
டெலிபோன் மணி நீளமாக அடித்தது.
ஹுஸ்டனில் இருந்து ஜனா.
1990 ஆம் வருஷம் ஏப்ரல் மாசம்.
"ஹாய்" என்றார் மெட்ராஸில் சங்கர்.
" நல்லா தூங்கினீங்களா?"
"ஆமாம்னு நான் சொன்னால் அது பொய்."
சிரித்தார் சங்கர்.
" கண்ட கண்ட கனவுகள் வருவது குறைந்து இருக்கா?"
"அதிகமாகி இருக்கு."
" டாக்டர் என்ன சொன்னார்?"
" உக்காத்தி வச்சி நிறைய கேள்வி கேட்டார். போதனை செய்தார். அப்புறம் ஏதோ தூக்க மருந்து எழுதிக் கொடுத்தார். சாப்பிடறேன், ஆனால்,கனவுகளுக்கு தூக்கம் தானே அவை கிளம்ப உதவும் விமானம்!."
"நான் அங்க வரவா? வந்து உங்களையும் கூட்டிக்கொண்டு அமெரிக்கா திரும்பலாம். எனக்கு இங்கே இருப்பே கொள்ளவில்லை."
" வேண்டாம். உன் வேலை,குழந்தைகள், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்,எல்லாம் உனக்கு இருக்கு. எனக்கு என்ன கேன்சரா, ஹார்ட் அடாக்கா,ஸ்ட்ரோக்கா? என் விஷயம் நான் பார்த்துக்கிறேன்."
" குட். டேக் ரெஸ்ட். ."
" நான் நாளைக்கு கிளம்பி ஒரு மாசம் நல்லூரில் போய் இருக்க போறேன்."
" தனியாகவா? "
" ஆமாம். ஊர்ல சொல்லியாச்சு. சாப்பாடு தங்க இடம் எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு. "
" உடம்பு ஜாக்கிரதை"
"பாத்துக்கறேன்"
." குட் நைட்"
தங்கை ரமா வீட்டில் அபிராமபுரத்தில் தங்கி இருந்த சங்கர் தூங்கச் சென்றார்.
திடீர்னு பெருமழை, வானத்தை குண்டு வைத்து பிளந்தது போல், ஓ என்று தண்ணீர் கொட்டியது. பிரளயம் போல மள மள என்று தண்ணீர் உயர்ந்து தெருவில் எல்லா வீடுகளும் முழுகி மறைய, மிக உயரமான ஒரு மாடி வராண்டாவில் சங்கர் மட்டும் நின்றார். ஒருத்தர் கூட ஊரில் பாக்கி இல்லை. எல்லாரும் தண்ணிக்குள்ள போயாச்சு என்று தோன்றியது.
எங்கும் நிசப்தம்.
சங்கருக்கு பயம்.
"நான் இப்போ தனியா இந்த உலகில் என்ன செய்வேன்? யாரிடம் பேச? எதைச் சாப்பிட? இந்த வெள்ளம் குறையாதா? இது யுகப் பிரளயமா? அடுத்த யுகம் வரை நான் இந்த மாடியில் தானா? என்னை மட்டும் ஏன் காப்பாற்றினாய் கடவுளே?"
தங்கை ரமா உலுக்க, சங்கர் எழுந்தார்.
"கடவுளே என்று தூக்கத்தில் சொல்ற!"
" ஓ! அப்படியா! கனவுகளின் தொடர்ச்சி போல. "
"நீ இன்னும் ஒரு வாரம் இங்கயே ரெஸ்ட்ல இரேன். அப்புறம் நல்லூர் போயேன். "
" இல்லம்மா! நான் போகிறேன்."
திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் இரண்டாவது ஏசி கீழ் பர்த்தில் படுத்து ரொம்ப நேரம் தூக்கம் வரல. ரயில் திருச்சி தாண்டியது.
ஓட்டப்பந்தயத்தில் ஒரு டிராக்கில் தான் நிற்பதை சங்கர் உணர்கிறார். மொத்தம் முப்பது டிராக் போல இருந்தது. இவ்வளவு ட்ராக்கா?
எல்லாத்துலயும் உயரமான ஆரோக்கியமான இளம் வீரர்கள் ஓட ரெடியாக முட்டி போட்டு இருந்தனர்.
" என்ன பந்தயம்? " என்று தன் அருகில் இருந்த வீரனைக் கேட்கிறார் சங்கர்.
"அது கூட தெரியாதாப்பா? நூறு மீட்டர் ஓட்டம். ம்..முட்டி போடு. "
சங்கர் முட்டி போட்டு கைகளை முன்னால் ஊன்ற, வெள்ளைத் தொப்பி போட்ட ஆசாமி ஒருவர் மேலே நோக்கி 'டுப் ' என்று சுட, எல்லோரும் தளத்தில் ஓட ஆரம்பிக்க, கொஞ்சம் தயங்கிக் கடைசியாக சங்கர் ஓட ஆரம்பித்தார்.
