தொடர்கள்
கவர் ஸ்டோரி
அருள் வேண்டும். பொருளும் வேண்டும். ! ஹாங்காங்கில் மஹாத்ரியா. ராம்.

20260611101002281.jpeg

ஹாங்காங்கில் மஹாத்ரியா. ஒரு கனவு போல இருந்தது.

எனக்கு 2022ல் அவரை ஒரு குருவாக, ஒரு சுய முன்னேற்ற பேச்சாளராக அறிமுகப்படுத்தியது என் நண்பர் சுரேஷ். அவரது மனைவி ஜெயஶ்ரீயும் அவரை பின்பற்றுபவரே…

மஹாத்ரியா ஆன்மீக குருவா ?? சிந்தனையாளரா ?? எழுத்தாளரா ?? வியாபார காந்தமா ?? ஊக்கப் பேச்சாளரா ?? இப்படி தனித் தனியாக இல்லாமல் எல்லாமுமாக இருக்கும் ஒரு ஆளுமை என்று விரைவில் புரிய வந்தது.

ஞாயிறு தோறும் அவர் நடத்தும் சத்சங்கத்தில் ஒரு மணி நேரம் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு வாரமும் எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி விரும்புபவர்கள் அனைவருக்கும் இலவசமாக வாழ்க்கைப் பாதை அமைத்து கொடுக்கிறார் அவர்.

மஹாத்ரியா ரா 'இன்பினிதிசம்' (Infinitheism) என்னும் ஆன்மீகப் பாதையை நிறுவியவர். மனிதர்களின் சிந்தனைகளை நேர்மறையாக மாற்றி, அவர்களை தங்களின் முழுத் திறனையும் உணரச் செய்வதில் இவரது உரைகளும் போதனைகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இன்ஃபினிதீயிசம் என்பது ஹிந்துயிசம், கிறிஸ்டியானிடி, இஸ்லாம் போன்று ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்றாமல் எல்லையற்ற இறை என்ற மிக உயர்ந்த தத்துவத்தை கொண்டிருக்கும் ஒரு ஆன்மீகப் பாதை.

நீ எந்த மதத்தினராக இருந்தாலும் அதில் சிறந்த மனிதனாக இருக்க வேண்டும் என்பது தான் மஹாத்ரியாவின் ஆன்மீகப் பாதை.

மஹாத்ரியா தொடக்கத்தில் டி.டி.ரங்கராஜன் (T.T. Ranganathan) என்றே அறிமுகமானார். மென்பொருள் துறையில் (Software Industry) ஒரு வெற்றிகரமான தொழில்முனைவோராக தன் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பொருள் சார்ந்த வெற்றிகள் மட்டுமே மனித வாழ்க்கைக்கு முழுமையான அமைதியையோ திருப்தியையோ தந்துவிடாது என்பதை உணர்ந்தார்.

இந்தத் தேடலின் விளைவாக, மனித மனங்களின் இயல்பு மற்றும் ஆன்மீகம் குறித்த ஆழமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பின்னர், தன் வாழ்க்கையை மனிதகுல மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்க முடிவு செய்து, மென்பொருள் தொழிலைக் கைவிட்டு முழுநேர ஆன்மீக மற்றும் வாழ்வியல் வழிகாட்டியாக மாறினார். இந்த மாற்றம் தான் பல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கயை திருப்பிப் போட்டது.

20260611101225855.jpeg

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்

செல்வச் செவிலியால் உண்டு." (குறள்: 757)

மஹாத்ரியா கொஞ்சம் வித்தியாசமானவர். மற்ற ஆன்மீக பாதைகள் எல்லாம் ஒன்று அது அல்லது இது என்று சொல்ல அதாவது அருள் அல்லது பொருள் என்று நிபந்தனை வைக்க, திருக்குறளில் மேற்சொன்ன குறளில் வள்ளுவர் அன்பு ஈன்றெடுத்த 'அருள்' என்ற குழந்தையானது, 'பொருள்' என்று சொல்லப்படும் செல்வந்த வளர்ப்புத் தாயால் (செவிலித்தாய்) தான் வளர்ந்து செழிக்கும், அதாவது, ஒருவருக்கு அருள் உள்ளம் இருந்தாலும், பிறருக்கு உதவ பொருள் வசதியும் தேவைப்படுகிறது. என்று சொல்கிறார்.

