தொடர்கள்
கவர் ஸ்டோரி
இனி இபிகோ இல்லை….! - ஜாசன்

20240612205525893.jpg

கிட்டத்தட்ட எல்லா எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை வழக்கறிஞர்கள் எதிர்த்து குரல் தரும் புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1 முதல் அமுல்படுத்தப்பட்டு விட்டன. அந்த சட்டங்களில் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதும் ஆரம்பமாகிவிட்டது.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக பாஜக தலைமையிலான அரசு இந்த சட்டங்களை கொண்டு வந்திருக்கிறது.

20240613095045986.jpeg

(பிரத்யேகப் பேட்டி கீழே)

20240613095133523.jpeg

(புதிய சட்டங்களில் மாறுதல்கள் விளக்குகிறார். வீடியோ கீழே)

ஆரம்பத்தில் இந்த சட்டங்களின் பெயர் சமஸ்கிருதத்தில் இருப்பதாக விமர்சனம் எழுந்தது .

இந்த சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சில விஷயங்கள் ஆட்சேபனைக்கு உரியதாக இருப்பதாக தற்சமயம் பிரச்சனை எழுப்பப்படுகிறது. உதாரணத்துக்கு முந்தைய சட்டத்தின் படி மருத்துவர்கள் தமது பணியில் கவன குறைவாக அலட்சியமாக இருந்தால் அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டனையாக இரண்டு ஆண்டு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று இருந்தது.

தற்போது புதிய சட்டம் 106 ஆவது பிரிவின் படி ஐந்தாண்டு சிறை தண்டனையும் அபராதமும் சேர்த்தே விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது மருத்துவர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தேசத்துரோக சட்டம் தற்சமயம் செயல்பாட்டில் இல்லை. ஆனால் புதிய சட்டத்தில் இந்தியாவின் இறையாண்மை ஒற்றுமை ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்பாடில் ஈடுபட்டால் கடும் தண்டனை என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் ஆட்சியாளர்கள் தங்களுக்கு வேண்டாதவர்களை இந்த சட்டத்தின் கீழ் கைது செய்து பழிவாங்க கூடும் என்ற விமர்சனம் வரத் தொடங்கி இருக்கிறது.

இந்த சட்டங்கள் காவல்துறைக்கு கடுமையான பணி சுமையை ஏற்படுத்தும் என்ற ஒரு கருத்து இருக்கும் அதே சமயத்தில் காவல்துறை இந்த சட்டங்களை தவறாக பயன்படுத்தக்கூடும் என்ற அச்சமும் பொதுமக்கள் இருக்கிறது.

ஜூலை முதல் தேதிக்கு முன்பு பதிவான வழக்குகள் பழைய சட்டப்பிரிவின் அடிப்படையிலேயே விசாரிக்கப்படும் என்ற அறிவிப்பும் காவல்துறை மற்றும் நீதித்துறையில் குழப்பத்தை ஏற்பட்டிருக்கிறது. இது பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இதுவரை தரவில்லை.

இந்த சட்டங்கள் பொதுமக்கள் எளிதில் வழக்கை பதிவு செய்ய தண்டனையை வாங்கி தருவதற்கு நிறைய வாய்ப்புகள் இந்த சட்டத்தில் இந்த அரசு ஏற்படுத்தித் தந்திருக்கிறது என்றும் குறிப்பிடுகிறார்கள். உதாரணமாக நாட்டின் எந்த மூலையில் ஒரு குற்றம் நடந்தாலும் அது தொடர்பான வழக்கு பதிவு செய்வது முதல் தகவல் அறிக்கை பெறுவது இவற்றை எந்த காவல் நிலையத்திலும் பதிவு செய்து பெற முடியும். இது காலதாமதத்தை தவிர்ப்பதற்கான வசதி வாய்ப்பு என்கிறார்கள்.

காவல் நிலையத்துக்கு வராமல் மின்னணு தகவல் தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வழக்குகளை பதிவு செய்யலாம். முதல் தகவல் அறிக்கை இலவசமாக பெற முடியும். மின்னஞ்சல் குறுஞ் செய்திகள் வாய்ஸ் மெயில் எனப்படும் குரல் அஞ்சல் இவையெல்லாம் வழக்கு விசாரணைக்கான ஆவணமாக இனி ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

பெண்கள் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறுமியர்கள் முதியவர்கள் உடல் குறைபாடு கொண்டவர்கள் நோயாளிகள் காவல் நிலையத்துக்கு வராமலேயே புகார் செய்வதற்காக வாய்ப்பு இந்த சட்டம் மூலம் கிடைக்கிறது என்கிறார்கள்.

பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் இரண்டு மாதங்களுக்குள் காவல்துறை விசாரணை நிறைவு செய்துவிட வேண்டும்.

வழக்கு விசாரணை தொடங்கிய 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் புதிய சட்டம் படி வழக்கில் வாத பிரதிவாதங்கள் வாய்தா வாங்குவதை தவிர்த்து 45 நாட்களுக்குள் முடித்து வைக்கப்பட்டு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று இந்த புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.

