குப்புசாமி மாமா மீனாட்சி மாமி தம்பதியர் புது வீடு (flat) வாங்கி க்ருகப்ரவேசம் முடித்து ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. அது ஒரு சீனியர் லிவிங் கம்யூனிட்டி, எல்லா ஃபிளாட்டில் இருப்பவர்களும் வயதான தம்பதிகளே. மாமாவும், மாமியும் அக்கம்பக்கம் வீட்டுக்காரர்களை பேசி பேசி நண்பர்களாக்கி கொண்டுவிட்டார்கள். அந்த கம்யூனிட்டிக்கென்று ஒரு வாட்சப் க்ரூப்பை மாமாதான் துவங்கினார், அதில் உறுப்பினர் சேர்க்க வேண்டி ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று அவர்களோடு பேசி, குழுவில் இணைத்து அப்படியே ஒரு காபியையும் இலவசமாய் வாங்கி சாப்பிட்டு வந்துகொண்டிருந்தார்.
மாமி ஒரு நாளைக்கு ரெண்டு காபியோடு கோட்டா ஓவர் என்று கேட் போட்டுவிடுவாள். குப்பு மாமாவிற்கு ஒரு தனிப்பட்ட குணம் உண்டு. ஒரு வீட்டு காபியின் குணம், மணம், சுவையை வைத்தே அந்த வீட்டின் தன்மை, சாப்பாட்டு ரசனை, அவர்களின் மனப்பான்மை எல்லாவற்றையும் துல்லியமாக கணித்து விடுவார். மலையாளத்து பணிக்கரெல்லாம் அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். சோழி போட வேண்டாம், அவர்களை காபி போட சொல்லியே கணித்து விடுவார். ஆனால் அதை வெளியில் சொல்லாமல் தன்னுடைய அடுத்த நடவடிக்கைக்கு உபயோகப்படுத்திக்கொள்வார்.
மாமிக்கு சாயந்திரம் ஆனால் ரெண்டு விஷயம் தவறாமல் செய்யவேண்டும், விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்பது, வாக்கிங் போவது, மாமியில்லை மாமா. காபி கொடுக்கும்போதே வாக்கிங் பற்றி ஞாபகப்படுத்த துவங்கிவிடுவாள். காபி சாப்பிட்ட டபரா,டம்ளரை வாங்கும்போதே ஷூ, கைப்பை, மொபைல் எல்லாவற்றையும் கொண்டுவந்து மாமாவின் பக்கத்தில் வைத்துவிட்டு, பப்ளிக் எக்ஸாமில் பிட் அடிக்க முயற்சி செய்யும் மாணவன் பக்கத்தில் நிற்கும் எக்ஸாமினர் போல நின்று விடுவாள். மாமா கிளம்பும் வரை அங்கே, இங்கே நகரமாட்டாள், அன்றும் அப்படித்தான்..ஆபத்பாந்தவன் போல அவருடைய மச்சினன் அச்சு (ஏ) அச்சுதன் அவன் மனைவி அலமு (ஏ) அலமேலு அவர்களுடைய ஒரே சீமந்த புத்திரன் சுப்புணி (ஏ) சுப்பிரமணியோடு, சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்துவிட்டு கேன்டீனுக்குள் நுழையும் எதிர்க்கட்சி எம் எல் ஏக்கள் போல புயலாய் நுழைந்தனர்.. "வாடா அச்சு, இப்போ தான் காபி சாப்பிட்டோம் , நீ கொஞ்சம் லேட் " என்றார் மாமா. "அதனால என்ன அத்திம்பேர் அக்கா பிரெஷ் டிகாஷன் போட்டு, சூடா பஜ்ஜி யோட கொடுப்பா" என்று நிஜமான கான்டீன் நிலைமைக்கு கொண்டுவந்தான்.
"சரி, சரி நாழி ஆறது , நீங்க வாக்கிங் கிளம்புங்கோ " என்று ஸ்ட்ரிக்ட் ஆபிசராய் மாமி.