அந்த குறளுக்கு வாழ்ந்து காட்டுவது போல, மஹாத்ரியா இதுவும் வேண்டும் அதுவும் வேண்டும் என்று வழிகாட்டுகிறார்.

அருள் வேண்டும் பொருளும் வேண்டும் என்பது மஹாத்ரியாவின் வ்ழி. நவீன திருவள்ளுவர் மஹாத்ரியாதான்.

20260611101255838.jpeg

2012ஆம் ஆண்டு நவம்பர் 11 அன்று மஹாத்ரியா 'இன்பினிதிசம்' என்ற இயக்கத்தைத் தொடங்கினார்.

இன்பினிதிசம்' என்பது மனிதனிடம் உள்ள எல்லையற்ற சாத்தியக்கூறுகளை (Infinite possibilities) நம்புவதாகும்.

"மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குள்ளும் எல்லையற்ற ஆற்றல் உள்ளது. சரியான வழிகாட்டுதல் மற்றும் நேர்மறைச் சிந்தனை மூலம் எவரும் தன் வாழ்வில் உன்னத நிலையை அடைய முடியும்" என்பதே இதன் மையக் கருத்து.

மஹாத்ரியாவின் போதனைகள் மிகவும் எளிமையானவை, அதே சமயம் நடைமுறை வாழ்க்கைக்கு உடனடியாகப் பயன்படுத்தக்கூடியவை. அவரது சில முக்கியக் கருத்துக்கள்:

உங்கள் வாழ்க்கையின் தற்போதைய நிலைக்கு வேறு யாரையும் குற்றம் சொல்லாதீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்கும் சரி, துயரத்திற்கும் சரி, நீங்களே பொறுப்பு என்பதை ஏற்றுக்கொள்ளும் போதுதான் மாற்றத்திற்கான புள்ளி தொடங்குகிறது.

வெறும் பணம் சம்பாதிப்பது மட்டும் வெற்றியல்ல. சுற்றியுள்ள மனிதர்களுடனும், குடும்பத்தினருடனும் ஆரோக்கியமான, அன்பான உறவைக் கொண்டிருப்பதே உண்மையான நிம்மதி.

நேற்றைய உங்களை விட இன்றைய நீங்கள் சிறந்தவராக மாற வேண்டும். ஆன்மீகம் என்பது உலகை விட்டு ஓடுவதல்ல, மாறாக உலகில் வாழ்ந்து கொண்டே தினசரி நம் அறிவிலும், குணத்திலும் வளர்வதாகும்.

கடந்த காலத்தைப் பற்றிய கவலையோ, எதிர்காலத்தைப் பற்றிய பயமோ இல்லாமல், இந்த நொடியில் முழுமையாக வாழ்வதே மன அமைதிக்கான வழி.

ஹாங்காங்கில் ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை வந்து இறங்கிய அவர் அன்று மாலையே முன்னூறுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்த ஒரு சிறிய அரங்கில் Get your Magnet right என்ற தலைப்பில் உரையாற்றினார்.

90 நிமிடங்கள் தடைபடாத பிரவாகமாக அனைவரையும் கட்டிப் போட்டார். அவர் சொன்ன சாராம்சம் ஒவ்வொருவருக்கும் அவரது வாழ்க்கைக்கு தேவையான தேடல்களுக்கு பதிலளித்தது.

அவரது உரை பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்ட போது சிலர் சொன்ன பதில்கள் இங்கே……

****

பெருமாள்

அருமையான உரை. அதாவது ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் செய்யக் கூடிய ஆனால் செய்யத் தவறும் விஷயங்களையே அவர் சொன்னார். ஆனால் அவர் சொல்லும் போது அது நமக்கு இன்னும் அழுத்தமாக உறைப்பது போல் தெரிகிறது. நம் வீட்டுக்கு நமக்கு வேண்டிய ஒரு உறவினர் வந்து போனால் எப்படி இருக்குமோ அப்படித்தான் அவரை தழுவிக் கொண்ட விநாடிகள் எனக்கு தோன்றியது.

அனு ஃபாசில்.

