புகழிமலை முருகன் கோயில், தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், காவிரி ஆற்றின் தென்பகுதியில் அமைந்து உள்ள வேலாயுதம்பாளையம் என்னும் ஊரில் சிறு குன்றின் மீது அமைந்திருக்கிறது. இங்கு முருகன் ஶ்ரீ பாலசுப்ரமணிய சுவாமியாக அருள்பாலிக்கின்றார். இந்த மலை, ‘ஆறுநாட்டார் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த மலையில் வேல் மட்டும் ஊன்றி அதனை வழிபட்டுள்ளனர். வேல் வைத்து வழிபடுதல் தொன்மையான மரபு. இந்த வேல் வழிபாட்டை அருணகிரிநாதர் திருப்புகழில்
“பொருதவரு சூரர் கிரியுருவ வாரி
புனல்சுவற வேலை ...... யெறிவோனே
புகலரிய தான தமிழ்முநிவ ரோது
புகழிமலை மேவு ...... பெருமாளே.” எனப் பாடியுள்ளார்.7
இக்கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. ஆயினும் கி.பி.15 ம் நூற்றாண்டினரான அருணகிரிநாதர் இந்த மலை மீதுள்ள முருகனைப் பற்றி திருப்புகழில் பாடியதைக் கொண்டு இதன் பழமையை அறியமுடிகின்றது.
வேலாயுத வழிபாடே வேலன் வழிபாடாகி பின்னர் உருவுடைய முருகனை நிறுவி வழிபடும் வழக்கமாக மாறியுள்ளது. வேல் ஊன்றிய இம்மலை மற்றும் அமைந்துள்ள ஊர் வேலாயுத(ன்)ம்பாளையம் எனப்படுகிறது.
சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள் இப்பகுதியில் வாழ்ந்துவந்தனர். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலி மலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் புகழூர் எனப் பெயர் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. இங்குதான் சமணர்கள் தியானம் செய்த குகை மற்றும் பழமையான தமிழ் பிராமி சிற்பம் போன்றவை காணப்படுகின்றன.
ஸ்தல புராணம்:
முருகப்பெருமான் ஞானப்பழம் தனக்குக் கிடைக்காததால் பழனிக்குச் செல்லும் வழியில் சிறிது நேரம் இத்தலத்தில் தங்கியிருந்ததாகவும், மேலும் இங்குப் பால சுப்பிரமணியராகப் பக்தர்களுக்கு அருள்பாலித்ததாகப் புராணக்கதை கூறுகிறது.
ஸ்தல வரலாறு:
புகழூர் அருகில் காவேரி ஆற்றங்கரையின் தென் பகுதியில் உள்ள வேட்டமங்கலம், புகழியூர், தோட்டக்குச்சிறி, கடம்பன்குச்சிறி, வாங்கல், நெரூர் ஆகிய ஆறு கிராமங்களுக்கு புகழிமலை முருகன் அருள் புரிந்தமையால் ஆறு நாட்டார் மலை என்றும் அழைக்கப்படுகின்றது. இந்தக்கோவில் 12 ஆம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கட்டப்பட்டது. இம்மலை மைசூர் எல்லையாக இருந்த காலகட்டத்தில்தான் இக்கோயில் கட்டப்பட்டதால் இதன் கோபுரங்கள் மைசூர் கோயில்களின் கட்டட பாணியில் அமைந்துள்ளது.
சங்க காலத்தில் சமணர்கள் இம்மலையில் அடைக்கலம் பெற்று வாழ்ந்து வந்தனர். அவர்கள் புகுந்த இம்மலை புகழிமலை என்னும் பெயர் பெற்றுப் புகழ் அடைந்து உள்ளது. மலையின் இடைப்பகுதியில் வடக்குப் பக்கமும் தெற்குப்பக்கமும் இரண்டு குகைகள் உள்ளன. அந்த குகையில் சமணர் படுக்கைகள் உள்ளன. அந்த படுக்கையை அமைத்துக் கொடுத்த சேரனைப் பற்றியும் படுக்கையில் இருந்த சமணத்துறவிகள் பற்றியும் அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இந்த கல்வெட்டுகள் தாமிலி எழுத்துக்களில் காணப்படுகின்றன. இதனை தொல் பொருள் ஆராய்ச்சித் துறையினரால் தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றது.
