
சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கான அடிக்கல் இட்டவர் முதல் பாரதப் பிரதமர் நேரு.
நேரு யுகத்தில் நாட்டில் புதிய அனல்மின் நிலையங்கள் எழுந்தன. அணைக்கட்டுகள் கட்டப்பட்டன. பிலாய், ரூர்கேலா, துர்காபூர் போன்ற இடங்களில் எக்கு உருக்காலைகள் தோன்றின.
பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அணு ஆராய்ச்சி துறை, இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சி கழகம், பல்கலைக்கழக மானிய குழு, மருத்துவ ஆராய்ச்சி கழகம் , ஐஐடி, என்று பல துறை வளர்ச்சிக்கான முயற்சிகளை தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கினார் நேரு.
தொழிற்சாலைகளை, அனல்மின் நிலையங்களை, அணைக்கட்டுகளை ' இந்தியாவின் கோயில்கள்' என்று வர்ணித்தார்.
நம் நாட்டுக்கு ஐந்தாண்டு திட்டங்கள் தந்தவர், உலகுக்கு 'பஞ்சசீல கொள்கை'யை அளித்து, நாடுகளிடையே நல்லுறவு , சமாதானம், பாதுகாப்பு, இறையாண்மையை உறுதி செய்தார்.
அவர் உழைப்பின் பலனை இன்று வரை நம் நாடு அனுபவித்து வருகிறது. அவர் வழி வந்த பிரதமர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்து நல்லாட்சி தந்து வருகிறார்கள்.
1980களில், இந்தியாவில் கணினி புரட்சி நடந்தது. தொழில்கள் வளர்ந்தன. கிராமங்கள், சிறுநகரங்களிலும் கல்விக்கூடங்கள் உருவாகின. மக்கள் கல்வியின் மேன்மையை உணர்ந்து அனைவரும் கல்வி பெற்றனர். பெண் கல்வி வளர்ந்தது. கல்வி அறிவு பெற்றோரின் விகிதம் உயர்ந்தது. தொழில்கள் பெருகின.
பாரதப்பிரதமர் பி.வி நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில், மன்மோகன் சிங் நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்த போது புதிய பொருளாதார திட்டம் உருவாக்கப்பட்டது. தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல், உலக மயமாக்கல் இம்மூன்றையும் உள்ளடக்கிய இத்திட்டம் இந்திய பொருளாதாரத்தில் பிரமிக்கத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்தது.
'ஏழைகளின் தேசம்' என்று நம்மை உலகம் பார்த்த பார்வை மாறி, அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் நாடாக இந்தியா மாறியது. ' IT BOOM' எனப்படும் தகவல் தொழிற்நுட்ப புரட்சி நிகழ்ந்தது பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், பூனா மற்றும் நொய்டா ஆகிய நகரங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் கட்டமாக ஐ.டி பூங்காக்களை நிறுவின.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்வீடன் போன்ற நாடுகள் தங்கள் தகவல் தொழிற்நுட்ப அலுவலகங்களை பிற பெருநகரங்களிலும் ஏற்படுத்தின. வேலை வாய்ப்புகள் பெருகின. நம் பொருளாதாரத்தை இவை பெரிதும் உயர்த்தின.
பெங்களூரு இந்தியாவின் 'சிலிகான் வேல்லி' ஆனது . சென்னையின் ஓ எம்.ஆர் பகுதி 25கி,மீ தூரம் வரை நீண்டுள்ளது. நூற்றுக்கணக்கான அலுவலகங்களை கொண்ட , பரந்த மிகப் பெரிய தகவல் தொழிற்நுட்ப பூங்காக்களை உள்ளடக்கிய IT CORRIDOR ஆக உள்ளது.
அவ்வாறே தானியங்கி வாகன தயாரிப்பில் பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் முதலீடு செய்து தொழிற்துறையில் பெரும் வளர்ச்சியைத் தந்துள்ளன. அவற்றுள் முதன்மை வகிப்பது ஜப்பான் ஆகும். ஃபுயுஜிட்ச்சி, பானாசோனிக், மிட்சுபிஷி எல்லாம் இந்திய பெயர்களாகவே மாறி விட்டன. இவ்வாறே பல தொழில்களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.
விண்வெளிப் பயணங்களில் பாரதம் வல்லரசு நாடுகளுடன் போட்டியில் நிற்கிறது. சந்திரயான் , மங்கள்யான், ஆதித்யா திட்டங்கள் சந்திரன், செவ்வாய் மற்றும் சூரியனை ஆய்வு செய்யும் விண்கலங்களை விண்ணில் அனுப்ப, ககன்யான் மனிதரை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 2017 ஆம் ஆண்டு 104 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் செலுத்தி இஸ்ரோ சாதனை படைத்தது.
2009 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் கார்டு, இந்தியர் அனைவருக்கும் அடையாளத்தைத் தந்தது. பிற நாடுகளுக்கும் இந்த அடையாள அட்டை ஒரு முன்னுதாரணம் என்று சொல்லப்படுகிறது
தங்க நாற்கர திட்டம் நமக்கு அருமையான நெடுஞ்சாலைகளை அளித்தன.
போர்க்காலங்கள், அவசர நிலை காலங்கள், உள்நாட்டு கலவரங்கள், பேரிடர் காலங்கள், கொரோனா, பூகம்பம், சுனாமி போன்ற பேரழிவுகளை இந்திய அரசு துணிவுடன் எதிர்கொண்டு மக்களை பாதுகாத்துள்ளது. அசைக்க முடியாத பெரும் சக்தியாக பாரத அன்னை திகழ்கிறாள்.
உலகின் மிகப் பெரிய இந்த குடியரசு நாட்டில் 18 பொதுத்தேர்தல்கள் அமைதியாக நடந்தேறி, நிலையான மத்திய அரசும் , நாடாளுமன்றமும் நமக்கு பெருமிதம் தருகின்றன.
'தூய்மை இந்தியா', 'மேக் இன் இந்தியா', 'ஒரு நாடு ஒரு வரி', 'ஒளிரும் இந்தியா' அனைவர்க்கும் கல்வி போன்ற முழக்கங்களுடன் இந்தியா முன்னேற்ற பாதையில் பீடுநடை போடுகிறது.
கல்வி, விளையாட்டு போன்ற துறைகளில் துவக்கம் முதலே நம் மக்கள் தடம் பதித்து வருகின்றார். அறிவியல் மேதைகள், கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், ஆரய்ச்சியாளர்கள் நல்ல அரசியல் தலைவர்கள்,விளையாட்டு வீரர்கள் என குறைவில்லா மனித வளத்தை இந்தியா பெற்றுள்ளது.
இந்தியாவின் புதல்வர்களும், புதல்வியரும் மூவர்ண கொடியை உயர்த்தி பிடித்து
"ஏழை யென்றும் அடிமையென்றும்
எவனும் இல்லை ஜாதியில்,
இழிவு கொண்ட மனித ரென்பது
இந்தி யாவில் இல்லையே
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம கிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே'
என்னும் பாரதியின் பாடலை கம்பீரக் குரலில் பாடுகிறோம்.
இந்தியாவின் கடைக்கோடி கிராமம் வரை எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.
வறுமை அகன்று வளமையே தழைக்க வேண்டும்.
வாழ்க பாரதமணித் திருநாடு

Leave a comment
Upload