"அச்சு , வாயேண்டா, போய்ட்டு வருவோம், எனக்கும் கம்பெனி ஆச்சு "
காபி பறிபோன துக்கத்தில் வேறு வழியில்லாமல் மாமாவோடு கிளம்பினான். அலமுவும் மாமியும் பஜ்ஜி போட தயாரிப்பில் இறங்கினர்.
பார்க் அடுத்த தெருவில் இருந்தது. இந்த புது கம்யூனிட்டிக்கு குடி வந்ததிலிருந்து தினமும் ஷூ மாட்டிக்கொண்டு விறு விறுவென கிளம்புவார் மாமா. பார்க் உள்ளே வந்தபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட எம் எல் ஏ தொகுதிக்கு வருவதுபோல எதாவது ஒரு பெஞ்சை தேர்ந்தெடுத்து அமர்ந்துகொள்வார். மொபைலில் பழைய சிவாஜி காதல் பாடல்களை ஒலிக்க விட்டு போவோர் வருவோரையெல்லாம் கண்ணாலே ஸ்கேன் செய்ய துவங்கி விடுவார். அன்று அச்சு கூட வந்ததால் வேறு வழியில்லாமல் நடக்க துவங்கினார்(மாமியிடம் போட்டு கொடுத்துவிடுவானே, அப்புறம் ரெண்டு வேளை காபி ஒரு வேளையாக டீப்ரோமோஷன் ஆகிவிடும்)
தூரத்தில் ஒரு பெண்மணி இவரையே பார்த்துக்கொண்டு வருவது தெரிந்தது. அச்சு " அத்திம்பேர் யாரோ உங்களையே பாத்துட்டு வாரங்களே"
" தெரியலைடா , நானும் இப்பதான் பாக்கறேன் "
அந்த பெண்மணி நேராக மாமா முன்னாள் வந்து நின்று விட்டாள். தூர்தர்ஷன் நியூஸ் ரீடர் ஷோபனா ரவி சாயல். "என்ன தெரியலையா ? உங்களுக்கு " என்றாள். மாமா ஷாக்கில் உறைந்து போயிருந்தார். ஒரு அழகான (?) பெண்(மணி) என்னை தெரியலையா? என்று கேட்பது அவருக்கு கொஞ்சம் புதுசு, அச்சுவை பெருமையாய் ஒரு பார்வை பார்த்தார், தன்னை கடந்து போகும் புல்டாக் பத்மநாபன் பொறாமையாய் (?) பார்ப்பது போல இருந்தது. முகத்தில் "புதிய பறவை" சிவாஜி , சௌகாரை பார்ப்பது போல ஒரு எக்ஸ்பிரஷன்! மொபைலில் "பார்த்த ஞாபகம் இல்லையோ " பாடிக்கொண்டிருந்தது. " நீங்க...நீங்க.. நீ... பத்து...பத்மாசினி தானே" கண்டுபிடித்துவிட்ட பெருமிதம் முகத்தில் தெரிந்தது...
"சூப்பர், ஷெர்லாக் ஹோம்ஸ் தான் குப்பு நீ இன்னும் " கைகுலுக்கி பாராட்டினாள். அச்சு ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தான். "இது ..என்றாள் பத்து. " என் மச்சினன் அச்சு , மீனாட்சியோட தம்பி " என்று அறிமுகம் செய்தார். " எவ்ளோ வருஷம் ஆச்சு ஒன்ன பாத்து" என்றாள் பத்து.