திடீர் என்று ஒவ்வொரு டிராக்லயும் பூகம்பம் வெடித்தது போல் வெடிப்பு ஏற்பட்டு பெரிய பள்ளம் உண்டாக, ஓடும் வீரர்கள் எல்லாம் பள்ளத்தில் விழுந்து காணாமல் போக எழுபத்தஞ்சு மீட்டரில் சங்கர் மட்டும் தனியாக ஓடுகிறார்.
மொத்தமாக இருபத்தஞ்சு செகண்ட் ஓடி, நூறு மீட்டர் எல்லை தொட்டவுடன் தங்கமெடல் ஒன்றை சங்கர் கழுத்தில், சூட் அணிந்த ஒருவர் மாட்ட முயல,அதை நிராகரிக்கிறார் சங்கர். மெடலை வானத்தில் சுற்றி எறிகிறார்.
'ஆ ' என்று கையில் அடிபட்டதால் எழுந்தார் சங்கர்.கை கம்பார்ட்மெண்ட் தடுப்பு சுவரில் பலமாக மோதி வலித்தது. அப்புறம் சுத்தமாக தூக்கம் இல்லை.
நல்லூருக்கு வந்த ரெண்டு நாளில் மனசு கொஞ்சம் நிம்மதியானது போல் தோன்றியது.
பெருமாள் கோவிலுக்கு இரண்டு வேளை யும் சென்றார். வேண்டினார்.
"மாதவா என்னிடம் அப்படி என்னப்பா சிறப்பு கண்டாய்? துரத்தும் என் கனவுகளில் இருந்து, நினைவுகளில் இருந்து, கொஞ்சம் விடுதலை வேண்டும் அப்பா."
மாதவன் சிரித்தது போல் சங்கர்க்கு தோன்றியது.
ஒரு வாரம் ஆச்சு கனவுகள் தொடர்ந்து கொண்டு தான் இருந்தன.
இரண்டு மலைகளுக்கு நடுவில் ஒரு நூறு மீட்டர் நீள தொங்கு பாலம். ஏராளமானவர்கள் எதிர்ப்புறம் போவதற்காக பாலத்தில் செல்ல ஆரம்பிக்க,சங்கர் பாலத்தில் கால் வைக்கும் முன் பாலம் எல்லாருடனும் அறுந்து கீழே விழுகிறது.
ஏன் திரும்பவும் நான் மட்டும் தப்பித்தேன் என்று பயந்து வியர்த்தார் சங்கர்.
மறுநாள் கோவில் அர்ச்சகர் கண்ணனுடன் பேசியபோது சங்கர் சொன்னார்.
"சுவாமி! மனசு கலங்கி இருக்கு. மோசமான கனவுகள். ஏதாவது பிராயச்சித்தம் பண்ணலாமா?"
" உங்க மனசு பாரம் குறையணும் என்றால் தாமிரபரணி தாண்டி பத்தமடைக்கு போங்கோ. யோகி சிவானந்தர் தெரியும் இல்லையா? அவர் பிறந்த ஷேத்ரம் அதுதான். அங்கு சிவானந்தர்க்கு கோவில் இருக்கு. யோகி வாழ்ந்த காலத்தில் ரிஷிகேஷில், அவரது பரமசிஷ்யரா இருந்த சுவாமிகள் ஒருவர், வயசானவர்,அங்கே இருக்கார். போய் அவரைப் பார்க்கலாம். அருள் உள்ளவர் என்று சொல்றா.
அடுத்த நாள் தாமிரபரணியை நடந்தே கடந்தார் சங்கர். ரொம்ப தண்ணீர் இல்லை . பத்தமடை சென்றார்.
" எண்ணங்கள், புத்தி எதுவுமே நம்ம கண்ட்ரோல்ல இல்லையே! ஏதோ ஒரு அர்ச்சகர் சொல்றார் என்று எங்கோ ஒரு சாமியாரைத் தேடி அலையுற நிலைமைக்கு வந்துட்டோமே.
டேய் சங்கரா நீ எல்லாம் ஹூஸ்டனில் இருக்கும் பெரிய கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் கம்பெனிக்கு வைஸ் ப்ரெசிடெண்டா? உனக்கு வெக்கமா இல்லையா? "
என்று நினைத்துக் கொண்டார்.
கோவிலை எளிதில் கண்டுபிடித்து உள்ளே சென்று வணங்கிப் பின் சுவாமிகளை பார்த்தார்.
எழுபது வயதுக்கு மேலே இருக்கும். நீண்ட வெண்தாடி காவி வேட்டி, மெலிந்த தேகம், சாளேஸ்வரக் கண்ணாடி, கூர்மையான கண்கள்.
" மனசு பாரமா இருக்கா? " என்றார் சுவாமி.
எப்படி உடனே கண்டுபிடித்தார்?
"ஆம் சுவாமி. நான் அமெரிக்காவில் வேலை பார்க்கிறேன். ரெண்டு மாசம் முந்தி இந்தியா வந்தேன். நீங்க சொல்றது சரி.ரெண்டு மாசமா மனசுல பாரம்."
