காகத்திற்கு அன்னம் வைப்பதன் மூலம் முன்னோர்கள் சாந்தி பெற்று மகிழ்ச்சியுடன் நமக்கு நல்லாசியளிப்பார்கள். மறைந்த முன்னோர்கள் காக்கை உருவில் வந்து நமது வழிபாட்டில் கலந்து கொள்வதாகப் பெரியவர்களின் நம்பிக்கை. இதனால் பித்ருக்களும் ஆசி கிட்டும். மேலும் எமதருமனும், சனிபகவானும் சகோதரர்கள் எனவே காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்கள். பிதுர் தர்ப்பணத்திற்குரிய கயாவில் உள்ள பாறைக்கு காக சிலை என்று பெயர். அந்தப் பாறையில் தான் பிண்டம் வைத்து முன்னோர்களை வணங்குவர்.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.”
கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும் என்று வள்ளுவர் நமக்குப் போதித்திருக்கிறார். அந்த நெறியை காகங்கள் தவறாமல் பின்பற்றுகிறது. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சொல்லுக்கேற்ப பிற காகங்களையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப் பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
காகத்திற்குத் தினமும் காலையில் அன்னம் வைப்பதால் தீராத கடன் தொல்லைகள், புத்திர சந்தான பாக்கியம் மற்றும் பிதுர் சாபங்களும் நீங்கி நற்பலன்களைத் தடையின்றி நிறைவேற்றுவதில் மிக முக்கிய பங்கினை வகிக்கிறது நம் முன்னோர் வழிபாடு.
Leave a comment
Upload