தொடர்கள்
தொடர்கள்
முகிழும் நாமங்கள் 13 - ஜி.ஏ.பிரபா

20260610220806426.jpeg

​​​​ 13. லகார ரூபாயை

ஈஹாவிரஹிதா சேச- சக்தி- ரீஷத்- ஸ்மிதாநநா

லகார- ரூபா லலிதா லக்ஷ்மீ-வாணீ- நிஷேவிதா ||

​மனித மனம் எப்போதும் ஆசைகளின் கூடாரமாகவே விளங்குகிறது. இது நமக்குக் கிடைக்காது என்று தெரிந்தாலும். இதற்கு நாம் தகுதியா என்று உணராமல் அதையேதான் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு அல்லல் படுகிறது. இதைத்தான் அபிராமி பட்டர்,

​ஆசைக்கடலில் அகப்பட்டு அந்தகன் கைப் பாசத்தில் அல்லற்

​பட இருந்தேனை நின் பாதம் எனும் வாசக் கமலம்

​தலைமேல் வலிய வைத்தாண்டு கொண்ட நேசத்தை

​என் சொல்வேன் ஈசர் பாகத்து நேரிழையே!

என்கிறார்.

ஆசைக்கடலில் மூழ்குவதால் நமக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. மீண்டும், மீண்டும் பிறவி எடுத்து, காலனின் கைப்பிடியில் சிக்கி துன்பச் சுழலில் துக்கம்தான் படுவோம். அந்த ஆசைக்கடலில் அல்லல் படாமல் நம்மைக் காப்பாற்றுவது அம்பிகையின் கருணைதான். ஏனென்றால் அவள் கிடைக்காது என்று, அடைய முடியாததை ஆசைப்படாதவள்.

​அவளால் அடைய முடியாதது எது?

​ஈசவரனின் சக்தியாக இருப்பவள். அவள் கண் அசைவுக்குக் காத்திருக்கும் ஈசன் அவள் மனதில் நின்று விரும்பிய அனைத்தையும் தருகிறார். ஆனால் அம்பிகை விரும்புவது தன் அடியவர்களின் நலந்தானே.

​ஒருமுறை தவத்தில் ஆழ்ந்திருந்த அம்பிகையின் மனோசக்தியாக ஈசன் உருமாறி அன்னையின் மனதுக்குள் செல்ல, அங்கு அன்னை தன் பக்தர்களின் நலனை நினைத்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்து ஈசன் கேட்கிறார்,

​“தேவி, உனக்கென்று எந்த ஆசையும் இல்லையா?”

​“என் பக்தர்களின் நலன்தான் என் ஆசை”- என்கிறாள் அம்பிகை.

​அன்னை தவம் செய்து ஈசனை அடைவது கூட, அவரால் தன் பக்தர்களைக் காப்பாற்றவே. அவளுக்குத்தான் எத்தனை பொறுப்புகள். ஜெகத்துக்கே தாய். இங்குள்ள சகல ஜீவராசிகளையும் காப்பாற்ற வேண்டும். ஆனால் அது குறித்து அவளிடம் துளிக்கூட ஒரு சலிப்போ, முகச் சுளிப்போ இல்லை. எப்போதும் புன்முறுவல் பூத்த முகத்தை உடையவள்.

​அன்னையின் முகத்தைப் பார்த்ததும் நமக்குள் ஒரு தைரியம், துணிவு, நிம்மதி பிறந்து விடும். புத்தி சக்தியாய் இருப்பவள். பஞ்சதசாக்ஷரி மந்திரத்தின் நான்காவது எழுத்தாகிய லகார ரூபமாய் இருப்பவள். பெண்கள் எல்லோரும் அம்பிகையின் அம்சம். அவள்தான் சகல சக்தி வடிவமாய் ஸ்ரீ லலிதாவாக இருக்கிறாள். பண்டாசுரனை அழிக்கத் தோன்றியவள் லலிதா.

​லலிதாம்பிகையை பூஜித்தால், அங்கு ஞானமும், ஐஸ்வர்யமும் வந்து விடும். லக்ஷ்மி, சரஸ்வதியால் பூஜிக்கப் படுபவள் அம்பிகை. எனவே அம்பிகையைத் துதித்தால் சகல சௌபாக்கியமும் அருள்வாள் என்கிறது லலிதா த்ரிசதி.

​லலிதாம்பிகை அன்னையாய் இருப்பவள். குழந்தைக்கு விளையாட்டுக் காட்டி உணவு ஊட்டுவது போல், தவறு செய்தால் கண்டித்து, வழி நடத்தி, எது சரி, நல்லது, தவறு என்று வழி காட்டி, நல்வழி காட்டுபவள் அம்பிகை.

​தேவர்களின் துயரை அழிக்க, நெருப்பிலிருந்து தோன்றியவள் தேவி பராசக்தி. கருணை மழையான அவள் யாரையும் கெடுக்க மாட்டாள். “தாயே எல்லோருக்கும் நல்லது செய்யும் நீ எனக்கு ஏன் இந்தத் துக்கத்தைக் கொடுத்தாய்.? என்றாலும் காரணம் இல்லாமல் நீ எதுவும் செய்ய மாட்டாய்” என்றுதான் தன் கண் பார்வை போயும், அன்னை மீனாட்சியிடம் புலம்புகிறார் நீலகண்ட தீட்சிதர்.

​அதே போல் மீனாட்சி அவரின் கண் பார்வையை, முன்பை விடப் பிரகாசமாகக் கொடுத்து, அவரின் பெருமையை உலகுக்கு உணர்த்துகிறாள். அவளை வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

​“ஸசாமர ரமா வாணி ஸவ்ய தக்ஷிண சேவிதா” என்றுதான் போற்றுகிறது லலிதா சஹஸ்ரநாமம்.

​அம்பிகையை முழு நாமங்களும் சொல்லி வழிபட முடியாதவர்கள் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ என்று கூறி வழிபட்டால் கூடப் போதும். அம்மா என்று அழைத்ததும் ஓடி வரும் தாய் அல்லவா அவள்.

​தன் வடிவமாகத்தானே உலகில் பெண்களைப் படைத்திருக்கிறாள் அம்பிகை. ஒவ்வொரு பெண்ணையும் அம்பிகையின் உருவமாக நினைத்து, மதித்து, நடந்தாலே போதும், அவளை வழிபட்ட அனைத்துப் பலன்களும் கிடைத்து விடும்.

​​​​​****************************