சுவாமி சங்கர் முகத்தை தீர்க்கமாக பார்த்தார்.
" இன்றோடு எல்லாம் தீரட்டும். என்னிடம் சொல்லலாம் என்று நீ நினைத்தால் உன் எண்ணங்களை ஷேர் பண்ணலாம். " என்று புன்னகைத்தார்.
'எல்லாத்தையும் சொல்லு 'என்றது சங்கரின் உள் மனசு.
"சுவாமி! அமெரிக்காவில் இருந்து ஒரு மீட்டிங்குக்காக பம்பாய் வந்தேன் அப்புறம் ஒரு நண்பனை பார்க்க பெங்களூர் கிளம்பினேன்.
பிப்ரவரி 14 -1990.
பம்பாயில் இந்தியன் ஏர்லைன்சின் 605 எண் விமானத்தில் ஏறினேன்.
மதியம் ஒரு மணிக்கு விமானம் கட்டுப்பாடு இழந்து பெங்களூர் கோல்ஃப் மைதானத்தில் மோதி வெடித்து நொறுங்கியது.
அடர்ந்த புல்வெளியில் விழுந்த நான் ஒரு சின்ன காயம் கூட இல்லாமல் எழுந்து நடந்தேன்.
சுற்றிலும் மரண ஓலம். எனக்கு எதுவும் புரியாமல் நடக்கிறேன். என்னை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.
மறுநாள் தான் 146 பேர் பயணித்த விமானத்தில் 90 பேர் இறந்ததும் மற்றவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் தெரிந்தது.
துளி காயம் இன்றி பிழைத்த என்னை ஆண்டவனின் செல்லப்பிள்ளை என்று அதிசயத்துடன் எல்லாரும் பார்த்தார்கள்.
ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்தபின், நண்பர்கள் உறவினர்கள் என்னை ஆச்சரியத்துடன் பார்க்கும்போது எனக்கு கூச்சமாகவும் அவமானமாகவும் இருந்தது.
சுவாமி, நான் வெகு சாதாரணமானவன். படித்தேன் அமெரிக்கால செட்டில் ஆகி பணம் செய்தேன். என் வாழ்க்கையில் ஒருவருக்கும் நல்லது என்று செய்யல. வள்ளல் தலைவன்,நல்லவன், பிறர் துன்பத்திற்கு உதவுபவன், என்ற மாதிரி எந்த ஒரு நல்ல பிரிவையும் சேர்ந்தவன் இல்லை நான்.
பின் ஏன் இந்தக் கடவுள் என்னை ரொம்ப ஸ்பெஷலாக நினைத்து காப்பாத்தி இருக்கார்?
ஒருவேளை இது மிஸ்டேக்கன் ஐடென்டிட்டியா? அப்படின்னா கடவுளுக்கு உண்மை புரிஞ்சா நான் செத்து
விடுவேனா?
தினமும் இதனால் என்னென்னவோ கனவுகள், எண்ணங்கள்.எனக்கு தாங்கலை.
என்னைக் கறையேற்றுங்கள் சுவாமி."
ஸ்வாமியின் காலில் விழுந்து வணங்கினார் சங்கர்
இரண்டு நிமிஷம் மௌனமாக இருந்த சுவாமி பேசினார்.
" நீ இங்கு வந்தது கடவுளின் விருப்பம்.
உனக்கு மனநிம்மதி கிடைக்கும் என்றால் உன்னுடைய மோசமான கனவுகள், எண்ணங்கள் மறைய வேண்டும் என்றால் அமெரிக்காவை விட்டு இங்கு வருவாயா சில வருஷங்களுக்கு? "
" நிச்சயம் வருகிறேன் சுவாமி. என் கடமைகள் என்று பெருசாக எதுவும் பாக்கியில்லை. பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள். எனக்கு 58 வயது. நான் ரெடி.. "
"எங்கள் அனாதை ஆசிரமம் ஒன்று பள்ளிக்கூடத்துடன் சென்னைக்கு பக்கம் இருக்கு.நூற்றுக்கு மேற்பட்ட அனாதைக் குழந்தைகள். பலர் பெற்றோர்களை இந்த மாதிரி விபத்துகளில் இழந்தவர்கள். அதற்கு ஒரு சிறந்த படித்த நிர்வாகி , உன்னை போல், சில வருஷம் இருந்தால் நன்றாக இருக்கும்.
அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் செய்திருக்க வேண்டியதை நீ செய்ய வேண்டும். செய்வாயா? முடியுமா? சரி என்றால் நான் நிர்வாகிகளிடம் உடனே சொல்கிறேன்.
" தராளமாகச் செய்கிறேன் சுவாமி" என்று ஆனந்தமாகச் சொன்னார் சங்கர்.
ஏன் அந்த விமான விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டார் என்பது சங்கருக்கு இப்போது நன்கு புரிந்து விட்டது.

Leave a comment
Upload