இந்த வாரம் மற்ற சித்திரக் கவியில் உள்ள வகைகளைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார் பரணீதரன்.
நாக பந்தம்
செய்யுளில் உள்ள எழுத்துக்களை எடுத்து அவற்றை பந்த இலக்கணம் சேர்த்து பாம்பை போல உருவாக்குவதே நாக பந்தமாகும். இதில் பலவகை உள்ளது.
திவி (த்வி - 2 என்ற வடமொழிச் சொல்) நாக பந்தம் என்ற இரட்டை நாகபந்தம். சதுர்(சதுர் - 4 என்ற வடமொழிச் சொல்) நாக பந்தம் என்ற நான்கு நாக பந்தம். அட்ட (அஷ்ட - 8 என்ற வடமொழிச் சொல்) நாக பந்தம் என்ற எட்டு நாக பந்தம் போன்ற பலவகையான நாகபந்தங்கள் உள்ளன. சோடச (ஷோடஸ - 16 என்ற வடமொழிச் சொல்) நாகபந்தம் என்ற 16 வகையான பாம்புகளை வைத்து உருவாக்கப்பட்ட செய்யுள்களும் உள்ளன.
ஆனால், அவை இப்பொழுது நமக்கு கிடைக்கவில்லை. இந்த இலக்கணத்தை முழுவதுமாக புரிய வைப்பது கடினம் என்பதால் இதைப் பற்றி நாம் விரிவாக பேசப்போவதில்லை.
கோவில்களிலும் வீடுகளிலும் நாம் பார்க்கும் பல்வேறு வகையான இயந்திரங்களை உருவாக்குவதற்கு இப்படிப்பட்ட பந்தங்களை உதவுகின்றன. இவைகள் நன்மைக்காகவும் தீமைக்காகவும் உருவாக்கப்படுகின்றன. கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோவிலிலும் இன்றைக்கு திறக்க முடியாமல் உள்ள கதவில் நாகம் பந்தமே வரையப்பட்டுள்ளது. அதற்கான சரியான பாடலை அமைத்தால் மட்டுமே அந்த கதவை திறக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள்.
இப்போது இவைகளுக்கான எடுத்துக்காட்டுகளை பார்ப்போம்.
முதலில் இரட்டை நாக பந்தத்தை பார்ப்போம்.
இதற்குரிய இலக்கணமாக - இரண்டு வெண்பாக்கள் இருக்க வேண்டும். வெண்பாக்கள் அறத்தை பற்றிய கருத்துக்களை உடையதாக இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட எழுத்துக்கள் இரண்டு வெண்பாவிலும் பொதுவாக இருக்க வேண்டும்.
அருளின் றிருவுருவே அம்பலத்தா யும்பர்
தெருளின் மருவாரு சிர்ச்சீரே - பொருவிலா
வொன்றே யுமையா ளுடனே யுறுதிதரு
குன்றே தெருள வருள்.
மருவி னவருளத்தே வாழ்சுடரே நஞ்சு
பெருகொளியான் றேயபெருஞ்சோதி - திருவிலா
வானஞ் சுருங்க மிகுசுடரே சித்த
மயரு மளவை யொழி.
அருளின் திருவுருவமாகவும், அம்பலத்தில் ஆடுபவராகவும், தேவரின் துயர் தீர்ப்பவராகவும், உமையாளுடன் இருப்பவராகவும், உறுதிதரும் குன்றாக இருப்பவராகவும் ஆகிய சிவபெருமானின் அடியேனுக்கு அருள் தருவீராக என்பது மேலே உள்ள செய்யுளின் விளக்கமாகும்.
வணங்கியவரின் உள்ளத்தில் வாழ்கின்ற சுடரே! நஞ்சினால் உண்டாகிய நீல நிறம் உடைய கழுத்தினை உடைய பெரிய ஜோதியாக இருப்பவனே. அழகிய நிலவினை உடைய ஆகாயமானது சிறியதாக தெரியும் அளவிற்கு பெரிய ஜோதியாக வெளிச்சத்தை கொடுக்கும் திருமேனியை கொண்டு உள்ள ஜோதி சொரூபனே! எனது உள்ளம் வேறு எதற்கும் மயங்காமல் எனது சித்தத்தை அழித்து ஒழிப்பாயாக. அதாவது சிவபெருமானிடம் மட்டும் மனம் செலுத்தும் படியான சித்தம் வேண்டும் என்று கவிஞர் பாடுகிறார்.
