தொடர்கள்
தொடர்கள்
எழுதிக் கிழித்தவை 28 விதைத்தது நெல், விளைந்தது பதர். - மூத்த பத்திரிகையாளர். ஆர்.நடராஜன்

20250605073945387.jpeg

பண்டிகை நாட்களிலும் வீட்டில் இல்லாமல் ஊர், ஊராக சுற்றுகிறீர்களே, பொங்கல் திருநாளன்று எங்கள் கிராமத்திற்கு வரக்கூடாதா என்று இரண்டு நாட்களுக்கு முன்பே தொலைபேசியில் தொடர்ந்து அழைப்பு விடுத்தார் குறிஞ்சிப்பாடி அருகே மீனாட்சிப் பேட்டையில் வசிக்கும் எழுத்தாளர் குறிஞ்சிவேலன். அழைப்பை ஏற்று பொங்கல் தினத்தன்று மதியவேளையில் அங்கு சென்றான். வழியில் அகல விரியும் கண்கள் காய்ந்த வயல்வெளிகளைப் பார்த்தன. வைக்கோலை யாராவது விரித்திருப்பார்களோ என்று மருளும்படியாக வயல் வெளிகளில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

எங்கும் பசுமை இல்லை, கதிர்கள் பதர்களுடன் சாய்ந்திருந்தன. ஜீவன் இல்லாவிட்டால் சாயவேண்டியது தானே? இதைக்கண்டு மனம் வருந்தியபடியே நண்பர் வீட்டிற்குச் சென்றான். பொங்கலும், வடையும் கொடுத்தார்கள். அவன் சுரத்தில்லாமல் சாப்பிட்டான். அந்த நேரம் அவன் முகத்தைப் பார்த்த நண்பர் கேட்டார், “என்ன பிரச்சனை? என்ன கவலை?’’

அவன் சொன்னான், ‘‘எனக்கு ஏதும் பிரச்சனை இல்லை, உங்கள் பிரச்சனை பற்றிதான் கவலை. வரும் வழியில் நெற்கதிர்களைப் பார்க்கவில்லை, வயல்களில் படுக்கை விரித்தது போல் வைக்கோலைத்தான் பார்த்தேன்.’’

அப்போது நண்பர் குறிஞ்சிவேலன் சொன்னார், ‘‘உங்களுக்குத் தெரியாதா? இந்தப் பகுதி முழுவதும் வறட்சி தான். பாசனம் இல்லை, விளைச்சல் இல்லை’’. நண்பரின் மனைவி சொன்னார், ‘‘நாங்களும் பொங்கல் பானையின் கழுத்தில் மஞ்சள் கொத்துடன், பசுமை நெற்கதிர்களைச் சுற்றுவதற்கு பதிலாக காய்ந்த நெற்கதிர்களைத்தான் சுற்றி இருக்கிறோம் சாஸ்திரத்திற்காக.’’

மனம் கனத்தது. பிறகு ‘‘எப்போதும் இப்படித்தானா?’’ என்று கேட்டதற்கு ‘‘எப்போதாவது இப்படி ஆகும். ஆனால் கதிரறுக்க வேண்டிய நேரத்தில் மாடுகளை மேயவிட்டிருப்பது இதுதான் முதல் தடவை. என் வாழ்நாளில் இதற்கு முன்பு இப்படிப்பட்ட நிலைமை வந்ததில்லை’’ என்றார் குறிஞ்சிவேலனின் 90 வயது வளர்ப்புத் தாயார்.

சற்று நேரம் பேசிவிட்டு வீடு திரும்பிய அவன், மாவட்டத்தின் வறட்சி பற்றியும் மீனாட்சிபேட்டையின் காய்ந்த வயல்களைப் பற்றியும் செய்திகட்டுரை எழுதி தந்தியில் அனுப்பினான். மறுநாள் அந்த செய்தி ‘‘மகிழ்ச்சியற்ற பொங்கல்’’ (Pongal without gaiety) என்ற தலைப்பில் வெளிவந்தது. விவசாயிகள் தங்கள் குறைகளுக்கும் ஹிண்டு வெளிச்சம் போட்டதே என்று ஓரளவுக்கு ஆறுதல் கொண்டார்கள்.