18 வயதிற்கு உட்பட்ட சிறுமி மீதான கூட்டுப் பாலியல் வன்கொடுமை கும்பல் கொலை போன்ற கொடூர குற்றங்களுக்கு இந்த சட்டத்தில் மரண தண்டனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக அல்லது வேலை வாங்கித் தருவதாக ஒரு பெண்ணுக்கு ஆசை வார்த்தைகள் சொல்லி அவருடன் உடலுறவு வைத்துக் கொண்டு ஏமாற்றும் குற்றவாளிகளுக்கு பத்தாண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று இந்த புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022 ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசும் போது பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கப்பட்ட சட்டங்களைமாற்றிபுதிய சட்டங்களை உருவாக்கமத்திய அரசு தீர்மானித்து இருப்பதாக அறிவித்திருந்தார்.அதன் தொடர்ச்சி தான் இந்த சட்டங்கள். அதன்படி இந்திய தண்டனை சட்டம் 1860 (இந்தியன் பீனல் கோட்) பாரதிய நியாய சம் ஹிதாஎன்றும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 1973(சி.ஆர். பி .சி )பாரதிய நாகரிக் சுரக்ஷா சம் ஹிதா என்றும் இந்திய சாட்சி சட்டம் 1872(இந்திய எவிடன்ஸ் ஆக்ட்) பாரதிய சாட்சிய அதினியம் என்றும் மாற்றப்பட்டிருக்கின்றன.

ஐபிசி என்பது குற்றங்கள், அதற்கான வரையறைகள் ,விளக்கங்கள் விதிவிலக்குகள் குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச தண்டனைகள் ஆகிய விவரங்கள் அடங்கிய ஒரு தொகுப்பு என்று சொல்லலாம்.

சி ஆர் பி சி என்பது ஒரு குற்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் இழைத்தவர்கள் இருவரையும் காவல்துறை எப்படி அணுகுவது வழக்கை நீதிமன்றம் வரை எப்படி கொண்டு செல்வது என்பது போன்றவற்றுக்கான விளக்கம்.

ஐ இ ஏ என்பது ஒரு குற்ற வழக்கின் சாட்சியங்களை எப்படி கையாள்வது என்பதை விளக்கி சொல்லி இருக்கிறது. இந்த மூன்று சட்டங்களின் சில மாற்றங்களை இந்த அரசு செய்திருக்கிறது. அதைத்தான் தற்சமயம் அமுலுக்கு கொண்டு வந்திருக்கிறது .

ஆனால் சில மூத்த வழக்கறிஞர்கள் அரசாங்கம் பெரிய அளவு எந்த சட்டத்தையும் மாற்றவில்லை பழைய சட்டங்களுக்கு புதிய பெயரும் புதிய எண்களும் தந்து குழப்பம் செய்து இருக்கிறது அவ்வளவுதான் என்கிறார்கள்.

உதாரணமாக மோசடி மற்றும் ஏமாற்றுவதற்கு 420 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இதனால் இப்படி மோசடி செய்பவர்கள் ஏமாற்றுபவர்களை இவர் சரியான 420 என்று சொல்வார்கள். இப்போது அது வேறு எண்ணுக்கு மாறிவிட்டது அவ்வளவுதான் வித்தியாசம் என்கிறார்கள்.

வேறு சில மூத்த வழக்கறிஞர்கள் காலத்திற்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டியது அவசியம் தான். ஆனால் இவர்கள் யாரிடம் ஆலோசனை கேட்டார்கள்.

பல மூத்த வழக்கறிஞர்கள் சட்ட நிபுணர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் என்று சட்ட விஷயங்களில் நிபுணத்துவம் பெற்ற பலர் இருக்கிறார்கள் அவர்களை ஒரு குழுவாக அமைத்து இந்த சட்டம் மாற்றத்தை செய்திருந்தால் எந்த விமர்சனமும் வந்திருக்காது என்றும் சொல்கிறார்கள்.

2023 ஆகஸ்ட் 11 இல் மத்திய அரசால் நாடாளுமன்றத்தில்இந்த சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. பாரதிய ஜனதா எம்பி பிரிஜ்லால் தலைமையிலான 31 பேர் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. திருத்தங்களுடன் இந்த சட்டங்களை 2023 டிசம்பர் 12ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் மக்களவையில் தாக்கல் செய்தார். டிசம்பர் 21 மாநிலங்களவையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதே சமயம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் உறுப்பினர்களின் கருத்துக்களை ஆளும் பாஜக அரசு சொல்வதற்கான வாய்ப்பை வழங்கவில்லை. காரணம் இரண்டு அவையிலும் பெரும்பாலானஎதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்கள். அவர்கள் இடைநீக்கத்தை ரத்து செய்து அவர்கள் கருத்தை கேட்டிருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலோர் கருத்தாக இருக்கிறது.ஆனால் அப்படி நடக்கவில்லை. ஆனால் இது பற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல்இந்த சட்டங்கள் இந்தியர்களுக்காக இந்தியர்களால் உருவாக்கப்பட்டது என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமையாக சொல்லிக் கொள்கிறார்.