நமக்கு ஒரு விஷயம் செய்து தான் ஆக வேண்டும் என்ற நிலை வருமுன் அதை செய்வது நல்லது என்று புரிந்தது. உதாரணமாக உடற்பயிற்சி. இனிமேல் அது செய்தால் தான் உடல்நலம் தேறும் என்ற நிலை வருமுன் அதை செய்வது நல்லது. அது போலவே மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் ஏதும் தேவையில்லை என்பதும் ஆணித்தரமாக பதிந்த ஒரு போதனை.

ரம்யா வெங்கட்.

மகிழ்ச்சிக்கு காரணம் தேவையில்லை என்ற விஷயம் சொரேல் என உறைத்தது. அதுவும் அது மஹாத்ரியாவின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தில் அவரை மாற்றிய அந்த தருணம் இனி என்னையும் மாற்றிப் போட்டது.

ஜகதீசன்

மஹாத்ரியா அவர்கள் ஹாங்காங் வருகிறார் என்று அறியும் அவரை அவரைப் பற்றி தெரியாது.

அவரது இணையதளத்தையும யூட்யூப் வீடியோக்களையும் பார்த்தேன். ஒரு மாடர்ன் ஆன்மிக குரு என்ற உணர்வு எழுந்தது. July 5ம் வந்தது. அரை மணி முன்னதாகவே சென்று இருக்கைகளில் அமர்ந்துகொண்டோம். சரியாக ஐந்து மணிக்கு கதவு மூடப்படும், அதன்பிறகு யாருக்கும் அனுமதி கிடையாது என்று சொன்னார்கள். அதுவே அவர்மேல் மரியாதையை வரவழைத்தது.

மிகச்சரியாக 5 மணிக்கு மேடையில் தோன்றினார். கம்பீரமான நிதானமான நடை, மைக் முன் நின்று பேசத் தொடங்கினார்.

”ஹேப்பி ஈவினிங்” என்றார்.

அடுத்த 90 நிமிடங்கள் நான் இந்த மேடையில் பேசப்போகிறேன். நான் உங்களிடம் கோருவது உங்களின் முழு கவனத்தை மட்டுமே. எந்த ஒரு மாற்றம் நிகழவும் எந்த சலனமும் இல்லாத கூர்ந்த கவனம் தேவை. அப்படிப்பட்ட நிலையில் மட்டுமே மாற்றம் நிகழ முடியும். இரண்டாவது வரிசையில் குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்த இருவரை, நீங்கள் வெளியில் சென்று பேசிக்கொள்ளலாம் அல்லது ஆறரை மணிக்குப் பிறகு பேசிக்கொள்ளலாம் என்றார்.

கண்டிப்பான ஒரு ஆசிரியரின் முகம் வெளியில் வந்தது. நமக்காக ஒருவர் தன் நேரத்தை ஒதுக்கி பேச வந்திருக்கிறார். மேடையில் அந்த கணத்தில் சிந்தித்து பேசிக்கொண்டிருந்தவர் இவர்களின் பேச்சு சத்தத்தினால் சட்டென்று கவனம் கலைந்து கோபப்பட்டதும் அழகு.

வெளியில் வந்தபிறகு பெரியவனிடம் அவர் என்ன சொன்னார் என்று கேட்டேன். ”மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் வேண்டுமா?” என்றான். ஹேப்பி ஈவினிங்கில் தொடங்கி அவர்

குடியிருந்த வீட்டு சொந்தக்காரரின் குழந்தையை கைபிடித்து கடைக்கு அழைத்துச் சென்றபோது, அவன் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியாக வந்திருக்கிறான். என்ன விஷயம், ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய்? என்று கேட்டார். அதற்கு பதிலாக அந்த குழந்தை கேட்ட கேள்வி அது.

எந்த காரணமுமில்லாமல் மகிழ்ச்சியாக இருப்பதாக முடிவெடுத்து மகிழ்ந்திருக்கலாமே.

அவரது உரையின் சாராம்சம் மூன்று வாக்கியங்களில் அமைந்தது.

பதினாலு வயது விஸ்வாவும், 12 வயது சித்துவும் குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டிருந்தார்கள். இவ்விரு சிறுவர்களுக்குமே அவர் சொன்னதை புரிந்துகொண்டு தனது வாழ்க்கையுடன இணைத்துப்பார்த்து சிரிக்க முடிந்ததென்றால்

அரங்கம் முழுவதுமே சிரிப்பால் நிரம்பியதை சொல்லவேண்டியதில்லை.

