தொடர்கள்
அனுபவம்
கூலிவேலை செய்தாவது கல்வி பெறு ! - மாலா ஶ்ரீ

20230028010443865.jpg

சென்னையை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர், கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலிவேலை செய்து, தனது குடும்பத்தையும் கல்லூரி படிப்பிலும் சிறந்து விளங்கி வரும் தகவல் கேட்டு நமக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

"என் பெயர் வினோத். கோயம்பேடு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தந்தை ராஜ்குமார், தாய் சுந்தரி, அக்கா சுபா, தங்கை சலோசியா ஆகியோருடன் வசிக்கிறேன். எனக்கு 15 வயதாக இருக்கும்போது என் தந்தைக்கு சாலை விபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியவில்லை. அன்று முதல் நானும் எனது அக்காவும் வேலைக்கு சென்று வருகிறோம். கிடைக்கும் வேலைகளை செய்து, அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பத்தையும் மேல்நிலைப் பள்ளி படிப்பையும் நல்ல மதிப்பெண்ணுடன் முடித்தேன்.

தற்போது கோயம்பேட்டில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். 2-ம் ஆண்டு படித்து வருகிறேன். கல்லூரி முடிந்ததும் இரவு நேரங்களில் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கியும், மதியம் 12 மணிவரை காய்கறி கடைகளில் சில்லறை வியாபாரத்தையும் கவனித்து வருகிறேன். இதில், எனக்கு நாளொன்றுக்கு சுமார் ₹500 வரை வருமானம் கிடைக்கும். அதை வைத்து வீட்டுச் செலவையும், மீதமாகும் பணத்தில் கல்வி கட்டணத்தை செலுத்தி படித்து வருகிறேன்.

மதியம் வீடு திரும்பி சிறிது நேரம் ஓய்வெடுத்து, கல்லூரியில் மாலைநேர வகுப்புக்கு சென்றுவிடுவேன். இரவு நேரங்களில் கண் விழித்து கடின வேலை செய்வதால், மதிய நேரத்தில் கல்லூரியில் சிறிது தூக்கம் வந்தாலும் சமாளித்து பாடங்களை உன்னிப்பாக கவனித்து படித்துவிடுவேன். எனக்கு தமிழக அரசோ அல்லது யாரேனும் நிதியுதவி செய்தால், சி.ஏ படித்து முன்னேறி, குடும்பத்தை காப்பாற்றி, என்னைப் போன்ற பிற ஏழை மாணவர்களின் உயர்கல்விக்கு உதவ வேண்டும் என்ற தீராத ஆசை இருக்கிறது!" என புன்னகையுடன் வினோத் தெரிவித்தார்.

வினோத் குறித்து சக கல்லூரி மாணவ-மாணவிகளிடம் விசாரித்தபோது, "எங்களுக்கு எல்லாம் கல்லூரி முடிஞ்சு வீடு திரும்பினா, ஹாயாக டிவி மற்றும் செல்போனை நோண்டிபடி ரெஸ்ட் எடுக்க தோணும். ஆனால், முதல் நாள் இரவு முதல் மறுநாள் மதியம் கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் கூலிவேலை செஞ்சுட்டு கல்லூரிக்கு ஃப்ரெஷ்ஷாக வருவான். லேசாக கண் சொக்கினாலும், நீரில் நனைத்த கர்ச்சீப்பால் கண்களை துடைத்தபடி பாடங்களை உன்னிப்பாக கவனிப்பான்.

எங்களிடமும் சகஜமாக பழகுவான். இதுவரை நடைபெற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்ணை பெற்றிருக்கிறான். அவனுக்கு பாடப் புத்தகங்கள் தொடர்பாக உதவுவதில் நாங்களும் கல்லூரி பேராசிரியர்களும் மகிழ்ச்சி அடைகிறோம்!" என்று தெரிவித்தனர்.

மாலா