தொடர்கள்
கவர் ஸ்டோரி
லண்டனில் கம்பன் விழா - ஒரு நேரடி ரிப்போர்ட் - கோமதி

20250604181920785.jpg

"கம்பன் புகழ் வாழ்க! கன்னித்தமிழ் வாழ்க!" என்ற கம்பன் வாழ்த்தோடு ஜூன் 28, 29 ஆம் தேதிகளில் இரண்டாம் ஆண்டு கம்பன் விழா லண்டனில் தொடங்கியது. கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் தலைமையில் இந்த ஆண்டும் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.

பண்ணிசை, நடனம், சிந்தனை அரங்கம்,பட்டிமன்றம், வழக்காடு மன்றம் என நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் தனிச் சிறப்புடனும், இளைஞர்களின் ஆற்றலை வெளிக்கொணரும் விதத்திலும் அமைந்திருந்தது.

அரங்க வடிவமைப்புக்கு தனி பாராட்டுகள் தெரிவித்தே ஆக வேண்டும். தோரணம், வாழை மரம், அரங்கத்தில் அமைந்திருந்த பிள்ளையார் என இரு நாட்களும் வெம்பிளியில் அமைந்திருந்த ஆல்பேர்ட்டன் அரங்கம் விழாக்கோலம் பூண்டு விளங்கியது என்றே கூறலாம்.

20250604182018886.jpg

சனிக்கிழமையன்று மதியம் 2:30 மணியளவில் இந்த விழா மங்கள விளக்கேற்றலுடனும், கடவுள் வாழ்த்துடனும் துவங்கியது. தமிழ் மொழியைப் போன்று தொன்மையானதாக விளங்கும் பண்ணிசை, கேட்போர் மயங்கும் வண்ணம், அதைக் கற்கும் மாணவர்களால் இசைக்கப்பட்டது.

இந்த இசைக்கு விழாவில் முக்கியத்துவம் கொடுத்து பாடப்பெற்றது சிறப்புக்குரியதாக அமைந்திருந்தது.

அழிந்து வரும் கலைகளில் ஒன்றாக சேர்ந்து விடாமல், பண்ணிசை வளர வேண்டும், கோயில்களில் தொடர்ந்து பண் பாடப்பெற வேண்டும் என்ற வேண்டுகோளோடு, கம்பன் கழகம் இதனை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செய்யும் என்ற வாக்குறுதியினை, லண்டன் கம்பன் கழகத் தலைவர், அறிவு அறக்கட்டளையின் நிறுவனர் நவேந்திரன் அளித்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிந்தனை அரங்கில், நட்சத்திரப் பேச்சாளர் பர்வீன் சுல்தானா இளைய தலைமுறையைச் சேர்ந்த ஆதவன் தர்மவாசன் மற்றும் தசானா ஜெகதாஸ் தமிழைப் பற்றியும். கம்பன் பற்றியும் சுவைபட பேசினார்கள்.

20250604182211632.jpg

பர்வீன் சுல்தானா காண்போரை கவரும் விதத்தில் அவருக்கே உரிய பாணியில் "ஆஹா! கம்பன் கவிதை" என்ற தலைப்பில் பேசினார். அவரது பேச்சு "ஆஹா! என்ன ஒரு பேச்சு" என நாம் வியக்கும் வகையில் இருந்தது. மாண்பளிப்பு மற்றும் இலக்கிய ஆணைக்குழு நிகழ்வோடு சனிக்கிழமை நிகழ்வுகள் நிறைவடைந்தன.

ஞாயிறன்று நடைபெற்ற பரத நாட்டிய நிகழ்ச்சி சற்றே வித்தியாசமான நிகழ்வாகும். வாய்ப்பட்டு, நட்டுவாங்கம், வயலின் என அதில் பங்கேற்ற அனைவரும் இன்றைய தலைமுறையைச் சார்ந்த சிறார்கள். குருவிடம் தங்களின் கலையை பயின்று, அரங்கேற்றம் செய்து, பின்பு தனித்து அவர்கள் வழங்கிய முதல் நிகழ்ச்சி இது என்று கூடக் கூறலாம்.

20250604182835293.jpg

20250604182519898.jpg

20250604182452212.jpg

20250604182419680.jpg

பரதநாட்டிய நடனம் கற்பித்ததும், லண்டனில் வாழும் இரண்டாம் தலைமுறையைச் சார்ந்த மிதீஷா மகேஸ்வரன் என்னும் இளம் பெண்.