மாநில அரசுகள் இந்த சட்டங்களில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இது எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை. ஒரு வாதத்திற்காக இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் தரும் யாருக்கும் தண்டனை அபராதம் உறுதி என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த சட்டம் எங்களுக்கு தேவையில்லை என்று மாநில அரசு விரும்பினால் அந்தப் பிரிவை அவர்கள் நீக்கிக் கொள்ள அனுமதிப்பார்களா என்பது கேள்வி. ஆனால் அனுமதிக்க மாட்டார்கள் என்பது தான் எதார்த்தம். எனவே மாநில அரசு திருத்தம் செய்து கொள்ளலாம் என்பதே நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று என்பது தான் உண்மை.

முதல் தகவல் அறிக்கை பதிவு அவகாசம் பற்றிய சட்டமும் தற்சமயம் விமர்சனத்திற்கு ஆளாகிறது. நீதியை கோறுவதற்கு எடுத்து வைக்கப்படும் முதல் அடி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவது.இதை உடனே பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் புதிய சட்டத்தின் படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய காவல்துறை 14 நாட்கள் வரை தாமதப்படுத்த இந்த சட்டம் வழிவகை செய்கிறது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

புதிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்ட பின்னர் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளின்எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகரிக்கும் என்று மூத்த வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பாக நீதிமன்றங்களில் வாதாட போதிய வாய்ப்பு வசதி இல்லாதவர்களுக்கு நீதி மறுக்கப்படும் அபாயம் இருக்கிறது என்றும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். இப்போது நாட்டின் பல்வேறு நீதிமன்றங்கள் நிலுவையில் உள்ள வழக்குகளின் கதி என்ன என்பதை பற்றி மத்திய அரசு எதுவும் வாய் திறக்கவில்லைஎன்றும் சுட்டிக் காட்டுகிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.

நமது அரசியல் நிர்ணய சட்டம் நேரு காலத்திலிருந்து தொடர்ந்து பல திருத்தங்களை எதிர்கொண்டிருக்கிறது.

இந்திய குற்றவியல் சட்டங்களும் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது என்ற காரணமும் ஏற்புடையது தான். நீதித்துறை செயல்பாடுகளை நெறிப்படுத்தவும் குடிமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் காலம் தாழ்த்தாத நீதி வழங்கவும் தொழில் நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி விரைவில் தண்டனை வாங்கி தர இந்த சட்டங்கள் பயன்படும் என்று ஆளும் தரப்பில் சொல்லப்படுகிறது. அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று மறுப்பதற்கு இல்லை.

குற்றசெயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து காவல்துறையினரே தங்கள் விசாரணை வளையத்துக்குள் வைத்துக் கொள்ளலாம் என்று புதிய சட்டம் சொல்கிறது. இது காவல் நிலைய மரணங்களுக்கு அதிக வாய்ப்பு என்று மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

புதிய சட்டங்கள் அமுலுக்கு வந்திருப்பதால் ஏற்கனவே நீதிமன்றத்தில் தேங்கி யிருக்கும் பழைய வழக்குகள் கிட்டதட்ட இன்னும் 15 வருடங்களுக்கு மேலாகும் தீர்ப்பு சொல்ல என்று குரலும் நீதித்துறையில் ஒங்கி ஒலிக்கிறது.

மொத்தத்தில் முப்பெரும் குற்றவியல் சட்டங்கள் காவல்துறையினருக்கு அதிக அதிகாரம் கொடுத்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இனி இ.பி.கோ இல்லை …!

மக்கள் கருத்து ஒரு புறம் இருக்கட்டும். நீதித் துறையில் கோலோச்சிய மேனாள் உயர்நீதிமன்ற நீதியரசர் கே.என்.பாஷா அவர்களை சந்தித்து அவரது கருத்துக்களை கேட்டறிந்தோம்.

அந்தக் காணொளி இங்கே......... கொஞ்சம் நீளமான வீடியோவாக இருந்தாலும் இது ஒரு விளக்கமான பேட்டியாகவே வந்திருக்கிறது. நீதியரசருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

அது போலவே முன்னாள் கூடுதல் பப்ளிக் ப்ராசிக்யூட்டராக இருந்த முகமது ரியாஸ் அவர்கள் இந்த புதிய சட்டங்களில் என்னென்ன மாற்றங்கள் என்பதையும் சுருக்கமாக ஆனால் ஆழமாக விவரிக்கிறார்.

அந்தக் காணொளி இங்கே.......

பேட்டி ஏற்பாடு : ஆர்.ராஜேஷ் கன்னா

பேட்டி : ஜாசன்.