
“ஆடி மாதம் முடிந்து ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும் என்பார்கள். ஆவணியில் வரும் அனைத்து நாட்களும் மங்கல நாட்களே” என்பது ஆன்றோர் வாக்கு.
ஆவணி மாதம் பக்தி, வேத பாரம்பரியம், இறைநம்பிக்கை மற்றும் ஆன்மிக ஒழுக்கத்தை வளர்க்கும் புனித மாதம். இந்த மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களில் பங்கேற்று, இறைவனை வழிபடுவதன் மூலம் உடல், மனம் மற்றும் ஆன்மா ஆகிய மூன்றும் ஒருசேர நல்வழி பெறவும் அமைதி அடையவும் செய்கிறது.
“இந்த ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பிறக்கும் ஆவணி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி வரை இருக்கிறது.”
சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் காலமே ஆவணி மாதம் என்கின்றன ஜோதிட நூல்கள். அகத்தியர் ஆவணி மாதத்தின் சிறப்பைப் பற்றிக் குறிப்பிடுகையில், “சிங்கத்திற்கு (ஆவணிக்கு) இணையான மாதமும் இல்லை; சிவனுக்கு இணையான இறைவனும் இல்லை” என்கிறார்.
சிரவண நட்சத்திரம் என்று வடமொழியில் அழைக்கப்படும் திருவோணத்தில் பௌர்ணமி வருவதால் இது சிரவண மாதம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. இந்த மாதமே வேதம் கற்றுக்கொள்ளத் தொடக்க மாதமாக இருந்து வந்துள்ளது.
ஆவணி மாத சிறப்புகள் :

பாற்கடலை அசுரர்களும் தேவர்களும் இணைந்து கடைய, அழுத்தம் தாளாத வாசுகிப் பாம்பு ஆலகாலம் என்னும் கொடிய நஞ்சை கக்கி விடுகிறது. இதனால் சகல தேவர்களும் அஞ்சி ஓட, ஈஸ்வரன், அந்த விஷத்தைத் தாம் ஏற்றுக்கொண்டு சர்வ லோகத்தினையும் காக்கிறார். ஈஸ்வரனுக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க அன்னை பராசக்தி தொண்டையைப் பற்றிக் கொண்டு அவரை நீலகண்டன் என்றாக்குகிறார். அதனால் அவர் உடல் உஷ்ணத்தால் மாறிவிடாது இருக்கத் தேவர்கள் அவருக்குக் கங்கையால் அபிஷேகம் செய்து, தலையிலேயே கங்கை மற்றும் சந்திரனை அமர வைத்து குளிர்ச்சியை உருவாக்குகிறார்கள். இவை அனைத்தும் ஆவணி மாதத்தில் நடைபெற்றது, என்கிறது புராணங்கள். இதனால் இந்த மாதத்தை ஈஸ்வரனுக்கு உரிய மாதம் என்றும் சொல்வர்.

ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் நடைபெற்றன.
இந்த மாதத்தில் இளையான்குடி மாற நாயனார், குலச்சிறை நாயனார், திருநீலகண்ட நாயனார், அதிபத்த நாயனார் போன்றோரின் குருபூஜைகள் வருகின்றன.
மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரைகளைக் கொண்டு வந்து மதுரையம்பதியில் ஒப்படைத்த ஆவணி மூல விழாவும் இந்த மாதத்தின் சிறப்பு.
அரசர்களில் சிறந்தவரான மகாபலி சக்கரவர்த்தி, வாமன மூர்த்திக்கு மூன்றடி தானம் கொடுத்தது இந்த ஆவணி மாத சிரவண துவாதசி நாளில்தான்.

சிரவண தீபம் என்று போற்றப்படும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் ஏற்றப்படும் இந்த தீபம் வேண்டுதலை நிறைவேற்றக் கூடிய அற்புத வழிபாடு என்பர். இந்த நாளில் திருமலை திருப்பதியில் உற்சவரான மலைப்ப சுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் திருச்சேவை தருவார். அப்போது அங்கே ஆயிரத்தெட்டு திரிகளைக் கொண்ட நெய் விளக்கு ஏற்றப்பட்டு அந்த பகுதியே ஒளிவெள்ளத்தில் மிதக்கும். இதனை சஹஸ்ர தீபாலங்கார சேவை என்பர்.
இம்மாதத்தில்தான் சாதுர்மாஸ்ய விரதத்தின் உச்ச தினங்கள் வருகின்றன.
குறிப்பாக ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு, ஆவணி அவிட்டம், புத்ரதா ஏகாதசி, காமிகா ஏகாதசி, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட பல விரத நாள்களும் இந்த மாதத்தில் வருகின்றன. மேலும் ஆவணி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் விரத முக்கியத்துவம் வாய்ந்த நாள்கள் என்கிறார்கள்.
ஆவணி சோமவார விரதமும் முக்கியமானது. ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் என்பதால் திங்களும் வியாழனும் சைவர்களுக்கு இன்றியமையாத நாள்கள் ஆகும்.
ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பது மிகவும் சிறப்பு. ஏனெனில் ஞாயிறு என்றாலே சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6.00 – 7.00 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும்.

