தொடர்கள்
மருத்துவம்
இந்தியாவில் பரவுவது, உலகின் புது வகை கொரோனாவா..??!!!

20210226230929137.jpeg

இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா எக்ஸ்பிரஸ் வேகம் எடுத்து, தினசரி பாதிப்பு 55,000 எண்ணிக்கையை கடந்து கொண்டிருக்கிறது. தற்போது நம் நாட்டில் பரவி கொண்டிருப்பது, புதுவகையான இரட்டை மரபணு மாற்றமடைந்த கொரோனாவாக இருக்கலாம் என்று கொரோனா மரபணு ஆராய்ச்சி செய்து வரும் INSACOG (Indian SARS-CoV-2 Consortium of Genomics) கூறுகின்றது.

ஏற்கனவே... ஆப்பிரிக்க வகை, இங்கிலாந்து வகை, பிரேசில் வகை போன்ற ஒற்றை மரபணு மாற்றமடைந்த‌ கொரோனா மட்டும்தான் உலகில் பரவி கொண்டிருக்க... இந்தியாவில்... ஆப்ரிக்க - இங்கிலாந்து வகைகள் இரண்டுமே சேர்ந்து ஒரே கொரோனா வைரஸில் (Double Mutation in a single virus) இருக்கும் புது வகை என்பது பலருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, இந்திய மாநிலங்கள் ஏற்கனவே ஆங்காங்கே ஊரடங்கு உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளன.

நாட்டில் 2.5 கோடி மக்களுக்கு மேல் கொரோனா தடுப்பூசி போட்ட நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசி எடுத்தவர்கள் இரண்டாவது டோசை முந்தைய காலக்கணக்கான 28 நாட்கள் வைப்பதற்கு பதில் 56 நாட்களாக இருந்தால் தடுப்பூசியின் திறன் அதிகரிக்கும் என்று இந்திய அரசு தற்போது அறிவித்து இருக்கிறது. இது போதாதென்று தற்போது இரட்டை மரபணு சிதைவு கொரோனா பரவுகிறது என்கிற செய்தி வெளியானதால்... நாம் ஏற்கெனவே எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசி, இந்த புது வகை கொரோனாவை தடுக்குமா என்று மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதுவரை கொரோனாவால், இந்தியாவில் 11.7 மில்லியனுக்கும் மேல் பாதிப்படைந்தவர்கள் மற்றும் 1,60,000 இறப்புகளும் பதிவாகியிருக்கிறது.

இந்திய சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த ஒரு வருட கால போரில் மிகவும் களைத்து போய் இருக்கும் நிலையில்... இச்செய்திகள் மேலும் அவர்களுக்கு சோர்வையூட்டும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் எவ்வளவு அலைகள்... எத்தனை வகையான புது கொரோனா வைரஸ்கள் உருவாகும் என்று உறுதியாக மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் கூற இயலவில்லை. போடும் தடுப்பூசிகளும் எத்தனை காலத்திற்கு வீரியமாக உடலில் இருக்கும் என்றும் சரியான கணிப்பு இன்னும் வெளியாகாத நிலை இருக்கிறது.

மக்களும் பொறுப்புணர்வுடன் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, சானிடைசர் உபயோகம் என‌ அனைத்தையும் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். பொறுப்பு.... அரசுக்கும், மருத்துவர்களுக்கு மட்டுமல்ல... நமக்கும் இருக்கிறது,, என பொது ஜனம் விழிப்புணர்வுடன் இல்லாவிடில், எதிர்வரும் காலங்களில் அனைவருக்குமே கடுமையான சோதனையான காலக்கட்டமாக இருக்கப் போகிறது என்பதில் ஐயமில்லை.