பிறப்பின் பயன் படைத்தவனை அடைதல். அவனை அடைய அவனையே சரணாகதி செய்வது இந்த கலியுகத்திலும் நிதர்சனமாக பண்டரியில் கண்கூடாக நிரூபணமாகிக் கொண்டிருந்தன.
ஒரு ஒத்திகைக்காகவோ, விளம்பரம் செய்வதற்காகவோ என இல்லாது அப்பழுக்கற்ற அந்த சரணாகதி தத்துவம் அங்கிருந்த ஒவ்வொரு நிமிடமும் அரங்கேறிக் கொண்டிருந்தன.
படைத்தவனை அடைவது பிறவிப்பயன்.
வாழும் காலமெல்லாம் படைத்தவனை சரணடை.
அந்த சரணாகதி வழிக்கு யார் வழி காட்டுவார்? குரு தானே.
இதுவரை படைத்தவனை, அந்த விட்டலனை, அந்த பாண்டுரங்கனை, நேரில் கண்ட அவனது திருநாம மகிமையில் அமிழ்ந்து, முட்ட முட்ட தத்தளித்து தான் கண்டதோடு மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தையும் அந்த அமிழ்தத்தில் அமிழ்த்தி ஆனந்தத்தில் திளைக்கவிட்ட சந்த் ஞானேஷ்வர், சந்த் நாமதேவர், சந்த் ஏக்நாத் மற்றும் அவரது சகோதரர்களான சந்த் நிவ்ருத்தினாத், சந்த் சோபாந்தேவ், மற்றும் சகோதரியான சந்த் முக்தாபாயி தேஹுவில் பிறந்த சந்த் துக்காராம் மஹராஜ், போன்றோரின் பாண்டுரங்க தரிசன வழிமுறைகளையும், அபங்கங்கள் எனப்படும் பஜனை பாடல்களும் இங்கு வந்திருக்கும் அனைவரின் அன்றாட வாழ்வு முறையாகி விட்டது. அத்துணை குரு பக்தி.
தன்னுள் பாண்டுரங்கன், விட்டலன் இருக்கின்றான் என்பதோடு விட்டால் பரவாயில்லையே. இங்கு நடப்பதோ. தன்னுள் இருக்கும் விட்டலன் அடுத்தவன், தான் பார்ப்பவரின், உள்ளத்திலும் உள்ளான். எனக்கு விட்டலன் தாய். எனில், ஏனைய மற்றோரும் தாய் தான். இதையேத் தான் ஒருவரை ஒருவர் மாவூலி, அதாவது, தாய் எனவே ஆத்மார்த்தமாக அங்கம் குலுங்க, உள்ள மகிழ்வோடு கூவி கொண்டாடி மகிழ்கின்றார்களே.
இந்த நிலை கண்டவர்க்கு யார் மீது எந்த எதிரெண்ணங்கள் தான் தோன்றும்? இது தான் இப்படியென்றால், பார்க்கும் அனைத்து உயிரினங்களையும், அவர்களையும் மாவூலி மாவூலி என்று அன்போடு அழைத்து, அப்படியே பார்த்துவிடு என்றல்லவா தூண்டுகிறார்கள்.
இந்த பக்தி நிலையடைய பெரிய வழிமுறைகள் ஒன்றுமில்லை.
வாழ்வே விட்டலனாக்கிக் கொள்கிறார்கள். பெரிய படிப்பு படித்தவர்களில்லை ஆனால் வாழ்வின் தன்னையறிந்த உயரிய படிப்பான படைத்தவனை அடையும் அறிதலைப் புரிந்தவராய் இருக்கின்றனர் இவரனைவரும்.
அங்கு உயர்ந்தோர், தாழ்ந்தோர், படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடே காணவில்லையே.
இவர்கள் விட்டலனை இறைவனாகப் பார்த்து வணங்கி தம் குறைகளை வைக்க வந்தார்கள் போலத் தெரியவில்லை. மாறாய், விட்டலனை அந்நியோன்யமாய் தமது இல்லத்தின் ஒருவனாய் பார்த்து கொண்டாடிவிட்டு செல்ல வந்தவர்கள் போன்றே நிச்சயம் தோன்றியது.
கொட்டும் மழையிலும் குடை பிடிக்கத்தோன்றவில்லை, கட்டிடங்களுக்குள் ஒதுங்கக் கூடத் தோன்றவில்லை.
மழையே! நீ பெய்கின்றாயா! வா! விட்டலனைக் காண வந்தாயோ! எங்களோடு சேர்ந்து விட்டலனைக் கொண்டாடி மகிழ்ந்து கொள் என்று சொல்வதுபோல் பெய்த மழைத்துளி பக்தரின் அங்கங்களிலூடே தரையில் இறங்கியது அந்நியோன்னமாய் பின்னிப் பிணைந்து.
சாரை சாரையாய் நகர்ந்து கொண்டிருக்கும் பக்தர் கூட்டத்தில்
சுமார் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களுக்கு முன்பு கையிலாயத்திலிருந்து வந்து கொண்டிருந்த ஆதி சங்கரர் தனது ஆசிரமத்தை நிறுவ தென்னகத்தின் கோடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் சிருங்கேரியை அடைகையில் கனத்த மழையினை எதிர் கொண்டார். துங்கபத்ரா நதி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. கரையோரத்தில் அவர் கண்ட காட்சி அவரைத் திகைக்க வைத்தது.
அவர் கண்ட காட்சி இது .
அந்த கடும் மழையில் எப்படியோ ஒரு தடித்த இலையின் மீது பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்த தவளை அமர்ந்திருக்க அதற்கு ஒரு நாகப்பாம்பு படமெடுத்தவாறே குடை பிடித்தாற்போலே அந்த தவளையை மழையிலிருந்து காத்துக் கொண்டிருந்ததாம்.
இந்த இரு விலங்கினங்களும் இயற்கை விதிப்படி பார்த்தால் எதிரிகள். ஆனால் இந்த புனித இடத்தின் மகிமையால் எதிரித்துவமும் மறைந்து போனதே. ஆக அந்த இடத்திலேயே தனது முதல் ஆசிரமத்தை நிறுவினார் ஆதி சங்கரர்.
இங்கு, பண்டரிபுரத்திலும், அந்த இடத்தின் மகிமை என்று கூறினாலும், கூடவே, அந்த குருமார்களின் வழிகாட்டுதலின் மகிமையும் தான். அவர்களைப் பின்பற்றி வரும் லட்சோப லட்ச பக்த ஜனங்கள் வாயிலாக அதை நாம் கண்டிப்பாக உணர முடிந்தது.
Leave a comment
Upload