இருவரும் அப்படியே நகர்ந்து பக்கத்துக்கு பெஞ்சில் அமர்ந்தனர். தனித்து விடப்பட்ட அச்சு திருவிழாவில் தொலைந்த குழந்தையாய் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தான். அவனிடம் திரும்பிய குப்பு மாமா "டேய் அச்சு போய் பார்க்குக்கு வெளிய கடலை வறுத்துகிட்டு இருப்பான் , மெதுவா போய் ரெண்டு பொட்டலம் வாங்கிட்டு வா என்று ஸ்டைலாய் பாக்கெட்டில் கைவிட்டு ஒரு நூறு ரூபாய் தாளை உருவி ரஜினி ஸ்டைலில் அவனிடம் வீசினார். அச்சு , என்ன அத்திம்பேர் பயங்கரமா ஸீன் போடறார், யார் இது, வந்து கவனிச்சுக்கலாம் என்று நினைத்துக்கொண்டே கிளம்பினான்.
" நீ எங்க இங்க ?" குப்பு மாமா
" இந்த ஊர் லைப்ரரிக்கு தான் ட்ரான்ஸ்பர்ல வந்திருக்கேன்,ரிடையர் ஆக இன்னும் அஞ்சு வருஷம் இருக்கு," பத்து
தன் அத்தை பெண்ணான அவளுக்கும் தனக்கும் எட்டு வயசு வித்தியாசம் என்பதையும், அதனால் தான் முறைப்பெண்ணான அவளை தன் அம்மா வேண்டாம் என்று சொன்னதும் மனத்திரையில் ஃப்ளாஷ் நியூஸாய் ஓடியது.
" ம்ம் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா ?" குப்பு மாமா கேட்டவுடன் அவள் முகத்தில் சட்டென வோல்டேஜ் ட்ராப். " இல்ல , பண்ணிக்கல, பண்ணிக்க தோணல " இருவரும் அமைதியானார்கள்....மொபைலில் " அங்கு சென்றதும் மறந்தாய் உறவை , இங்கு வந்ததே புதிய பறவை " கவிஞரும் மெல்லிசை மன்னரும் சரியான சிச்சுவேஷன் சாங் போட்டிருந்தார்கள்.
" ம் ம் சரி , இங்க எங்க தங்கி இருக்க?" குப்பு மாமா
" லைப்ரரி பக்கத்துல - தனிவீடு , இன்னிக்கு வெள்ளிக்கிழமை லைப்ரரி லீவு அதான் அப்படியே காத்தாட நடக்கலாம்னு வந்தேன், வாயேன் வந்து ஒரு காபி சாப்டுட்டு...................போ " என்றாள்.
ஒரு பக்கம் ஆசையாய் இருந்தாலும் , எதிர்க்கட்சிகளுக்கு நினைவில் வரும் பிரதமர் முகம் போல மீனாட்சி மாமியின் முகம் அவருடைய மனதில் வந்து போனது, அச்சுவும் வந்துகொண்டிருந்தான், "இன்னொரு நா வரேன், உன் மொபைல் நம்பர் என்ன " இருவரும் மொபைல் நம்பரை சேவ் செய்து கொண்டார்கள்....அச்சு வாங்கி வந்த கடலை பாக்கெட்டை அவள் கையில் கொடுத்தபோது ...கொஞ்சம் கலங்கித்தான் போனார் மாமா...
"என்ன அத்திம்பேர் , இவங்கள நான் பாத்ததே இல்லேயே " அச்சு
" சரி சரி இப்பவும் பாக்கவே இல்லேன்னு நினைச்சுக்கோ, இதை அங்க வந்து பிரஸ்தாபிக்காதே , கடலை வாங்குன மிச்ச காச நீயே வெச்சுக்கோ" என்று கர்ணனனாய் மாறினார் மாமா.
ஆஹா இதுல ஏதோ இருக்கும் போல இருக்கே...நமக்கு வசூல் வேட்டை தான் என்று வசூல் ராஜாவாக முடிவு செய்தான் அச்சு..
வீட்டிற்கு வந்து இருவரும் உக்கார்ந்தவுடன் , பஜ்ஜியும் சட்னியும் கொண்ட பிளேட்டோடு வந்தாள் மாமி.