கட்டுரையில் பேட்டி கொடுத்தவர் ஆ.செல்வராஜ் என்பவரின் வளர்ப்புத் தாயார் என்று அடையாளப்படுத்தப்பட்டார். மாவட்ட நிர்வாகம் குறிஞ்சிவேலன் என்ற புனைப் பெயரில் எழுதி வரும் அவர் அரசு கால்நடைத்துறையில் பணியாற்றி வந்த கால்நடை ஆய்வாளர் என்பதைத் தெரிந்து கொண்டது. அவர் மறுநாள் கலெக்டரின் முன்பு நிறுத்தப்பட்டார்.

கலெக்டர் சந்திரலேகா செல்வராஜிடம், “ஹிண்டு நிருபர் உங்கள் ஊருக்கு வந்தாரா? அவர் உங்களை பேட்டி கண்டாரா? அரசாங்க ஊழியரான நீங்கள் பத்திரிகைக்குப் பேட்டி கொடுக்கலாமா?’’ என்று கேட்டார். செல்வராஜ் என்கிற குறிஞ்சிவேலன், ‘ஹிண்டு நிருபர் என் வீட்டிற்கு வந்திருந்தார், அவருக்கு நான் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. வறட்சி நிலைமையைப் பற்றி என் வளர்ப்புத் தாயாரிடம் பேசிக்கொண்டிருந்தார். அவ்வளவுதான்.’’ என்று சொன்னார். கலெக்டர் அவரைக் கண்டித்து அனுப்பினார்.

‘தீக்கதிர்’ என்ற கம்யூனிஸ்ட் பத்திரிகை அவனது கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்டது. அது சட்டசபை நடந்து கொண்டிருந்த நேரம், எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம். நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி என்கிற திமுக எம்.எல்.ஏ. சட்டசபையில் அந்த ஆங்கிலக் கட்டுரையை வாசித்துக் காட்டினார். ஒரு விவசாய பிரச்சினை அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதில் அவனுக்குத் திருப்தி.

சென்னையில் சில மாதங்கள் நிருபராக இருந்த காலத்தில் சட்டசபை நிகழ்ச்சிகளை நிருபர் மாடத்திலிருந்து பார்க்க விரும்பினான். அது அப்போது சாத்தியப்படவில்லை. ஆனால் அவன் பேனா சட்டசபைக்குள் நுழைந்துவிட்டது, கட்டுரையாக.

சட்டசபை விவாதத்திற்குப் பிறகு வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், கடலூருக்கு வந்தார். அவன் உள்பட நிருபர்கள் மக்கள் தொடர்புத்துறையின் ஸ்டான்டர்ட் 20 வேனில் ஏறிக்கொண்டார்கள். பின் இருக்கையில் அமர்ந்திருந்தான் அவன்.

இரண்டு கிராமங்களில் காரில் இருந்து இறங்கி விவசாயிகளை அதிகாரிகளுடன் சந்தித்தார் மந்திரி. அடுத்தடுத்து சில ஊர்களுக்குச் சென்றபோது நிருபர்கள் வாகனம் பின்தொடர்ந்தது. அவன் வாகனத்தின் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தான். அது மடக்கும் வசதி கொண்டது. குண்டும் குழியுமாக உள்ள சாலையில் அந்த வாகனம் சென்றபோது, அதிகம் குலுங்கியது. பின்னிருக்கை கவிழ்ந்தது. அவனது இடது கை சுண்டுவிரல் இரும்பு தண்டில் சிக்கி ரத்தம் கொட்டியது. அதிக ரத்தப்போக்கினால் அவன் அரை மயக்க நிலையில் இருந்தான். நிருபர்கள், அவனை செஞ்சியிலிருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அவனுக்கு விரலைச் சுற்றி மயக்க மருந்து தடவி அந்த மருத்துவர் காயத்தை சரிப்படுத்த முயன்றார்.