ஸ்தல அமைப்பு:
இந்த முருகன் கோயில் சுமார் 400 அடி உயரமுள்ள பசுமையான மலையின் மீது அமைந்துள்ளது. இந்த மலைக்கு வடக்கே அகண்ட காவிரி ஓடுகிறது. இதன் மலை வழிப்பாதை கிழக்கு திசையை நோக்கி அமைந்து உள்ளது. மலைக்குச் செல்லும் வீதிக்கு மலைவீதி என்றும், மலையைச் சுற்றி வரும் வீதி தேரோடும் வீதி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் சுற்றளவு 4 கிலோ மீட்டர் தூரம் ஆகும்.
மலையின் அடிவாரத்தின் கீழ்த் திசையில் கிழக்கு நோக்கி பாத விநாயகர் சந்நிதி உள்ளது. மலையின் நுழைவுவாயில் மண்டபத்தின் முன் மலையை நோக்கி மேற்கு திசையில் முருகனுடைய மயில் வாகன சந்நிதி அமைந்துள்ளது. இதன் அருகில் உற்சவமூர்த்தி மண்டபம் உள்ளது. மலையின் உச்சிக்குச் சென்று முருகனைத் தரிசிக்க சுமார் 315 படிக்கட்டுகள் ஏற வேண்டும். சில படிக்கட்டுகள் ஏறியதும், தென் திசையில் மலைக்காவலரான அய்யனாருக்குத் தனி சந்நிதி உள்ளது. இன்னும் சில படிகள் ஏறியவுடன் தென் திசையில் உள்ள சிறிய குகையில் சுதையாலான சிவன் - பார்வதி அமர்ந்த நிலையில் உள்ளனர். அதன் அருகில் ஒளவையாரும் நின்ற நிலையில் காணப்படுகிறார்.
இதனைத் தொடர்ந்து கிழக்குத் திசை நோக்கி ஏழு கன்னிமார்கள் சந்நிதி உள்ளது. இதற்கு எதிர்த் திசையில் அடர்ந்த காடு போல் ஒரு பூங்காவும் அமைந்துள்ளது. இருக்கும். இங்கே புலி, சிங்கம், யானைகள் உலாவுவது போல் உள்ள சிலைகள் உள்ளன. இக்காட்டின் ஒருபுறத்தில் வள்ளி மானுடன் திரிவது போல் உள்ள சிலைகள், மற்றொரு இடத்தில் வேடவர் வேடத்தில் வேட்டைக்குச் செல்லும் முருகன் சிலையும் உள்ளன. இங்குள்ள ஒரு மலைக் குன்றின் மீது கடும் தவத்தில் இருக்கும் சுதையாலான அகத்தியரின் சிலையைத் தரிசிக்கலாம். இதைத்தவிரப் படிகளின் இருபுறங்களிலும் சுதையிலான மகான்கள், சித்தர்கள் சிலைகளும் உள்ளன. மேலும் சில படிகள் ஏறியதும், வடதிசை நோக்கி இடும்பன் சந்நிதி உள்ளது.
இந்த சந்நிதிக்கு பின்புறம் கல்வெட்டுகள், சமணர்கள் படுக்கை இருப்பது வரலாற்றுச் சிறப்பாகும். தொடர்ந்து ஏறினால் மலையின் உச்சியில் முருகன் சந்நிதி நுழைவாயில் மண்டபம். சிறிது தூரத்தில் கருவறையின் முன்புறம் தீப ஸ்தம்பம், துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரம், பலிபீடம் மற்றும் மயில் வாகனம் ஆகியவற்றைக் காணலாம். முக மண்டப நுழைவாயிலின் இடது புறத்தில் உச்சிஷ்ட மகா கணபதி சந்நிதி அமைந்துள்ளது.