சாப்பிட்டு விட்டு , மறக்காமல் பையனுக்கு பார்சல் வாங்கிக்கொண்டு கிளம்பினான் அச்சு, அத்திம்பேரை பார்த்து கண் சிமிட்டி விட்டு சென்றான். குப்புவிற்கு வயிற்றில் புளியை கரைத்தது.
இறங்கி கீழே கேன்டீனுக்கு போனார். மெனுவை படித்துக்கொண்டே வந்தவர் சனிக்கிழமை மெனுவில், ரவா தோசை , தால், தயிர்சாதம் , ஊறுகாய் என்று இருந்ததை பார்த்தார். இது என்ன புது மாதிரி காம்பினேஷன் ? என்று அங்கு இருந்தவர்களிடம் கேட்டார். யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. மேனேஜரைப் பார்த்தார் , " ரவா தோசைக்கு டாலா?" "அது பொருத்தமில்லாத ஜோடி யாச்சே" (ஏனோ பத்மாசினி நினைவில் வந்து போனாள், கூடவே மீனாட்சி மாமியும் ) ஒன்னு சட்னியும், சாம்பாரும் , இல்லேன்னா "கடப்பா" அதுதான் பெஸ்ட் காம்பினேஷன் என்றார். அங்கங்கே உட்கார்ந்திருந்த சிலர் கடப்பா என்ற உடன் எழுந்து அருகில் வந்தனர். " என்ன கடப்பாவா?" சூப்பர் , எப்போ? ரவா தோசைக்கா? ஆளாளுக்கு கேள்வி எழுப்ப , மேனேஜருக்கு தர்மசங்கடமாகி விட்டது. " சார் , எங்க குக் வடநாட்டுக்காரர், ரவா தோசையே இப்போ தான் கத்துக்கிட்டு இருக்கார், கடப்பான்னா , நான் கேள்விப்பட்டிருக்கேன் ஆனா சாப்பிட்டதில்லை " என்றார்.
" நீங்க நாலு பேர் கேட்குறதுக்காக மெனுவையெல்லாம் மாத்தமுடியாது " என்றார்.
குப்பு மாமா கடப்பாவுக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்தார். வாட்சப் குரூப்பில் நாளைய டின்னர் " ரவா தோசை கடப்பா, ரவாதோசை டால்" இரண்டையும் வைத்து ஒரு போல் (poll) நடத்த முடிவு செய்தார்.
போஸ்ட் செய்த உடனே தல தோனி சேப்பாக்கத்தில் இறங்கி அடிப்பது போல ஸ்கோர் எகிறத் துவங்கியது. 100 பேர் கொண்ட அந்த கம்யூனிட்டியில் 72 பேர் கடப்பாவைத் தேர்வு செய்திருந்தனர். தாலுக்கு மீனாட்சி மாமியையும் சேர்த்து நாலு பேர்.
மேனேஜரிடம் அதை காண்பித்தவுடன் அவர் அமைதியானார், ஆனால் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினார் , "யார் கடப்பா செய்யறது ?" இந்த கேள்வியை யாருமே எதிர்பார்க்கவில்லை. நிதியமைச்சரை பார்த்த இண்டி கூட்டணி எம் பிக்கள் போல எல்லோரும் "கப்-சிப் ". குப்பு மாமா கையை உயர்த்தி "மோட்டா பாய்" போல முன்னே வந்தார். நானே பண்றேன். என்றார். எல்லோருக்கும் சந்தோசம் . ஆரவாரம். மாமாவின் மொபைல் அடித்தது ஸ்க்ரீனில் "பத்து" என்று ஒளிர்ந்தது , முதல் ரிங்கிலேயே எடுத்து "சொல்லு" என்றார், சுற்றிலும் கேட்ட சத்தத்தை வைத்து "என்ன சத்தம் அங்க ?" என்று கேட்ட பத்துவிற்கு, கடப்பா புராணம் சொன்னார். " நீ இன்னும் குக் பண்றியா ? மறக்கவேயில்லை நீ, நாளைக்கு எனக்கு ஒரு பார்சல் ரவாவோட" என்று சொல்லி காலை கட் செய்தாள் , மூணு மிஸ்ட் கால் மீனாட்சி மாமி இடமிருந்து.
