பீஷ்ம பிதாமகரோடு ஒரு பேட்டி
நேர்காணல் : வேங்கடகிருஷ்ணன்
ஒளிப்பதிவு : முத்ரா பாஸ்கர், மேப்ஸ்
நூற்றாண்டு கண்டவர்களை பார்ப்பது மிக அபூர்வம். அதே சமயம் நூறு வயது தாண்டி வாழ்கின்றவர்கள் ஆரோக்கியமான நிலைமையில் இருப்பது அதைவிட மிக அபூர்வமான ஒன்று. இது இரண்டையும் நேரில் பார்த்த வியப்பு மாறாமல் விகடகவிக்காக ஜோதிட சக்கரவர்த்தி, ஜோதிடர் திலகம் திரு ஏ எம் ராஜகோபாலன் நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது வாழ்வின் மிகப்பெரும் பாக்கியம்.
அவர் இருப்பது இரண்டு மாடி வீட்டில். அவர் லிப்ட் இல்லாத அந்த மாடிக்குடியிருப்பின் படிகள் மூலம் ஏறி, இறங்கித்தான் தனது வீட்டிலிருந்து பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று வழிபடுகிறார் என்று அவருடைய மகன் சொன்னபோது நம்பமுடியவில்லை. ஆனால் அவர் நம்முன் வந்து உட்கார்ந்து பேசத் துவங்கியதும் அந்த சந்தேகம் தவிடு பொடியானது. இந்த இளைஞர் கண்டிப்பாக எதை வேண்டுமானாலும் செய்வார் என்பது அவர் பேச்சிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.
பல கேள்விகளை எடுத்து வைத்துக்கொண்டு நேர்காணலை துவங்கிய போது முதல் கேள்விக்கு மட்டுமே அவர் சொன்ன பதிலில் என்னுடைய அத்துனை கேள்விகளுக்கான பதில்களும் ஒவ்வொன்றாக தாமாகவே வர துவங்கின. சில நிகழ்வுகளை நேற்று நடந்தது போல் அவர் விவரிக்கும் போது அதோடு ஒன்றிப் போய் நமது மனமும் அதன் கனம் தாங்காமல் தவிக்க துவங்கியது. கண்களில் ஏனோ ஈரம். அதே நேரம் எதிரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பது ஒரு சாதாரண மனிதர் அல்ல. ஒரு நூற்றாண்டின் அனுபவங்களை தன்னுடைய வாழ்க்கைக்குள் அடக்கி வைத்துள்ள ஒரு சகாப்தம்! என்பது நமக்குத் தெளிவாகத் தெரிந்தது. இன்றளவும் தனது கலைக்காக எந்த ஒரு பொருளாதார சமரசமும் செய்து கொள்ளாமல் தன்னை நம்பி வரும் அனைவருக்கும் நேரம் ஒதுக்கி அவர்களின் பிரச்சனையை தீர்க்க எளிய பரிகாரங்களை கூறி இருண்டு கிடக்கும் வாழ்க்கையில் ஜோதிடம் எனும் கைவிளக்கால் ஒளி ஏற்றி வழிகாட்டுவதை தனது கடமையாகவும், இறைவன் தனக்கிட்ட ஒரு கட்டளையாகவும் ஏற்றுக்கொண்டு இந்த சேவையை செய்து கொண்டிருக்கிறார். அதை சொல்லும்போது அவர் முகத்தில் ஏற்பட்ட உறுதி, வார்த்தையில் வெளிப்படுத்திய பணிவு நம்மையும் ஆட்கொண்டது. தனது இத்தனை வருட வாழ்க்கையின் வெற்றியாக, அதற்கு அடித்தளமாக அவர் இந்த நேர்காணலில் நிறைய முறை உச்சரித்த பெயர் அவருடைய மனைவி மட்டுமே. ஒருவனுக்கு உத்தமியாய் கிடைக்கும் ஒரு மனைவி அவன் வாழ்க்கையை தொடர மட்டுமில்லாமல் உயர்த்தியும் வைத்து விடுகிறாள் என்று அவர் சொன்ன போது இன்று திருமணம், நாளை விவாகரத்து என்று வாழும் இந்த தலைமுறைக்கு அது ஒரு மிகப்பெரிய அறிவுரை மட்டுமல்லாமல் அவருடைய வாழ்க்கையும் மிகப் பெரிய எடுத்துக்காட்டு என்பது புரிந்தது. அடுத்த மாதத்தோடு 70 ஆண்டுகால திருமண வாழ்வையும் நிறைவு செய்யும் இந்த தம்பதியர் அன்னியோன்யமான மனம் ஒத்த தம்பதியர் என்பது இந்த நேர்காணலில் காணொளியை பார்க்கும் போது உங்களுக்கும் தெரியும். அவருக்கு பின்னால் அமைதியாக உட்கார்ந்து அவர் சொல்வது அனைத்தையும் மீண்டும் ஒரு முறை புதியது போல் கேட்கும் இந்த மாதரசி இன்னும் பல ஆண்டுகாலம் வாழ்ந்து ஏ எம் ஆர் என்கிற இந்த மாபெரும் கலைஞனை பாதுகாத்து மக்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே நமது ஆசையும், பிரார்த்தனையும். மறக்க முடியாத நிகழ்வுகளாக காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவருக்கு நிகழ்ந்த அந்த மாபெரும் சம்பவம் அதில் இவரின் பங்கு என அவர் நமக்குச் சொன்னபோது அந்தப் பிரச்சனையின் நாம் இதுவரை கேள்விப்படாத ஒரு முகம் நமக்குத் தெரிய வரும்போது ஏற்படும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் நம்மை பேச விடாமல் செய்தது.
நமது ஆசிரியர் மதன் மேல் அவர் வைத்திருக்கும் அன்பும் மதிப்பும் அவரை நேர்காணல் செய்வதற்காக சென்றிருந்த எங்களை அவருடைய குடும்பம் நடத்திய விதம் இவை எல்லாம் நாம் வாழ்வது, வாழ்ந்து கொண்டிருப்பது இப்படிப்பட்ட மனிதர்களிடையேவா என்று நம்மை ஒரு கணம் வியப்புக்கு உள்ளாக்கியது உண்மை. வயதானவர் அதுவும் சில நாட்களுக்கு முன் தான் 100 வயது நிறைவினை கொண்டாடியவர் என்பதால் இது வெறும் நேர்காணல் மட்டும் என்று எடுத்துக் கொள்ளாமல் அவரிடம் ஆசி வாங்கும் ஒரு தருணமாகவும் இதை உபயோகப்படுத்திக் கொண்டு புஷ்பம் மற்றும் பழங்களுடன் சந்தித்து ஆசி பெற விழைந்தேன். ஆனால் நேர்காணல் முடிந்து திரும்பும் போது எங்களுக்கு மனம் நிறைந்த ஆசிகளோடு, கை நிறைய பரிசு பொருள்களும் இனிப்பும் பழ வகைகளும் கொடுத்து அந்த அன்பினால் எங்களை திக்கு முக்காட செய்து விட்டார். பிறருக்கு கொடுப்பதிலும் பிறர் மனதினை தேற்றி அவர்களுக்கு உதவுவதிலும் தான் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையின் இன்பம் இருக்கிறது என்பதை சொல்லாமல் தன்னுடைய செயலால் நமக்குப் புரிய வைத்து விட்ட இந்த ஏ எம் ஆர் இந்த நூற்றாண்டின் "பீஷ்ம பிதாமகர்".
முழுப் பேட்டியும் இங்கே... இரண்டு பாகங்களாக வெளிவரும்.
Leave a comment
Upload