தொடர்கள்
கவிதை
உறவுகள் வேண்டும்...! உறுதி எடு...!! பாலா கோவை

20230028011423666.png
உறவுகள் வேண்டும்...! உறுதி எடு...!!

உறவுகள் பெரிதென்று நான்
நினைக்கவில்லை...!
உறவின் வட்டத்தை நான்
மதிக்கவில்லை...!
நண்பர்களே உலகமென்று, உறவின்
தொடர்பில்இல்லை...!

புதுமணைப் புகுவிழா என்று
நண்பனின் அழைப்பு ஒன்று...
நாடியழைத்தது என்னை இன்று...!
உறவுகள் தலைமுறை மூன்றும்
அரவணைத்து கூடி நின்றும்...
ஆடிப் பாடினான் நண்பனும்...!

நலமறியும் ஆவலோடு...
நக்கல் கேலி கிண்டலோடு...
உணர்வின் புரிதலோடு...
உரிமையின் அன்போடு...
ஒருவருக் கொருவரின்
உள்ளத்தின் வெளிப்பாடு...!

உறவுமுறை பந்தத்தை
தலைமுறை உணர்ந்திட,
பேரனின் புரிதலுக்கு
தாத்தாவின் விளக்கம்...
'நானும் உன் தாத்தாவும்
ஒன்று விட்ட சகோதரரென'...!

இளய தலைமுறையின்
இளைஞர் இளைஞிகள்,
உறவுகள் இணைந்திருக்க,
தொடர்பில் தொடர்ந்திருக்க,
பரிமாறியது அன்போடு
அலைபேசி எண்களும் தான்...!

படித்திருந்த இன்ஜினியரிங்
முடித்திருக்கும் தங்கைமகன்
சொல்லாதது ஏன்னென்று...?
உரிமையாய் கடிந்தாலும்,
உறுதியாய் வேலைக்கு
வழிசெய்யும் தாய் மாமன்...!

வளைகாப்பு பெண்ணின்
வளைக் கைகள் பற்றியே,
தாயில்லை என்றெல்லாம்
கவலைகள் கொள்ளாமல்,
வலி வந்தால் குரல் கொடு
ஓடிவருவேன் என்ற சித்தி...!

ஒன்றிப் பிணைந்திருக்கும்
உறவுமுறையின் காட்சிகள்
உணர்த்தியது ஒன்றெனக்கு...!
தொலைத்தது உறவெனும்
சங்கிலியை மற்றுமல்ல... என்
பலத்திலும் பாதியும் தான்...!

உறவைத் தொலைத்த நான்
உரக்கச் சொன்ன வார்த்தைகள்...
'சொந்தங்கள் அரவணைத்து
செல்லுதற்கு நேரமில்லை'...!
ஒன்றுக்கும் ஒவ்வாத காரணம்...
என்றெனக்கு உரைத்தது அத்தருணம்‌‌...!

எத்தனை உறவுகள் வீடுதேடி
அத்தனை அன்போடு அழைத்தும்,
போகாத நிகழ்வுகள் பற்பல...!
அலுவல் பணியும், பயணமும்...
பிள்ளைகள் படிப்பும்,தேர்வும்...
இயலாமையின் காரணம் சிலபல...!

இயலாமை ஒருபுறம் இருந்தும்,
மறவாமை உறவின் பலமென்று
அறியாமையில் ஏன் இருந்தேன்...?
நிகழ்வுகள் முடிந்த பின்னும்
நேர்சென்று நலம் அறியும்
மரியாதை ஏன் மறந்தேன்...?
மணிக்கணக்கில் கைகளில்
தொலைபேசி தவழ்ந்திருந்தும்
தொடர்பை ஏன் மறந்தேன்...?

வளையத்தில் வலம் வந்து,
முன்அறியா முகம் தெரியா
தொடர்புகள் வளர்த்துவிட்டேன்...!
எங்கோ உலகின் ஓர்மூலையில்,
எவர்க்கோ உதவிக்கரம் நீட்ட,
இங்கோ நான் துடிக்கின்றேன்...!

உற்றார் உறவினர் தொடர்பில்
பெற்றோம் இம்முரண் ஏன்...?
வேர்கள் அறுத்து, கிளைகள்
பரப்ப துடிக்கும் இம்மனம் ஏன்...?
உறவெனும் வட்டத்துள் நீ வர,
இணையதள நட்பை நீ மற...!
உறவின் பலத்தை நீ உணர்ந்திடு...!
உறவுகள் வேண்டும் என உறுதிஎடு...!
வரும் சந்ததிக்கும் சொல்லிக் கொடு...!

பாலா கோவை