தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 22 “‘பகுத்தறிவு’ பல்பு” - மோகன் ஜி

20240715224632457.jpg

எழுபதுகளின் தொடக்கம். அன்று காலையில்தான் குருசாமி இல்லத்தில் சபரிமலை யாத்திரையைத் தொடங்க மாலை போட்டிருந்தோம்.

அதே மாலையில் விரதத்திற்கான விதிமுறைகளை விளக்குவதற்காக குருசாமி 'மீட்டிங்' போட்டிருந்தார். அன்றைய நாற்பது பேர் குழுவில் என்னைப் போல இருபத்திநாலு பேர் முதல்முறையாக யாத்திரை மேற்கொள்ளும் 'கன்னி' ஐயப்பன்கள்.

குருசாமி நியமங்களை விளக்கினார். பூஜை முறைகள், தரையில் மெத்தை தலையணை இன்றி படுப்பது, செருப்பின்றி நடப்பது, முடிதிருத்தல் மழித்தல் தவிர்ப்பது, எந்நேரமும் விபூதி, சந்தணம், குங்குமம் அல்லது திருமண் தரித்தபடி இருப்பது. நீலம் அல்லது கருப்பு சாய வேட்டி, சட்டையுமாக இருப்பது எனப் பலவும் சொன்னார்.

என் போன்ற விடலைகளுக்கு இன்னமும் வலியுறுத்திச் சொன்னார். எதிர்ப்படும் ஐயப்பமாரைக் கண்டால் 'ஸ்வாமி சரணம்' சொல்லி கைகூப்ப வேண்டும் என வலியுறுத்தினார்.

"எதிர்வரும் நபர் மலைக்குப் போற ஐயப்பன் என எப்படிக் கண்டுபிடிப்பது குருசாமி?" … கேட்டது என் வயதொத்த குமார். அவனைக் கேட்கச் சொன்னது நான்.

"அவங்களும் கருப்பு நீலம்னு கலர் வேட்டி, சட்டை போட்டுகிட்டு, நெத்திக்கு இட்டுகிட்டு இருப்பாங்க இல்லையா?. அந்தமாதிரி வரும் ஐயப்பமாரைப் பார்த்து சுவாமி சரணம்னு சொல்லு"

அறிமுகம் இல்லாதவருக்கும் வணக்கம் சொல்வது என்ற நெறிமுறை எனக்குப் பிடித்திருந்தது.

ஊக்கமாய்த் தலையாட்டிவிட்டு வீடு நோக்கி நடந்தபோது இரவு ஒன்பது மணி இருக்கும். ஊரடங்கியிருந்தது. அங்குமிங்குமாக தெருவிளக்கு கம்பங்களிலிருந்து மஞ்சள் குண்டு பல்புகள் அழுதுவடிந்தபடி குறைந்த வெளிச்சமே பாய்ச்சின.

தெருமுனையில் சிறியஅம்மன் கோவிலருகே இருவர் எதிரில் வந்தபடி இருந்தார்கள். அதில் ஒருவர் சைக்கிளைத் தள்ளியபடி வந்தார். அங்கிருந்த குறைந்த வெளிச்சத்திலும் அவர்களின் கருப்பு சட்டை தென்பட்டது.

'சாமி சரணக் கும்பிடு' போட்டுவிட வேண்டியது தான். அதுக்குள்ள முதல் போணி!

'ஸ்வாமியே சரணம்' என்று நான் ஜோராகக்கூறி முடித்தபோது, அவர்களை நேருக்குநேராக நெருங்கியிருந்தேன். ஆனால் அவர்கள் நெற்றியில் விபூதியோ, திருமண்ணோ ஏதும் காணப்படவில்லை.

"சாமி சரணம் மாமி சரணம்னு கிளம்பிட்டீங்களாடா?" இது சைக்கிள் ஆசாமி.

"யார் வீட்டுப்பயடா நீ? கிண்டலா?" என்று எடுப்பான பற்களுடனிருந்த அடுத்தவர் முறைக்க, தூரத்தில் மைக்முழக்கம்....