இதையடுத்து கருவறையின் முன் மகாமண்டபம் உள்ளது. கருவறையில், பாலசுப்பிரமணியராக ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, வஜ்ஜிரம், சக்தி ஆகிய படைக்கலங்களையும் அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடன் கிழக்குத் திசை பார்த்து நின்ற கோலத்தில், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். முருகனுக்குப் பின்புறம் இடது புறம் தலை சாய்த்தபடி தேவ மயில் உள்ளது.
முருகப்பெருமான் தரிசனத்திற்குப் பின்னர் சிவகாமி அம்பாள் சமேதராக நடராஜர் நடனமாடிய நிலையில் தனி சந்நிதியில் அருளுகின்றார். அடுத்து, மீனாட்சி அம்மனும், சுந்தரேசரும் தனித்தனி சந்நிதியில் காட்சியளிக்கின்றனர். இதைத்தவிர நவகிரகங்கள், துர்க்கை, நாகர், தட்சிணாமூர்த்தி முதலிய சந்நிதிகளும் உள்ளன. வெளிப் பிரகாரத்தில் சிவனுக்கு நந்தியும், துவஜஸ்தம்பமும் உள்ளன. இத்திருக்கோயிலில் தைப்பூச உற்சவத்துக்குச் சிவன் சந்நிதி கொடிமரம், சுப்பிரமணியர் கொடிமரம் இரண்டிலும் கொடியேற்றி 13 நாட்கள் உற்சவம் சிறப்பாக நடைபெறும். கோயிலின் பின்புறம் வேல் ஒன்றும் கிணறும் உள்ளன.
ஸ்தல விருட்சம் : ஆலமரம்
ஸ்தல தீர்த்தம் : நந்தவனக் கிணறு
ஸ்தல சிறப்புகள்:
இந்தக் கோயிலில் முருகனுக்குப் பின்புறம் உள்ள தேவ மயில்
மற்ற திருக்கோயில்களில் உள்ளதைப் போன்று இல்லாமல், தலை சாய்த்தபடி இடப்புறமாகவும், தோகை வலப்புறமாகவும் இருக்கின்றது. இத்தகைய அமைப்பு சூரசம்ஹாரத்துக்கு முற்பட்ட முருகனின் திருக்கோலத்தைக் குறிக்கும். இதிலிருந்து இந்தக் கோவிலின் புராதனத்தை அறியமுடிகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம் பல ஆண்டுகளுக்கு முந்தயை பழமையான 12 ஆம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். கோபுரங்கள் மைசூர் பகுதிகளில் இருப்பதைப் போல் காட்சி அளிக்கிறது. தாமிலி எழுத்துக்கள் கோயிலின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. கோயில் அமைந்துள்ள மலையில் சமணர்கள் தங்கியதற்கான கல் படுக்கைகள் காணப்படுகின்றன.
புகழூர் அருகில் காவேரி ஆற்றங்கரையின் தென் பகுதியில் உள்ள வேட்டமங்கலம், புகழியூர், தோட்டக்குச்சிறி, கடம்பன்குச்சிறி, வாங்கல், நெரூர் ஆகிய ஆறு கிராமங்களுக்கு புகழிமலை முருகன் அருள் புரிந்தமையால் ஆறு நாட்டார் மலை என்றும் அறியப்படுகின்றது.
இத்தலத்தில் உள்ள விஷ்ணு துர்க்கையை 12 வாரம் எலுமிச்சம் பழ விளக்குப் போட்டு வணங்கினால் 12வது வார முடிவில் கல்யாணம் கண்டிப்பாக நடக்கும் என்பது ஐதீகம்.