பரவ சோகுதண் பாடல ராசியும்
விரவி யூங்கு மிடைகர வீரமுங்
குரவ மாமல கங்குளி ரக்கியு
முரம னைபட வோங்கு குணத்தவே
புனைவண் டாடு மருத மரவம்பூ
நனைவம் பேய்தொடை பொங்கரா னாடியே
நினைகண் ணோகண்டா ஸனீதம தாகுவ
தனைவ ராத தரமொய்க றாதவே
- திருஅம்பர்ப்புராணம்
மேலே உள்ள செய்யுள் திருஅம்பர் புராணத்தில் வரக்கூடிய பகுதியாகும்.
செல்வச் சிரவைத் திருவருட் டேசிக
னல்லருட் பார்வையைநீ நாடு
சுந்தர சாமியைத் தெய்வக் குருவாக
வந்தனைநீ செய்வையேலுய் வை
- தோத்திர மஞ்சரி
செல்வத்தை தரக்கூடிய கொங்கு நாட்டில் உள்ள சிரவனபுரம் (கோவை என்று அழைக்கப்படுகின்ற கோயம்புத்தூர் அருகே உள்ளது) என்று அழைக்கப்படுகின்ற சிரவையில் திருவருளை தரக்கூடிய தேசிகனின் (குருவின்) பார்வை படுவதற்கு அங்கு சென்று அவரை நாடு. சுந்தரசாமி என்று அழைக்கப்படுகின்ற தெய்வகுருவை வழங்கி அவருக்கு பணிவிடை செய்தால் நீ மென்மேலும் உயரலாம் என்பதே இந்த பாடலின் பொருள்.
மாறன் சடகோபன் வண்குருகூர் வாழ்பொருநை
யாற னளிமேய வன்ணமே - யேறுத்
தமனாமா மாசரதன் றாண்மொழிதற் பாமன்
னெமர்யா யெமையா ளிறை
அறமும றமமைந்த வன்பென் பதுவும்
பெறனன் னலமதுண்மை பேரா - துறுபாற்கோர்
மானமன மேநினைமான் மாமேகத் தந்தமே
யேன மெமையாளி யை
- மாறனலங்காரம்
மாறன் என்றும் சடகோபன் என்றும் அருமையான திருக்குருகூர் என்று அழைக்கப்படுகின்ற இன்றைய நெல்லை (திருநெல்வேலி) மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழ்வார் திருநகரி என்ற ஊரில் பிறந்து வளர்ந்து வாழ்ந்த அனைவருக்கும் வாழ்வளிக்கும் பொருநை நதியாம் தாமிரபரணியை போல அருளை பொழியும் நம்மாழ்வாரே எமக்கு இறைவனாக இருக்கிறார்.
அறமும் மறமும் அமைந்தவனாகவும், பெறுவதற்கு நல்லது என்பதாக இருக்கக் கூடியவனாகவும், உண்மையை போன்ற தன்மையை உடையவனாகவும், இந்த உயரிய உலகத்திற்கு ஒரு நிலையான தன்மையை கொடுக்கக்கூடிய மிகப்பெரிய மேகத்தை ஒத்த திருமாலை போன்ற புகழையுடைய நம்மாழ்வார் என்னை ஆளக்கூடியவராக இருக்கிறார்.
இதுவே மேலே உள்ள செய்யுளின் பொருளாகும்.
சேயா சேயாதே தேயா சேயாசே
மாயா மாயாவா வாயா மாயாமா
வாயா மாவாயா மாயா சேமாசே
யோயா நோயாவோ யாயே தேயாளே
- பாம்பன் சுவாமிகள்
சேய் என்று அழைக்கப்படுகின்ற குமரனாகிய முருகப் பெருமானே, எங்களோடு விளையாடாமல் எங்களுக்கு வேண்டுவன செய்து கொடுக்க வேண்டும், எங்களுக்கு நன்மைகள் யாவும் வரச் செய்ய வேண்டும், மாயையை தோற்றுவித்த நீ, மாயை கட்டுக்களை அவிழ்த்து, எங்களோடு இருந்து, யானையைப் போன்ற பெரிய துக்கங்களை அழித்து, நோய்களை ஒழித்து, எங்களுக்கு நன்மையை செய்ய வேண்டும் என்பதே மேலே உள்ள கவியின் விளக்கம்.
அடுத்த வாரமும் மற்ற சித்திரக் கவிகள் தொடரும் .
Leave a comment
Upload