'இந்தப் பார்ப்பணர்களை வேரோடும் வேரடிமண்ணோடும் ஒழித்தால் மட்டுமே....' ஏதோ பகுத்தறிவு பொதுக்கூட்டத்தின் நடுவே நகர்ந்துவிட்ட நாத்திக நம்பிக்கைவாதிகள் இருவரும் என்று மெல்ல உறைத்தது.

ஆஹா.. புரிஞ்ச் போச்... நம்பி நாத்திக அங்கிள்களை வம்புக்கிழுத்து விட்டேன்.

''சாரிங்க கவனிக்கலை!" என்றபடி அவர்கள் கூப்பிடக்கூப்பிட வேகமாக நடையைக் கட்டினேன்.

சே! முதல் 'ஐயப்ப ஹலோ'வே புட்டுகிச்சே! அதுவும் சாமியே இல்லைன்னு நம்புறவர்க்குப் போய் சொல்லிட்டேனே... தெய்வ குத்தம் பண்ணிட்டேனோ? கலவரமாய் உணர்ந்தேன். அப்போ ரொம்பச் சின்னவன் வேற!

அடுத்தநாள் விடிந்தவுடன் பூஜைமுடித்து குருசாமியிடம் ஓடினேன். அவர் திட்டினாலும் பரவாயில்லை. நடந்ததைச் சொல்லிவிட வேண்டியதுதான்.

"தலைக்குத் தானே குளிச்சே? சந்தி பண்ணினியா? சரணம் சொன்னியா?"

"எல்லாம் பண்ணிட்டேன் குருசாமி. நேத்துதான் சொல்லக்கூடாதவர் கிட்டே சரணம் சொல்லிட்டேன்!" என்று ராத்திரி நடந்த விவரங்களைச் சொன்னேன்.

"மனுஷா எல்லார் உள்ளேயும் ஐயப்பன் இருக்கான் மோகா! நாம ஒருத்தருக்கொருத்தர் வணங்குற போதெல்லாம் எதிராளி கிட்ட இருக்கற பகவானைத்தான் வணங்குறோம்."

"குருசாமி! ஐயப்பனை ஒத்துக்காதவர்க்கில்லே சாமி சரணம்னு கும்பிடு போட்டுட்டேன்?"

"யோசிச்சுப் பாரு. அந்த நாஸ்திகர்க்குள்ளே இருக்கிற பகவானுக்கு யாருமே ‘ஸ்வாமி சரணம்’னு வணக்கம் வச்சிருக்கமாட்டாங்க இல்லியா? ஆனா நீயோ முதன்முதலா அவருக்கு மரியாதை பண்ணிட்டே. அந்த பகவான் எவ்ளோ சந்தோஷப் பட்டிருப்பார்? உனக்குத்தான் அவர் நிறைய அருள் தருவார் பார்த்துக்கிட்டே இரு மோகா!"

"அவங்களுக்கு கோபம் வந்து என் முதுகுல ரெண்டு போட்டிருந்தாங்கன்னா?" என்றேன்.

"முதுகிலே போட்டா அதைப் பிரசாதம்னு எடுத்துக்க வேண்டியது தான்" இந்தமுறை பதில் அடுக்களையிலிருந்து வந்தது.... குருபத்தினி கையில் காபியுடன் சிரித்துக்கொண்டே வந்தார்.

அவங்க 'சாமி சரணம் மாமி சரணம்'னு உங்களையும் தான் சேர்த்து கேலி பண்ணினாங்க தெரிஞ்சிக்கோங்க!" என்றபடியே காபியை வாங்கிக் கொண்டேன்.

இந்தமுறை சிரித்தவர் குருசாமி! தன் மனைவியைப் பார்த்துச் சொன்னார். "பிரசாதம் தருவாங்கன்னு சொல்லிட்டே இல்லையா? இன்னமே எதிர்ல போறவனை நிறுத்தி, ஜாக்ரதையா, குலகோத்ரம், குருசாமி பிரவரமெல்லாம் கேட்டுட்டு, 'சபரிமலைக்கு தானே போறீங்க'ன்னு கன்ஃபர்ம் பண்ணிட்டுதான் சுவாமி சரணம் சொல்வான். இல்லையா மோகா?"