மாமியை கூப்பிட்டார் " என்ன சொல்லு ?" மாமி, அவர் குரலில் இருந்த சந்தோஷத்தையும், கொஞ்சம் அலட்சியத்தையும் சுற்றிலும் கேட்கும் சத்தத்தையும் வைத்து படபடவென மனதில் கணக்குகள் போட்டாள். யாரு கடப்பா பண்ணப்போறா ? "
"நான் தான் " குப்பு
லைன் கட்டானது.
மேனேஜரிடம் என்னென்ன வேணும் என்பதை எழுதி கொடுத்து விட்டு, சிங்கத்தின் தலையை சீப்பால் வார கிளம்பினார்.
உள்ளே நுழைந்ததும் " உங்களுக்கு ஏன் வீண் வேலை?, இது கம்யூனிட்டி கிட்சன் , அவங்க போட்டதை சாப்டுட்டு , போகவேண்டியது தானே ,"
"நான் கடப்பா பண்ணி நீ சாப்ட்டிருக்கே இல்ல?" , (நீ சாப்ட்டிருக்கியோ இல்லையோ பத்து சாப்ட்டிருக்கா )
" அதெல்லாம் கல்யாணம் ஆன புதுசுல, இன்னும் அத வெச்சே மஞ்ச குளிக்க முடியுமா? " மாமியின் குரலில் எகத்தாளம் தெரிந்தது.
"நாளைக்குப் பாரு, சாப்டுட்டு எல்லாரும் உன்ன வந்து கேக்கப்போறா, இப்படி ஒரு "நள பாகச் சக்கரவர்த்தியை வீட்டோட கட்டி போட்டுடீங்களே " அப்டீன்னு
"இதுல ஒண்ணும் குறைச்சலே இல்ல " வீட்ல காபி சாப்ட டம்பளரை அலம்பி கூட வெக்கறதில்ல...இதுல பொது மக்களுக்கு சேவை செய்யப் போறாராம் "
மாமி பேச்சை அப்படியே மனதில் வாங்கி சுறு சுறுவென எழுந்து பஜ்ஜி தட்டை அலம்பி வைத்தார். பர்சையும், பையையும் எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பினார். செருப்பை மாட்டும் முன் " பத்து, மார்கெட் போயிட்டு வரேன் " என்று சொன்னவர் , மாமி " என்ன பத்து ?" என்றவுடன் சுதாரித்து "பத்து மணிக்குள்ள வந்திடுவேன் " என்று சொல்லி விட்டு பதிலை எதிர்பாக்காமல் கிளம்பி போய் விட்டார்.
அரை மணி சென்று அலமு செய்து கொடுத்த சப்பாத்தியையும், சாகுவையும் எடுத்துக்கொண்டு அச்சு உள்ளே நுழைந்தான். " வாடா , எங்க அலமு ? " என்றபடியே மீனாட்சி மாமி வெளியே வந்தாள். "இல்லக்கா நாளைக்கு இட்லிக்கு நனைச்சிருக்கா, அத அரைச்சு வெக்கணும்னு அவ வரல" என்றான். டப்பாவைக் கொடுத்து விட்டு , " அக்கா , பத்து..பத்மாசினி னு யாரையாவது உனக்கு தெரியுமா ?" என்றான்.
" ஏன்டா, ஏன் கேக்குற ?"
" இல்ல சும்மா தெரிஞ்சுக்கலாம்னு தான் " அச்சு போய் விட்டான்.
மாமிக்கு உடனே மண்டையில் பல்ப் எரிந்தது, சிறிது நேரத்தில் பிரகாசமானது, " ஓ, அவ ஞாபகத்துல தான் , இவர் பத்துன்னு சொன்னாரா ?" இப்ப என்ன திடீர்னு , அம்னீசியா பேஷண்டுக்கு , பழசு ஞாபகம் வந்த மாறி , இவருக்கு ?"...