நாம் கொண்டாடும் விளையாட்டு வீரர்களோ, அரசியல் தலைவர்களோ அனைவருமே உச்சகட்ட உற்சாகத்துடன் செயல்படுபவர்களாகவே இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

காலையில் துாக்கத்திலிருந்து எழுவதே ஸ்ப்ரிங் போல் குதித்து எழவேண்டும் என்றார்.

காலையில் பிள்ளைகளை எழுப்புவதை சொல்லிக் காண்பித்தார். விஸ்வாவின் காதுகளில் அது அவன் அம்மாவின் குரலாகவே கேட்டது, ”எழுந்திருடா எரும - இன்னும் என்ன துாக்கம்”.

நாம் அனைவருக்குமே கனவுகள் இருக்கும். இங்கு அமர்ந்திருக்கும் ஐம்பது பேருக்காவது தொழில் தொடங்கவேண்டும் என்ற கனவு பத்து வருடங்களாக இருந்திருக்கும்.

ஆனால் அதை நோக்கி ஒரு காலடிகூட எடுத்த வைத்திருக்கமாட்டோம் என்றார். அந்த ஐம்பது பேரில் நானும் ஒருவன். கனவுகள் நிஜமாக மாற நமது செயல்கள் மிக அவசியம்.

சொன்னபடியே மிகச்சரியாக ஆறரை மணிக்கு உரையை முடித்தார். ஒன்றரை மணிநேரம் மிக சீக்கிரமாக முடிந்துவிட்டதாகவே அனைவருக்கும் தோன்றியது.

அனைவரும் அமைதியாக வரிசையில் நின்று வணங்கி கட்டியணைத்து ஓரிரு வார்த்தைகள் பேசி விடைபெற்றோம். நிறைவான ஒரு நாள், மனதிலிருந்து அகலாத ஒரு நாள்.

கோமதி பிரவீன்

இன்று நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகும் சில கருத்துக்கள் உங்களை எனக்கு நெருக்கமாக்கக்கூடும் என்று கூறினார். இறுதியில், அவரது வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை நான் உணர்ந்தேன், ஏனெனில் அந்த உரையின் பல இடங்களில் என்னால் அவருடன் பொதுவான கருத்துக்களைக் காண முடிந்தது.

அவர் பகிர்ந்துகொண்ட இரண்டு விஷயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன:

மகிழ்ச்சியாக இருக்க நமக்கு உண்மையிலேயே ஒரு காரணம் தேவையா?

காலையில் அலாரத்தை 'ஸ்னூஸ்' (snooze) செய்வதோ அல்லது அதை அணைத்துவிடுவதோ கூடாது; ஏனெனில், நாளின் முதல் தோல்வி அங்கேயே தொடங்குகிறது

அவருடன் என்னை ஒன்றிணைத்த சில விஷயங்கள்:

உங்கள் கணவர் அல்லது மனைவி உங்களுக்கு அருகில் அமர்ந்து பல நல்ல விஷயங்களைச் சொல்லும்போது நீங்கள் அதைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை, ஆனால் அதே விஷயத்தை நான் சொல்லும்போது நீங்கள் அதைக் கவனிக்கிறீர்கள்

சிறுசிறு விஷயங்களுக்குக் கோபப்படாமல் இருப்பது,(கடினம் தான் முயற்சிப்பேன்) முடிந்தவரை மகிழ்ச்சியாக இருப்பது அலாரம் ஒலித்தவுடனேயே அல்லது அது ஒலிப்பதற்கு முன்பே கூட, அதை 'ஸ்னூஸ்' (snooze) செய்யாமலோ அல்லது நிறுத்தாமலோ நான் விழித்துக்கொள்வேன்.

தீபிகா

இன்ஃபினிதீயிசம் தான் இன்றைய முக்கிய தேவை. 90 நிமிடங்கள் உறைந்து போய் உட்கார்ந்திருந்தோம்.

அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமுமே நம் வாழ்கையில் பொருத்திப் பார்க்கக் கூடியது தான்.