திருவிழாக்கள்:
வைகாசி விசாகம், ஆனி மூலம், ஆடிக் கிருத்திகை, திருக் கார்த்திகை தீபத் திருவிழா, கந்த சஷ்டி, தைப்பூசம்,பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பான முறையில் கொண்டாடப்படுகின்றன.
இத்திருக்கோயிலில் தைப்பூச உற்சவத்துக்குக் கொடிமரம் இரண்டிலும் கொடியேற்றி 13 நாட்கள் உற்சவம் சிறப்பாக நடைபெறும்.
தேர்த் திருவிழாவும் இரண்டு நாட்கள் சிறப்பான முறையில் நடைபெறும். மேலும் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தை பூசம் அன்று பக்தர்கள் 'காவடி' எடுத்துச் செல்வது மிகவும் மங்களகரமான நிகழ்வாகும். தமிழக பாரம்பரிய நடனமான குச்சிப்புடி, ஒயிலாட்டம் உள்ளிட்ட நடனங்கள் இங்குப் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுவது வழக்கம். அதேபோல் ஐப்பசி கந்தசஷ்டி உற்சவம் சூரசம்காரத்துடன் ஏழு நாட்கள் நடைபெறும். இத்திருவிழாவைக் காண ஆறு நாட்டு மக்களும் கலந்து கொள்வார்கள்.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
இங்குள்ள முருகனை வழிபட்டால் கல்யாண வரம், தொழில் விருத்தி, புத்திர பாக்கியம், உடல் நலக் குறைவு நீங்குதல் ஆகியவை நிறைவேறுகின்றன. ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப் பெறவும் இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள்.
இங்கே முருகனுக்கு நேர்த்திக்கடனாக வேல் செலுத்தி வழிபடும் வழக்கம் பிரசித்தம். செய்த பாவங்கள் யாவும் தீர்ந்து நல்வாழ்வு அமைய வேண்டி, பக்தர்கள் தங்கள் கையில் வேலோடு இந்தக் கோயிலுக்கு வருகிறார்கள். தொடர்ந்து 12 வாரம் செவ்வாய்க்கிழமைகளில் செவ்வரளிப் பூ மற்றும் செவ்வாழைப் பழம் படைத்து வழிபட்டால், திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும். சஷ்டி விரதமிருந்து முருகப் பெருமானைத் தரிசித்தால், குழந்தை பாக்கியம் கிட்டும். ஐப்பசி சஷ்டி தினத்தில் தினை மாவு வைத்து வழிபடுவது கூடுதல் விசேஷம். மழை பெய்ய வேண்டியும், ஊர் ஒற்றுமைக்காகவும் இக்கோயிலின் 315 படிகளுக்கும் நெய் தீபம் அல்லது சூடமேற்றி படி பூஜை செய்வது வழக்கம். மற்றும் காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல். சஷ்டி விரதம் இருத்தல், சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தும் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் தினசரி காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் கோயில் திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
கரூரிலிருந்து சுமார் 21 கி.மீ தூரத்தில், வேலாயுதப் பாளையம் எனும் பகுதியில் அமைந்துள்ளது. வேலாயுதம்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவிலும், வேலாயுதம்பாளையம் பைபாஸ் பேருந்து நிலையத்திலிருந்து 1 கிமீ தொலைவிலும், புகளூர் ரயில் நிலையத்திலிருந்து 3.5 கிமீ தொலைவிலும், பரமத்தி வேலூரில் இருந்து 5 கிமீ தொலைவிலும், கொடுமுடியிலிருந்து 14 கிமீ தொலைவிலும், கரூரிலிருந்து 19 கிமீ தொலைவிலும், திருச்சி விமான நிலையத்திலிருந்து 110 கிமீ தொலைவிலும் கோயில் அமைந்துள்ளது. கரூர் முதல் பரமத்தி வேலூர் வழித்தடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
புகழினை பெற்றுத் தரும் புகழிமலை முருகப்பெருமானைத் தரிசித்து அவரது பரிபூரண அருளினைப் பெறுவோம்!!
Leave a comment
Upload