மாமி துப்பறிய துவங்கினாள்..
உற்சாகமாக மறுநாள் காலையிலேயே கடப்பாவுக்கு வேண்டியதெல்லாம் ரெடி செய்ய ஆரம்பித்துவிட்டார் குப்பு, காய்கறி வெட்டும்போது மொபைலில் "பார்த்த ஞாபகம் இல்லையோ " கூடவே வாயில் விசில் வேறு.
அச்சுவும் சுப்புணியும் டப்பாவோடு வந்துவிட்டார்கள், எல்லாவற்றையும் கேன்டீனுக்கு எடுத்துப்போனார்கள்.. இன்னும் சில ஆர்வக்கோளாறுகள் (மாமி அப்படித்தான் சொல்லுவாள்) வந்து கலந்து கொண்டன. அச்சு தான் அவ்வப்போது மேல போய் மாமாவுக்கு காபி கேட்டு வாங்கி வந்தான். (ஆச்சரியமாக அன்று மூணாவது காபி )
சென்டிமெண்டாக ஒரு கற்பூரத்தை ஏற்றி அடுப்பில் போட்டுவிட்டு , அதன் மேல் வாணலியை ஏற்றினார் குப்பு மாமா.
கட கடவென செய்ய ஆரம்பித்தார், வெங்கடேஷ் பட்டே வியக்கும் வகையில் இருந்தது அவரது செய்முறை. சுற்றி நின்ற "தானா சேந்த கூட்டம்" லைவ் கமென்டரி செய்துகொண்டே சத்தமும் , விசிலுமாய் , உற்சாகக் குரல் கொடுத்தது.
பிரதமர் பதவி ஏற்ற அன்று சென்செக்ஸ் போல மாமா புகழ் கம்யூனிட்டி முழுவதும் அதிமாகிக் கொண்டே போனது. சிலர் அமெரிக்காவில் இருக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு லைவ் வீடியோ காலில் "கடப்பா தயாரிப்பை " ஒளிபரப்பினார்கள். யூடூப்பில் லைவ் வேறு...லைக்ஸ் அள்ளிக்கொண்டிருந்தார் குப்பு.
ஒரு வழியாய் கடைசியாய் அரைத்த விழுதினை கொட்டி கிளறி விட்டார். மாமா, வாசனை மூக்கை துளைத்தது...அதற்குள் ரவா தோசை போட சொல்லி ஒரு கும்பல் மேனேஜரைச் சுற்றி வளைத்தது.
ஒரு கட்டு புதினாவை சிறியதாய் நறுக்கி அப்படியே தேர்ந்த ஸ்டார் ஹோட்டல் செஃப் போல கடப்பாவின் மேல் தூவினார் மாமா. அதை போட்டோ எடுத்து உடனே குரூப்பில் போட்டார்கள், கீழே "நவீன நளன் குப்புசாமி மாமா " " ஜூனியர் வெங்கடேஷ் பட்" என்று பட்டப்பெயர்கள் வேறு, குரூப் மெஸேஜுகளால் மாமி போன் அடித்துக்கொண்டே இருந்தது , இதில் லேடீஸ் குரூப்பில் , "மீனாட்சி கொடுத்து வெச்சவ நீ", " நாளைக்கு டிபன் என்ன ?" என்று மெஸேஜுகள் வந்தன.
மாமி மனசெல்லாம் பத்து போட வேண்டிய அளவுக்கு "பத்து " வின் நினைவுகள். முதலிரவில் பத்துவைப் பற்றி மாமா உளறியதெல்லாம் இப்போது அவருக்கு எதிரான சாட்சிகளாக ரீப்ளே ஆகிக்கொண்டிருந்தன மாமியின் மனக்கண்ணில்...