அவர் சொன்ன விஷயங்களை விடுங்கள் அவரை சுற்றிலும் இருக்கும் அந்த எனர்ஜி, அது தான் என்னை கண்ணீரில் நிறுத்தியது. அந்த கிளைமேக்ஸ் டாக் இயற்கையை ஒட்டியே இறைவிதிகளை ஒட்டியே நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் முடித்த போது… என்னால் என்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவரை நெருங்கிச் சென்ற போது வார்த்தைகள் வரவில்லை.

இது போன்ற ஒரு மாலை ஹாங்காங்கில் பார்த்ததெயில்லை.

ஷோபனா

வார்த்தைகள் வரவில்லை. அவரது உரையை கேட்ட போது 90 நிமிடங்களுக்குப் பின் என்னுள் எத்தனையோ விதைகள் விதைக்கப்பட்டது.

அதில் எவ்வளவு மரமாகும் என்பது போகப் போகத்தான் தெரியும். தொடர்ந்து அவரைக் கேட்க வேண்டும் என்பது மட்டும் நிச்சயம். என்னுடைய பிறந்த நாளில் மஹாத்ரியாவின் தரிசனமும் உரையும் தவிர பெரிய பரிசு என்னவாக இருக்க முடியும் ??

அஜய் கார்த்திக்

90 நிமிடங்கள் நான் அவருடன் செலவழித்த ஒருமித்த நேரம். மறக்கமுடியாதவை. என்னுடைய கோபத்தை கட்டுப் படுத்த வேண்டும் என்று மீண்டும் மீண்டும் முயற்சிப்பேன். மந்திரத்தால் கட்டிப் போட்டது போல உணர்ந்தோம். என் நண்பர்களும் தான்.

****

வந்திருந்த அத்தனை பேருக்கும் இந்த கூட்டத்தின் பாதிப்பு இருந்திருக்கும்.

மஹாத்ரியா ஹாங்காங்கிற்கு வந்தது இந்த சின்ன கூட்டத்திற்காக அல்ல.

அடுத்த நாள் லயன்ஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு தான் அவர் சிறப்பு பேச்சாளராக வந்திருந்தார்.

சுமார் 15,000 பேர்கள் கூடியிருந்த அந்த மெகா மகா அரங்கில் ஓரே கூச்சலும் குழப்பமுமாக அங்கும் இங்கும் அனைவரும் இரைச்சலுடன் கத்திக் கொண்டிருந்தார்கள்.

20260611101851474.jpeg

(லயன்ஸ் கிளப் நடத்திய அந்த மெகா மகா அரங்கில் 15,000 பேருக்கும் மேல் பார்வையாளர்களிடையே...)

அத்தனையும் மஹாத்ரியா பேசத் துவங்கும் வரை தான்.

அதன் பின்னர் ஒரு 45 நிமிடங்கள் அவர் பேசத் துவங்கியதும் எல்லோரும் மியூட்டில் இருப்பது போல தோன்றியது.

ஒரு துளி குழப்பமில்லாமல் அத்தனை பேர் சிந்தனையையும் ஒரு முகப்படுத்தி அவரை கவனிக்க வைத்து, அவர்களை கலைத்துப் போட்டு மீண்டும் ஒழுங்குபடுத்தி, நிகழ்காலத்திற்கு கொண்டு வந்து கரகோஷத்தை வரவழைத்த செப்படு வித்தை மஹாத்ரியாவுக்கு மட்டுமே உரியது.

அந்த கூட்டத்தில் உலகில் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த பல சமயங்களை சேர்ந்தவர்கள், பல நிறத்தவர், கலாச்சாரத்தவர் எல்லாவற்றையும் மீறி ஏன் இந்தியர்கள் கைகூப்புகிறோம் தெரியுமா எனக்குள்ளிருக்கும் நானும், உங்களுக்குள் இருக்கும் நீங்களும் ஒன்று தான் என்பதை உணர்த்துவற்காகத் தான் என்று அவர் “லவ் யூ ஆல்” என்று கைகூப்பி முடித்த போது நெகிழ்ந்து போய் ஆரவாரம் செய்தனர் பார்வையாளர்கள்.

மஹாத்ரியா விருப்பமுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை, வாழ்க்கை முறையை, பாதையை கற்றுத் தர தயாராக இருக்கிறார்.

உங்களுக்கு விதியும் பிராப்தமும் இருந்தால் மட்டுமே இந்த இணைய தளத்திற்கு சென்று மேலும் அவரை தொடர வைக்கும்.

https://www.infinitheism.com