
“கடந்து உள்ளே இருப்பதுதான் கடவுள்” என்று தெளிவுபடுத்தி உனக்கும் எனக்கும் உள்ளேதான் கடவுள் இருக்கிறார் என்று போதிக்கிறது இந்து மதம். இதைத்தான் ஞானிகளும், புராணங்களும் “உனக்கு உள்ளே கூட, உன்னை உன் மனதின் உள்ளே கடந்து செல்” என்றார்கள்.
தெய்வ வழிபாடுகளில் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு என இரண்டு வழிபாட்டு முறைகள் உண்டு. குல தெய்வ வழிபாடு என்பது குடும்பத்தில் வழிவழியாகச் செய்யப்படும் வழிபாடு ஆகும். இஷ்ட தெய்வ வழிபாடு என்பது அவரவர் தங்கள் மனதுக்குப் பிடித்தமான தெய்வத்தை வழிபடுவது.
ஒருவர் எத்தனை இஷ்ட தெய்வங்களை வணங்கினாலும், அது குலதெய்வ வழிபாட்டிற்கு ஈடாகாது. ஒவ்வொரு நிகழ்வின் ஆரம்பத்திலும் நமது மதத்தில் குலதெய்வ பிரார்த்தனையே வலியுறுத்தப் படுகிறது. குலதெய்வமே அனைத்து வழிபாட்டு அமைப்புக்களிலும் மேலான உச்சசக்தி. ஒருவரைக் காக்கும் உன்னத அமைப்புகளில் தலையாய முதன்மை மகாசக்தி குலதெய்வம் மட்டும்தான்.
குலதெய்வத்தை வழிபடாத தோஷம் இருந்தால் குலதெய்வக் குற்றம் இருந்தால், அந்தக் குடும்பத்தில் அடுக்கடுக்காக சோதனைகள் ஆரம்பிக்கின்றன. அதேபோல குலதெய்வ வழிபாட்டுக் குறைகள் இருக்கும்போது, பரிகாரங்களும் பயன்தருவது இல்லை.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பிரசாரத்துக்கு போகின்றனரோ இல்லையோ... கண்டிப்பாக குலதெய்வ கோவிலுக்கு போகிறார்கள். தமிழகத்தில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு முன் நாத்திகம் பேசும் வேட்பாளராக இருந்தாலும், கோயிலுக்கு செல்கிறார்கள்.
பிரபல வேட்பாளர்களின் குலதெய்வ கோயில்கள் இங்கே பார்ப்போம்....
நசியனூர் அப்பாத்தாள் திருக்கோயில்:
ஈரோடு மாவட்டம், சிலுவம்பாளையம் அருகே, ஈரோடு - நசியனூர் புறவழிச்சாலை பகுதியில் அப்பாத்தாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் முருகர், சிவன், பார்வதி, பிரம்மா, தட்சிணாமூர்த்தி, விநாயகர், துர்க்கை ஆகிய விக்கிரகங்களும் உள்ளன. இக்கோயில் முதல்வர் பழனிசாமியின் குடும்பத்தாரின் குலதெய்வ கோயிலாகும். இக்கோயிலுக்கு பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தார் அடிக்கடி வந்து செல்வர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சொந்த தொகுதியில் குலதெய்வ வழிபாடு செய்த பின்னர்தான், பிரசாரத்தை தொடங்கி பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வருகிறார்.
செண்பகத்தோப்பு வனப்பேச்சி அம்மன் கோயில்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வனப்பேச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் உப கோவிலாகும். இங்கு திருமலை நாட்டய்யனார், பேச்சியம்மன், ராமர் மற்றும் பரிகாரத் தேவதைகளுக்கு தனி சன்னதி உள்ளது.
இது தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் குலதெய்வமாகும். பொதுவாக தன் வாழ்நாளில் முக்கிய முடிவுகளை எடுக்கும் முன்னர் ஓ.பி.எஸ். குல தெய்வ வழிபாடு செய்வது வழக்கம். சில தினங்களுக்கு முன்னர் தனது குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.
கீழப்பெரும்பள்ளம் அங்காளம்மன் கோயில்:
நாகை மாவட்டம் - பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் அங்காளம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயில் துர்கா ஸ்டாலின் அவர்களின் குல தெய்வ கோயிலாகும். துர்கா ஸ்டாலின் அவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர். கலைஞர் கருணாநிதி குடும்பம் கடவுள் மறுப்பு கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில் பக்தியுடன் கோயில், குளம் என வணங்கி வருகிறார். தன் குல தெய்வமான அங்காளம்மன் கோயிலின் பரிவார மூர்த்திகளை புனரமைத்து பிரகார மண்டபங்கள் கட்டிக் கொண்டிருக்கிறார்.
தட்டான்கோவில் வீரமணவாளசாமி கோவில்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தட்டான்கோவில் கிராமத்தில் வீரமணவாளசாமி கோவில் உள்ளது. இக்கோவில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ.வின் குலதெய்வ கோவிலாகும். இக் கோவிலில் வெள்ளையம்மாள், பொம்மியம்மாளுடன் வீரமணவாளசாமி அருள்பாலித்து வருகின்றார். இங்கு காத்தாயிஅம்மன், பிள்ளையார், முருகன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. தனது குல தெய்வமான வீரமணவாளன் கோவிலில் டிடிவி தினகரன் தரிசனம் செய்வார்.
காங்கேயநத்தம் வீரசின்னம்மாள் கோவில்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே காங்கேயநத்தம் வீரசின்னம்மாள் கோவில் உள்ளது. இந்தக் கோயில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் குலதெய்வம் கோவில் ஆகும். விஜயகாந்த் தே.மு.தி.க கட்சி துவங்கியது முதல், எந்த முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பும் இக்கோவிலில் வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
முடிக்கரை வீரமாகாளியம்மன் கோவில்:
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே, முடிக்கரை வீரமாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோயில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் குலதெய்வ கோயிலாகும். தேர்தல் திருவிழா தொடங்கும் முன் தன் குடும்பத் திருவிழா ஒன்றை நடத்தியுள்ளார்.
அங்கனூர் மாயவன் திருக்கோயில்:
அரியலூர் மாவட்டத்தில் செந்துறை அருகே உள்ள அங்கனூர் மாயவன் திருக்கோயில் உள்ளது. இது திருமாவளவன் குடும்பத்தினரின் குலதெய்வ கோயில் ஆகும்.
நல்லாவூர் ஐயனாரப்பன் கோவில்:
விழுப்புரம் மாவட்டம், நல்லாவூரில் ஐயனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோயில் பாமக தலைவர் ராமதாஸ் குடும்பத்தினரின் குலதெய்வ கோயில் ஆகும்.
கோனூர் நந்தகோபால சுவாமி கோயில்:
நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் அருகே கோனூரில் நந்தகோபால சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் நந்தகோபால சுவாமி, பாமா, ருக்மணி சன்னதிகள் உள்ளன. இது பிஜேபி தலைவர் எல். முருகனின் குடும்பத்தாரின் குலதெய்வ கோயிலாகும். இக்கோயிலுக்கு எல். முருகன் சென்று தரிசனம் செய்து வருகிறார்.

Leave a comment
Upload