தேகநலனுக்காக சூரிய நமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.
சூரிய நமஸ்காரம், யோகப் பயிற்சிகள், வேதம் பயில என ஆன்மிக திருவகுப்புகள் செல்ல ஏற்ற மாதம்.
புதிதாகத் திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் இருந்து அனுஷ்டிப்பார்கள். அதேபோல் ஆண்களும் தங்கள் விருப்பங்கள் நிறைவேற ஆவணி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கான நோன்பைக் கடைப்பிடிப்பார்கள்.
இந்த மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கைத் துணை சிறப்பாக அமையும்.
ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர்.
ஆவணி மாதத்தில் கிரஹப்பிரவேசம் செய்வது சிறப்பு.
விவசாயத்திலும் இம்மாதம் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி:

விநாயகர் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி ஆவணி மாதம் வளர்பிறையில் வரும் சதுர்த்தியில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, சிறப்புப் பூஜைகள், ஊர்வலங்கள் மற்றும் பக்தி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. விநாயகருக்குச் சர்க்கரைப் பொங்கல், மோதகம், அவல் பொரி, சுண்டல், விளாம்பழம், கொழுக்கட்டை, அப்பம் ஆகியவை நைவேத்தியமாகப் படைத்து, அறுகம்புல், வெள்ளெருக்கு, செம்பருத்தி ஆகியவை படைத்து வழிபடுவது சிறப்பானது.
கிருஷ்ண ஜெயந்தி:

ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியோடு வரும் ரோகிணி நட்சத்திர நாளில் ஸ்ரீகிருஷ்ணரின் அவதார தினமாகக் கொண்டாடப்படும் இந்த விழாவில், வீடுகளில் குழந்தை கிருஷ்ணரின் பாதச்சுவடுகள் வரையப்பட்டு, கிருஷ்ணருக்குப் பிரியமான பால், வெண்ணெய், இனிப்பு சீடை, முறுக்கு, அதிரசம், அவல், சீடை, தட்டை, தேன்குழல், இனிப்பு வகைகள், பழங்கள் ஆகியவை நைவேத்தியமாகப் படைத்து வழிபடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி விரதம் இருப்பவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வரலட்சுமி விரதம்:

வரலட்சுமி விரதத்தன்று வரலட்சுமி தாயாரை மனதால் வேண்டினால் அஷ்டலட்சுமிகளையும் வேண்டிய பலன் ஒரு சேரக் கிடைக்கும் என்பது ஐதீகம். வரலட்சுமி விரதத்தின் போது பெண்கள் வரலட்சுமி அம்மனுக்குப் பலவிதமான பூக்களால் அர்ச்சனை செய்து, தங்கள் கைகளில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டு, இனிப்புகள், பழங்கள், அன்னம், கொழுக்கட்டை, பாயசம், உளுந்துவடை, ஆகியவற்றை நைவேத்தியமாகப் படைத்து வழிபடுகின்றனர். திருமணமான பெண்கள் தங்கள் குடும்ப நன்மை, ஆரோக்கியம், தாலி பாக்கியம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றிற்காக வேண்டிக் கொண்டு இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள். கன்னிப் பெண்கள், நல்ல கணவர் மற்றும் வளமான வாழ்க்கை அமையவும் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்.
ஆவணி அவிட்டம்:

ஆவணி மாதத்தில் வரும் பௌர்ணமியை ஒட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படுவது ஆவணி அவிட்டமாகும். முக்கியமான வைதீக விழாக்களில் ஒன்றான இந்த நாளில் புதிய பூணூலை மாற்றிக் கொள்கிறார்கள். அடுத்த நாள் காயத்ரி ஜபம் அனுஷ்டிக்கப்படுகிறது.
ஓணம்:

ஆவணி மாத பௌர்ணமியை ஒட்டி வரும் திருவோண நட்சத்திரத்தில் ஓணம் பண்டிகை கேரளாவிலும், தென்தமிழகம் மற்றும் மலையாள மொழி பேசும் மக்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மஹா சங்கடஹர சதுர்த்தி:

ஆவணி மாதம் தேய்பிறை சதுர்த்தியில் வரும் சங்கடஹர சதுர்த்தி, மஹா சங்கடஹர சதுர்த்தி என அழைக்கப்படுகிறது. சங்கட ஹர சதுர்த்தி விரதம் இருப்பவர்களும் ஆவணி மாத மஹா சங்கடஹர சதுர்த்தியில் துவங்குகின்றனர். சங்கடஹர சதுர்த்தி வழிபாடு சௌபாக்கிய வாழ்வு தரக் கூடியது.
ஆவணி மூலம்:

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மூலம் விழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நாளில் சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்வுகள் நாடக வடிவில் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கப்படுகிறது. இது மதுரையின் முக்கிய ஆன்மிக விழாக்களில் ஒன்றாகும்.

“ஆன்மீகம் மிக்க ஆவணியில் இறைவனை வழிபட்டால் அருள் பெருகும்; அறம் வளர்ந்து வாழ்க்கை வளம் பெறும்.”

Leave a comment
Upload