
“அப்பா”... உரத்தக் குரலில் அழைத்தபடி அவர் அறைக்குள் நுழைந்தேன்.
இரு கண்களையும் இறுக்க மூடி, ஈஸி சேரில் சாய்ந்திருந்தார் அப்பா. ஏதோ ஒரு யோசனையில் அப்பா இருப்பதாய் நினைத்தேன். அவர் முகம் மட்டு்ம் வெளிறி இருந்தது ,
“அப்பா”.... மீண்டும் உரக்க அழைத்தேன்.
“என்னடா சொல்லு?” வழக்கமாக கேட்கும் மனிதர், இன்று வாயே திறக்கவில்லை .
“உன் ஆசைப்படி தேடிக் கண்டு புடிச்சிட்டேன் பா.நாளைக்கே நீ ரெடி ஆயிடு”
இதைச் சொல்லத்தான், அப்பாவை ஆசையோடு அழைத்தேன்.ஆனால் அப்பாவின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை.
அப்பாவின் ஆசை சுதந்திரமாக இருப்பதுதான். பெரிய குடும்பத்தில் பிறந்தவர்.அக்கா,தங்கை,அண்ணன், தம்பி என்ற பாசம் அதிகமுண்டு.. உதவிகள் செய்ய ஓடோடி வருவார். .அவர்களோடு ஒன்றி வாழ மட்டும், ஏனோ எப்போதும் எத்தனித்ததில்லை .
சுதந்திரம்…சுதந்திரம்…இந்த மந்திரச் சொல் அவர் மனமெங்கும் மண்டிக்கிடந்தது.
அப்பாவுக்கு அரசாங்க வேலை. .மாவட்டந் தோறும் அடிக்கடி மாற்றல் வரும்,
விதவிதமான மனிதர்களின் சந்திப்பு, பல் வேறு பழக்க வழக்கங்கள்.... பார்த்து மகிழக் கோயில், குளம், ஆறு, அணைகள் என எத்தனை இடங்கள்.
அத்தனை இடங்களுக்கும் அம்மாவையும், அக்காவையும், என்னையும் அப்பா அழைத்துச் செல்லத் தவறியதில்லை. அவர் சுற்றாத ஊரில்லை; தொழாத தெய்வமில்லை.
வேலையின் பளுவால் , சில நாட்கள் வீடு திரும்ப நெடு நேரமாகும். அப்பா திரும்பி வரும்போது நாங்கள் தூங்கிக் கொண்டிருப்போம்.ஆசையோடு வாங்கி வந்த ஸ்வீட்ஸை, எங்கள் தூக்கத்தை கலைத்து, தந்து மகிழ்வார்.
எங்களைத் தேடி வரும் உறவினர்களை உபசரித்து, அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று அசத்துவார்.
ஆனாலும், தனித்தே இருக்கவேண்டும் என்ற இறுக்கமான எண்ணம், அவருக்குள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்..
எங்கள் படிப்பு,திருமணம் என தன் கடமைகளை முடித்து விட்டு, விஸ்ராந்தியாய் வாழ நினைத்தார்.
பணி ஓய்வுபெற்ற பின் , பென்ஷன் பணம் கை நிறைய வருது . என் தாயோடு தனித்து வாழவே ஆசைப்பட்டார்.
என்னை விட்டுத் தனியாகப் போய் வாழ்வதை என் தாய் மறுத்தாள்.
“என் பேரன், பேத்திகளோடு சேர்ந்து வாழ்வதை விட்டுத் தனியாக வாழ்வதா?”.
என் அம்மா எழுப்பிய குரலில், அப்பா அடங்கிப் போனார்,
அப்பாவுக்கு தன் சுதந்திரம் பறி போவதில் சம்மதம் இல்லை. இருந்தும் என் தாயின் பேச்சைத் தட்ட முடியவில்லை. கட்டிப் போட்ட கன்று போல் இருந்தார். தனித்து வாழும் தன் சுதந்திரம் பறி போவதை நினைத்து ஏங்கலானார்.
திடீரென சம்பவித்த என் தாயின் மரணம், அப்பாவை நிலைகுலைய வைத்தது. என் அம்மாவின் இழப்பில் தன் சுதந்திரம் அடியோடு பறி போனதாய் நினைக்கலானார்.
இழந்த சுதந்திரத்தை ஈடு செய்ய, செய்தித்தாள்களில், முகநூலில் எதையோ தேடத் தொடங்கினார். அப்பா எதைத் தேடுகிறார் என்று புரியாமல் நானும் குழம்பினேன்.
ஒரு நாள் திடீரென என்னை அழைத்து,
“இந்த சீனியர்ஸ் லிவிங் கம்யூனிட்டி எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வா” என்று என்னிடம் சொன்னார்.
நான் திடுக்கிட்டேன், “எதுக்கு இப்ப சீனியர்ஸ் லிவிங் கம்யூனிட்டி. யாருக்குப் பார்க்கிற” என்று கேட்டேன்.
“எனக்குத்தான் ” என்றார்.
என் கோபத்தை அடக்கிக்கொண்டு,
“உனக்கு எங்களோடு இருக்கிறதுல என்ன கஷ்டம். உன் பேரன் பேத்திகளோடு தினம் சந்தோஷமா விளையாடிகிட்டு தானே இருக்க. எந்த குறையும் உனக்கு நாங்க வைக்கல. .
எப்படிப்பா எங்களை விட்டுட்டு தனியா போகணும்னு நினைக்கிற. நீ இல்லாம, உன் பேரன் பேத்திகள் வருத்தப் படுவாங்களே. அதை யோசிச்சு பார்த்தீங்களா.
வேளாவேளைக்கு அக்கறையோடு மருந்து கொடுக்கிற என் மனைவி எப்படிப்பா உன்னைத் தனியா விடுவாள்”..
கோபத்தில், என் ஆதங்கத்தை நான் கொட்டி முடித்தேன்.
என்ன சொல்லியும் கேட்காத அப்பா ,
“என்னை கொஞ்சம் தனியா விடு.கொஞ்சம் சுதந்திரமா இருக்க ஆசையாய் இருக்கு” என்று அப்பா சொன்னதும் தடுமாறிய என் மனம் தளர்ந்தது.
சுதந்திரமாய் இருப்பதுவே அப்பாவின் ஆசை. அதை நிறைவேற்றுவது என் கடமை.,
அவர் குறித்துக் கொடுத்த அந்த சீனியர்ஸ் லிவிங் இடத்தை பார்த்து விட்டு, அப்பாவுக்கு இது மிகவும் பொருத்தமான இடம் என்பதைச் சந்தோஷமாகச் சொல்லத்தான், “அப்பா” என்று உரக்க அழைத்தேன்,.
“அப்பா கண்களைத் திறக்கவே இல்லை”.

Leave a comment
Upload