இது எதுவுமே தெரியாதவராய் அச்சுவின் டப்பாவோடு , அதில் அவர் மனசு போலவே தளும்பி வழியும் கடப்பாவோடு உள்ளே வந்த குப்பு மாமா , டப்பாவை குழந்தை போல அலுங்காமல் குலுங்காமல் மேஜைமேல் வைத்தார். "அச்சுவை வெளில வேலைக்கு அனுப்பிச்சிருக்கேன் , நான் போய் அலமுகிட்ட கொடுத்து வந்துடறேன். பாவம் சுப்புணி சூடா சாப்பிடுவான்" என்று சொல்லி விட்டு பாத்ரூமில் நுழைந்து விட்டார். உள்ளிருந்து விசிலோடு பாட்டு...மைசூர் சாண்டல் நுரையோடு தவழ்ந்து வெளியே வந்தது...
தலை துவட்டி புது சட்டை, பேண்ட் போட்டு கர்லிங் வைத்து தலை வாரி, உச்சி முதல் பாதம் வரை ப்ருட் கொண்டு குளிப்பாட்டி, மாமா டப்பாவை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.
மாமி எதுவும் கேட்க வில்லை , கேன்டீனுக்கு சாப்பிட கிளம்பினாள். அங்கே அவளுக்கு ஒரே பாராட்டு மழை , தனது தட்டில் பரிமாறப்பட்ட ரவாதோசையிலிருந்து ஒரு விள்ளல் எடுத்து கடப்பாவில் தொட்டு சாப்பிட்டாள், அப்படியே கலயாணமான புதிதில் மாமா கடப்பா பண்ணி சாப்பிட்டது ஞாபகம் வந்தது. " மனுஷன் நல்லாத்தான் பண்ணியிருக்கார்" மனசுக்குள்ளேயே உன்னால் முடியும் தம்பி ஜெமினி மாதிரி சர்டிபிகேட் கொடுத்தாள்.
அதையும் மீறி "பத்மாசினி" பத்ரகாளியாய் விஸ்வரூபம் எடுத்தாள்....
தட்டை காலி செய்து விட்டு, தனது பிளாட்டுக்கு மாமி போய் அமைதியாய் உட்கார்ந்தாள்.
அங்கே மாமா மனசு முழுக்க சந்தோஷமாய், டப்பா முழுக்க கடப்பாவும் , தானே எக்ஸ்ட்ரா நெய் ஊற்றி வார்த்த ரவா தோசைகளுமாய் நடந்துகொண்டிருந்தார். வாசலிலேயே வந்து வரவேற்ற பத்துவின் முகத்தில் சுரத்தே இல்லை. உள்ளே போய் வீட்டை சுற்றி பார்த்து டைனிங் டேபிளுக்கு வந்தபோது அவரின் மொபைல் போன் அலறியது. அச்சு அலறினான் " அத்திம்பேர் எங்காத்துக்கு வரேன்னு அக்கா கிட்ட சொன்னீங்களா ? அக்கா இப்போ எங்க ஆத்துக்குத்தான் போயிண்டிருக்கா...அலமு தான் சொன்னா..உடனே போங்கோ " போனை கட் செய்துவிட்டான்.
எதுவும் பேசாமல் " அர்ஜெண்டா போகவேண்டியிருக்கு" நான் அப்புறம் வரேன். நீ சாப்பிடு " என்ற சொன்னபடியே வாசலுக்கு விரைந்து செருப்பை மாட்டிக்கொண்டே ஓடினார்........
pin குறிப்பு :
( பாவம் அவருக்கு தெரியாது, அச்சு மாமியிடம் பத்துவைப் பற்றி உளறியதோ, மாமி தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அவளுக்கு வேற ஊருக்கு உடனே மாற்றல் உத்தரவு வாங்கியதோ, அதுமட்டுமில்லாமல், கடப்பா டப்பாவில் நிறைய உப்பையும், மிளகாய் விழுதையும் அவர் குளிக்கும்போது போட்டதோ , எதுவுமே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறார் )
Leave a comment
Upload