நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி ஊராட்சியில் சிறுதலைக்காடு மீனவக் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு மீன்பிடி தொழிலே பிரதானமாக உள்ளது. இக்கிராமத்தில் மதுவுக்கு அடிமையான வாலிபர்களை நல்வழிப்படுத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, சிறுதலைக்காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் கிராமத் தலைவர் நாமகோடி தலைமையில், ஊர் பஞ்சாயத்தார் முன்னிலையில் கிராமசபை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், சிறுதலைக்காடு கிராமத்தில் தொடர்ச்சியாக மது அருந்தி, பல்வேறு அடாவடி நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை பிடித்து, அங்குள்ள மாரியம்மன் கோயில் தூணில் ஒரு நாள் முழுவதும் கட்டிவைத்து தண்டனை வழங்கப்படும். மேலும், மது குடித்துவிட்டு வருபவர்களின் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும். அதேபோல், பெண்களைப் பார்த்து கிண்டல் செய்தாலோ, தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ, ‘காதல்’ என்ற பெயரில் பள்ளி மாணவிகள் உள்பட இளம்பெண்களைப் பின்தொடர்ந்து, அவர்களுக்கு கடும் மனஉளைச்சலைக் கொடுக்கக்கூடாது.
இவ்வாறு ஊர் தடையை மீறி யாராவது இதுபோன்ற அடாவடி செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால், அவர்களை கோயிலின் முன்பு நிற்கவைத்து, குற்றம் செய்தவரே, தங்களின் தலையை ‘மொட்டை’ அடித்து கொள்ள வேண்டும் என்று ஊர் கிராமசபையில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிராமத் தலைவர் நாமகோடி கூறுகையில், ‘‘சிறுதலைக்காடு கிராமத்தில் ஏராளமான வாலிபர்கள் தொடர்ச்சியாக மது அருந்திவிட்டு விபத்தில் சிக்குவதும், மது பழக்கத்தால் அவர்களின் குடும்பங்கள் சீரழிவதை கண்டு இம்முடிவை எடுத்துள்ளோம். அதேபோல் பெண்களிடம் தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் தண்டனை பெற்று அவமானப்பட நேரிடுமே என அனைவரையும் யோசிக்க வைக்கும். இதனால்தான் எங்கள் ஊருக்கென்று இதுபோன்ற கட்டுபாடுகளை விதித்து வருகிறோம்!’’
Leave a comment
Upload