அது ஸ்மார்ட் போர்டுக்குப் போகுது இல்லையா, அதையும் வந்து இருக்கக்கூடிய சில குழுக்கள் இன்ஜினியர்கள் இருக்கிறார்கள், அவர்களை வைத்து பாடத்தையும் அதற்குத் தகுந்த மாதிரி மாற்றுவோம்.
புத்தகம், மாணவர்கள், வகுப்பு, அந்த ஸ்மார்ட் போர்டு, அப்புறம் அதை வைத்து சுற்றுப்புற சூழல்—இதையெல்லாம் வைத்து பாடம் எடுப்பதற்கான வழிமுறைகள் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படும்.
ஆசிரியர்கள் முதலிலிருந்தே பயணிக்கிறார்கள். ஆசிரியர்களுடன் நாங்களும் பயணிக்கிறோம். பெற்றோர்கள், மாணவர்கள் அவர்களுடைய ஃபீட்பேக்கும் வரும். இதெல்லாம் சேர்ந்து சிறப்பாகப் போகும் என்று நினைக்கிறேன்.
தற்காலத்தில் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு ஆளுங்கட்சித் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு இவையெல்லாம் பாடத்திட்டங்களில் முக்கியத்துவம் தரப்படுகிறது. மொழி கலை பண்பாடு அறிவியல் இவையெல்லாம் பின்னுக்கு தள்ளப்படுகிறது இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.

ஒரு மாணவன் மொழி, கலை,பண்பாடு, அறிவியல் அப்படி எல்லாவற்றையும் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும். ஒரு மாணவன் அறிவு ஜீவியாக மட்டும் இருந்தால் அது அவர் வாழ்க்கைக்கு பயனாகாது.

Leave a comment
Upload