அப்போது நிருபர்களிடம் சொன்னார், ‘விரலின் நுனி முற்றிலுமாக சிதைந்துவிட்டது. இதை உடனடியாக குணப்படுத்த முடியாது. இப்போது கட்டுபோட்டு விட்டேன். மேல்சிகிச்சை தேவைப்படலாம்’ என்று சொல்லிவிட்டு, தன் பில் புக்கை எடுத்து 300 ரூபாய் மருத்துவ கட்டணம் என்று எழுதினார். ‘‘யார் பெயரில் பில்?’’ என்று கேட்டார். சக நிருபர்கள் அவனது பெயரைச் சொல்லி ‘ஹிண்டு நிருபர்’ என்றார்கள். உடனே, அந்த பில்லை கிழித்துப்போட்ட டாக்டர் ஜே.சதானந்தன், கையெடுத்து கும்பிட்டு, ‘‘ஐயா, நான் ஹிண்டு வாசகன், என் போன்ற வாசகர்களுக்கு செய்தி சேகரிப்பதற்காக வந்த இடத்தில் நீங்கள் இப்படி காயம்பட்டிருக்கிறீர்கள், நான் அனுதாபப்படுகிறேன். விரைவில் குணமாக வேண்டும் என்று வேண்டுகிறேன். எனக்குக் கட்டணம் எதுவும் வேண்டாம்.’’

இதைக்கேட்ட அவனுக்கு வலியெல்லாம் அப்போது பறந்துவிட்டது. ஒரு செய்தித்தாளின் வாசகர், அந்த செய்தித்தாளையும் நிருபரையும் எப்படி மதிக்கிறார் என்பதை அறிந்து அவன் மகிழ்ந்தான். அதன் பிறகு அவன் பஸ் பிடித்து விழுப்புரம் தந்தி அலுவலகத்திற்கு வந்தான். அதுவரை சேகரித்த தகவல்களைச் செய்தியாகக் கொடுத்துவிட்டு, ‘‘விரலில் அடிபட்டு இருக்கிறது, நெய்வேலி திரும்புகிறேன், மந்திரியின் பேட்டிக்கு ஏஜென்சி செய்திகளைப் பயன்படுத்திக் கொள்ளவும்’’ என்ற வாசகங்களையும் எழுதிக் கொடுத்துவிட்டு, தந்தி அலுவலகத்தில் இருந்து புறப்படத் தயாராக இருந்தபோது, அங்கு தற்செயலாக வந்த விழுப்புரம் திமுக எம்எல்ஏ கே.பி.பழனியப்பன், ‘‘தான் கேட்டிருந்தபடி விழுப்புரத்தை ஒட்டிய நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கு அரசாங்கம் ரூ.47 லட்சம் ஒதுக்கியிருக்கிறது’’ என்பதற்கான கடிதத்தைக் காட்டினார்.

அப்போது அவன் விரலில் கட்டுபோட்டிருப்பதைப் பார்த்து, ‘‘ஐயா, நாளைக்குக் கூட இந்தச் செய்தியை எழுதுங்கள், அவசரமில்லை’’ என்றார். அவன் சொன்னான், ‘‘இடது கையில்தானே அடிபட்டிருக்கிறது? வலது கையால் எழுதுவதற்கு என்ன கஷ்டம்?’’ என்று அந்தச் செய்தியையும் தந்தியில் கொடுத்துவிட்டு நெய்வேலிக்குத் திரும்பினான்.

ஒரு வாரத்திற்குப் பிறகு விரலில் வலி தாங்க முடியவில்லை. சுண்டுவிரல் நுனி எலும்பில் விரிசல் விட்டு, நகத்தின் ஒரு துண்டு அதில் சிக்கியிருந்தது. பிரச்சனையை கண்டுபிடித்த நெய்வேலி டாக்டர்கள், மறுபடியும் அதே விரலுக்கு சிகிச்சை தந்தார்கள். அந்த காலகட்டத்தில் அவன் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை. அலுவலகத்தில் மருத்துவ செலவையும் கோரவில்லை. தொடர்ந்து தன் பணியை தொய்வின்றி செய்து வந்தான். ஈடுபாடு இருந்தால் தொழிலில் தொல்லைகள் என்று எதுவுமில்லை.