தொடர்கள்
கொடுரம்
பெற்ற வலியா ?? பட்ட வலியா ?? விகடகவியார்

20260722085407424.jpeg

சமீபத்திய செய்தி ஒன்று ! நெஞ்சை உலுக்கி விட்டது.

நெஞ்சில் ஈரம் இருக்கும் யாருக்கும் அந்த செய்தியை படித்தவுடன் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்த மணவூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மாவதி.. இவருக்கு 70 வயதாகிறது.. இவரது கணவர் சேஷாத்திரி ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார்.. அதனால் பத்மாவதி தனது குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். பத்மாவதியின் 2வது மகனான பார்த்தசாரதி (43) என்பவரோடு அவர் வசித்து வந்தார்.

பத்மாவதி உடல்நலக் கோளாறு காலத்தின் கோலம் முதிய வயதில் பத்மாவதியை படுத்த படுக்கையாக்கியது. உடல் உறுப்புகள் அத்தனையும் செயலிழந்த நிலையில், சாதாரணமாக கூட நடக்க முடியாத அளவுக்கு பத்மாவதி தள்ளப்பட்டார்.. இதனால் தாயை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு பார்த்தசாரதிக்கு வந்தது..

ஆனால், நாளுக்கு நாள் நோயின் தாக்கம் அதிகரித்தது.. இதனால் பத்மாவதியை வைத்து பார்ப்பதில், வீட்டில் கடுமையான சிக்கல்களும் எழுந்தன. முக்கியமாக பார்த்தசாரதிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தொடர்ந்து குடும்பத் தகராறுகள் வெடித்தன.

மாமியாரை வீட்டில் வைத்து பார்த்து கொள்வதில், மருமகளுக்கு விருப்பமில்லை.. ஒருபக்கம் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல், இன்னொருபக்கம் தாயின் நோயும் தீவிரமடைவதால், பார்த்தசாரதி நிலைகுலைந்து போனார்.. இதன் உச்சக்கட்டமாக , 3 மாதங்களுக்கு முன்பு பார்த்தசாரதியின் மனைவி கோபித்துக் கொண்டு தனது 2 குழந்தைகளுடன் தன் அம்மா வீட்டிற்கே சென்றுவிட்டார்.விழி பிதுங்கிய மகன் குடும்பத்தை சுமக்க வேண்டிய மொத்த பாரமும் பார்த்தசாரதிக்கு விழுந்தது.. படுக்கையை விட்டு எழ முடியாத அம்மாவுக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்ய வேண்டிய நிலைமைக்கும் ஆளானார்.. அம்மாவை கவனித்து கொள்வது, அவருக்கு மிகப்பெரிய சுமையாகவே மாறிவிட்டது.
இதனால் வழியறியாமல் தவித்த பார்த்தசாரதி நேற்று ஒரு விபரீதமான முடிவை எடுத்தார்.

இதற்கு மேல் விவரிக்கும் செய்தியை படித்தால் குலை நடுங்கி விடும். வீல் சேரில் வைத்து தன் தாயை இரயில் முன் தள்ளி விட்டார் அந்த மகன் என்பது தான் செய்தியின் முடிவு.

இந்த சமூகம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது.

பேறு கால வலி பெரிதா அல்லது இரயில் முன் விழுந்த வலி பெரிதா ?? அல்லது நம்பிக்கை துரோகத்தின் வலி பெரிதா ??

தாய்மை என்பது வலி மிகுந்தது என்பது உலகிற்கே தெரியும். ஆனால் இந்த வலி ??

இன்னொரு கோணத்தில் எத்தனை அழுத்தம் இருந்திருந்தால் ஒரு மகன் இந்த முடிவை எடுத்திருப்பார். ?? ஒரு முதியோர் இல்லத்திலோ அல்லது ஒரு தெருவோரமோ விட்டுச் சென்றிருந்தால் கூட யாரேனும் காப்பாற்றியிருப்பார்களே.... என்று தோன்றவில்லையா ??

தற்கொலையே தவறு என்றால் இப்படி வழிதெரியாமல் இருக்கும் சூழ்நிலையில் கொலை மகா கொடூரமல்லவா ???

இப்படிப்பட்ட சமூகத்திற்கு அரசு மனநலம் சார்ந்து ஏதேனும் செய்ய வேண்டும். பெண் குழந்தைகளுக்கு தொட்டில் குழந்தை ஏற்பாடு செய்தாரே ஜெயலலிதா அது போல இது போல முதியவர்களை காப்பாற்ற ஏதேனும் செய்தால் நலம்.

இந்த செய்தியை சொல்லும் போது நண்பர் ஒருவர் திருச்சியில் தன் தாயை விமானநிலயத்திலேயே அமர வைத்து விட்டு சிங்கப்பூர் சென்று மறைந்த மகனைப் பற்றிய செய்தியையும் சொன்னார். அந்த தாய் வீட்டுக்கு வந்து தூக்கிட்டு தொங்கி விட்டாளாம்.

இந்த சமூகம் பல அவலங்களை உள்ளடக்கியது என்பது தெரியும் தான். ஆனாலும் ஒரு தாயை கொடூரமாக கொல்லும் அளவிற்கு படு கேவலமாக மாறும் என்பது எதிர்பாராதது.

ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் – செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி?

தன் தாயின் மரணத்தை தாங்காத ஒரு மகான் பட்டினத்தார்

இன்று இருந்திருந்தால், பெற்ற தாயின் பிரிவு தாங்காமல் வாடிய அவர், இந்த செய்திகளை கேட்டு அதிர்ச்சியில் அந்த விநாடியே உயிரை விட்டிருப்பார்.

சில செய்திகள் நம்மை கவலைப்படுத்தும். சில செய்திகள் கலவரப்படுத்தும். சில செய்திகள் காயப்படுத்தும்.

அரிதிலும் அரிதான இப்படிப் பட்ட செய்தி, நம்மை பல நாட்கள் தூங்கவிடாமல் செய்து புரட்டிப் போட்டு விடும். பிரபஞ்சத்தின் நோக்கத்தை கேள்விக் குறியாக்கி, பிறப்பின், இந்த வாழ்வின் இரகசியத்தை, நோக்கத்தை சந்தேகிக்க வைத்து விடும்.

அந்த மகனை கைது செய்யலாம். தண்டனை வாங்கித் தரலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இந்த சமூகத்திற்கு கிடைத்த செய்தி, அதிர்ச்சி அதனால் மாறப்போவதில்லை.

யாருக்கும் இனி அரக்கோணம், சப்தகிரி எக்ஸ்பிரஸ் என்ற வார்த்தையை கேட்டாலே உடல் நடுங்கி நெஞ்சம் கலங்கிப் போகும்.

அம்மா இனி அடுத்த பிறவி என்பதே வேண்டாம் அம்மா.... அதிலும் அம்மாவாக பிறந்து விடாதே.........

உனக்காக உலகே கண்ணீர் சிந்தி வழியனுப்புகிறது. !!!!