
மொபைல் போன் அடிமைத்தனம் மேலை நாடுகளில் ஹாட் டாபிக்..
இதற்கு சிகிச்சை தரும் மையங்கள் கூட இப்போது நிறைய வரத் தொடங்கி இருக்கிறது.
போதைப் பொருள் மறுவாழ்வு மையமாக தொடங்கப்பட்ட இந்த மையங்கள் டிஜிட்டல் சாதனங்களை விட்டு விலக முடியாதவர்களின் பிரச்சனை தீர்க்கும் மையமாக மாறிவிட்டன
இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்று சிறப்பு பயிற்சி கூட எடுத்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள்.
சிகிச்சை நிபுணர்கள் சொல்வது இதுதான்.
எல்லோரிடமும் மொபைல் போன்கள் இருக்கின்றன. நம் மூளையின் செயல்பாட்டு அமைப்பும் பெரும்பாலும் ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கிறது.
நமக்குப் பிடித்ததை நாம் விரும்பினால் அந்தப் பிடித்தது நம்மை அடிமையாக்கும்.
இப்போது மொபைல் போன்கள் அதைத்தான் செய்கிறது.
ஒரு குறுஞ்செய்தி வரும் போது அல்லது நமது பதிவுகளுக்கு ஒரு விருப்பக்குறி அல்லது பாராட்டு வரும்போது மொபைல் போன்கள் மீதான மோகம் நமக்கு இன்னும் அதிகரிக்கிறது.
மொபைல் போன் தொடர்ந்து பயன்படுத்துவதற்கு முக்கிய பங்கு மூளை என்கிறார்கள்,இந்த மையங்களின் சிறப்பு பயிற்சியாளர்கள் .
மொபைல் போனில் புதிய தகவல்கள் அல்லது நமக்கு பிடித்தமான வீடியோக்களை பார்க்கும்போது மூளையில் டோபமைன் என்ற திரவம் சுரக்கிறது.
இது ஒரு வேதிப்பொருள்.
இதன் வேலை மகிழ்ச்சி மற்றும் தூண்டுதலை கட்டுப்படுத்துவதாகும்.
ஒரு கட்டத்தில் இந்த உணர்வை நாம் தேடத் தொடங்குகிறோம்.
அப்போது நமக்கு உதவி செய்வது இந்த மொபைல் போன்கள்தான்.
ஆரம்பத்தில் ஒரு மணி நேரம் மொபைல் போன் பார்ப்பது என்பது ஆரம்பித்து பிறகு மெல்ல நம் வாழ்க்கையின் பல மணி நேரங்கள், ஏன் நாட்களைக் கூட இந்த ஆன்லைன் உலகில் தொலைத்துவிட்டு நம் கட்டுப்பாட்டை மீறி மொபைல் போன் தான் நமக்கு எல்லாம் என்ற நிலைமைக்கு நம்மை கொண்டு செல்கிறது.
இந்த மையத்தில் சிகிச்சை பெற வந்த ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார்.
ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 14 மணி நேரத்துக்கு மேல் நான் மொபைல் போன் திரையை பார்த்துக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் இன்ஸ்டாகிராமில் என் நாட்டம் கூடுதலாக இருந்தது.
இந்த சிகிச்சை மையத்தில் 12 அமர்வுகள் வந்து சிகிச்சை மேற்கொண்டேன்.
அதிக அளவு மொபைல் போன் பார்ப்பதற்கு காரணம் நமது தனிமை உணர்வு.
நாம் எல்லோரிடமும் பேசி பழகிக் கொண்டிருந்தால் மொபைல் போன் பயன்பாடு குறையும் என்கிறார்
சிகிச்சைக்குப் பிறகு.... செல்போனை நான் பக்கத்தில் தான் வைத்துக் கொண்டிருக்கிறேன். அதை திரும்பி திரும்பி பார்க்கிறேன்.
முன் போல் தொடர்ந்து அதை பயன்படுத்துவதில்லை.
அப்படியே பயன்படுத்த வேண்டும் என்று நினைத்தால் கூட இது தேவையா வேண்டுமா என்று யோசிக்கிறேன்.
தேவை என்றால் மட்டுமே கைப்பேசி நான் பயன்படுத்துகிறேன்.
14 மணி நேரம் மொபைல் பேசி பயன்பாடு என்பது இப்போது சில நிமிடங்கள் என்று ஆகிவிட்டது.
எனது மூளையும் இப்போது உற்சாகமாக இருப்பதாக உணர்கிறேன். நிறைய படிக்கிறேன் குடும்பத்தினரிடம் நிறைய நேரம் செலவு செய்கிறேன். எனது உழைப்பு நேரம் தற்சமயம் அதிகரித்து இருக்கிறது" என்கிறார் அவர்
கைப்பேசி அடிமைத்தனம் என்பது அதிகாரப்பூர்வமான ஒரு மருத்துவ நிலையாக மருத்துவ உலகம் இன்னும் அங்கீகரிக்கவில்லை.
குழந்தைகளிடமும் மொபைல் போன் கொடுக்காதீர்கள் என்றெல்லாம் மருத்துவர்கள் இப்போது சொல்கிறார்கள்.
பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்கள் பெற்றோர்களிடம் மொபைல் போன் தராதீர்கள் என்ற அறிவுரை சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்.
சமீபத்தில் டெலாய்டு என்ற ஒரு நிறுவனம் ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்திய போது 70% பேர் மொபைல் அடிமைத்தனத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.
திறன்பேசிகள் நமது மூளையின் வேதியியலை மாற்றியமைப்பதாக கல்வியாளர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
இது போன்ற சிகிச்சை மையங்கள் அதிகரிப்பதும் அங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றும் ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.
செல்போன் என்ற போதைப்பொருள் வியாபாரியை நாம் எப்போதும் சுமந்து செல்வது ஆபத்தானது என்கிறார்கள் இந்த பயிற்சி நிபுணர்கள்.
இந்த போதைப் பொருள் சப்தமிட்டு மின்னிக்கொண்டு உங்களை தன் பக்கம் இழுக்கும் எனவே அதை சுமந்து வீட்டிலேயே வைப்பது நலம்.
மொபைல் போன் ஆரம்பத்தில் உங்கள் வேலைக்கு இது நல்லது, உங்கள் குடும்பத்துடன் நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ள முடியும் என்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இப்போது மொபைல் போன்கள் இவற்றைத் தவிர வேறு பயன்பாட்டுக்கு மாறிவிட்டது.
நிஜ உலகத்தில் இருந்து அவர்கள் தங்களை பிரித்துக் கொள்கிறார்கள் என்கிறார்கள் மைய பயிற்சியாளர்கள்.

Leave a comment
Upload