பாரத நாட்டிய நிகழ்வின் பொழுது, வேதங்கள் பற்றிய ஒரு வரி பாடலில் வந்தபொழுது, நடனமாடியவர் , நான்கு வேதங்கள் என்ற அபிநயத்துடன், எழுதுவது போன்று காண்பித்தார். கம்பவாரிதி அவர்கள் அந்த இளம் பெண்ணை அழைத்து, நடனத்தைப் பாராட்டி, "வேதங்கள் என்பது எழுதப்படாத மறை " என்று விளங்கியதோடு, "அதற்கு நீங்கள் சொல்லுவதைப் போன்றோ அல்லது கற்பிப்பது போன்றோ முத்திரை பிடித்தால் நன்றாக இருக்கும்" என்றும் பொறுமையாக எடுத்துக் கூறினார். இளந் தலைமுறையினருக்கு நமது பண்பாட்டை எடுத்துக் கூறுவதோடு அவர்கள் அதை சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் ஐயா அவர்கள் திண்ணமாக இருப்பது விளங்கியது. இலக்கியம் மட்டுமல்ல ஒரு கலையை எவ்வாறு ரசிக்க வேண்டும், அதில் இருக்கும் நுணுக்கங்களையும் அறிந்து வைத்திருந்தது வியப்பளித்தது. இந்த ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் இலங்கை ஜெயராஜ் அவர்களைக் கொண்டாடுவதின் காரணம் புரிந்தது.

சிந்தனை அரங்கில் மாது ராதாகிருஷ்ணன் தன் பொலிவான பேச்சின் மூலம், கம்பனில் பொலிந்த காட்சிகளை வெளிக்கொணர்ந்தார். ஆயகி தவராசகுமாரன் மற்றும் ஈழவன் அந்தோணி ரஞ்சித் இருவரும் தங்களின் தனி உரையை சிறப்புற வழங்கினார்கள்.

இறுதியாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வழக்காடு மன்றம், அரங்கம் அதிர அரங்கேறியது என்றே கூறலாம்.

கம்பன் காப்பியத்தில் ராமனை மிஞ்சிய பாத்திரமாக அனுமனை படைத்த கம்பன் குற்றவாளி என்று ஒரு வழக்கு தொடரப்பட்டது. மற்றொரு வழக்கு, ராமனை சிந்திக்க விடாமல் செய்து இன்று வரை வாலி வதை படலம் ஒரு பேசுபொருளாக ஆனதற்கு அனுமன் தான் காரணம், காப்பிய நாயகனை அவ்வாறு படைத்த கம்பன் குற்றவாளி என இரு புதுமையான குற்றங்களை மாது ராதாகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர் பிரசாந்தன் , கம்பன் மீது சுமத்தினார்கள்.

இந்த குற்றங்களை மறுத்த பர்வீன் மற்றும் வாசுதேவா , காப்பிய நோக்கத்திற்கு ஏற்றவாறே கம்பன் ராமாயணத்தை படைத்ததாக வாதிட்டனர்.

பொதுவாக வாலி வதை படலம், கைகேயி, ராவணன் என கதாபாத்திரங்களை ஆராயும் வழக்காடு மன்றம் போன்று இல்லாமல், கம்பனை பற்றிய இந்த வழக்கு பல புதிய கோணங்களில் அமைந்திருந்தது.

நடுவராக இருந்த இலங்கை ஜெயராஜ், கம்பன் விழாவை பற்றி குறிப்பிடும் பொழுது, "தமிழன்னை ஒரு போதும் மலடியாகி விட மாட்டாள்" என்று கூறி, அதற்கான சான்றே இது போன்ற கம்பன் விழா எனக் கூறியது நிறைவைத் தந்தது. காரைக்குடியில் திரு சா.கணேசன் அவர்களால் தொடங்கப்பட்ட கம்பன் கழகம், இன்று பல்வேறு நாடுகளில் தழைத்தோங்கி வளர்ந்திருப்பது பற்றியும் மிகவும் சிலாகித்துக் கூறினார்.

20250604183939951.jpg

தமிழை வளர்ப்பது மட்டுமல்ல, இலக்கியங்களை ஆராய்வதன் மூலமும் அதை பற்றிய சிந்தனையின் மூலமுமே மனிதன் தன்னை புதுப்பித்துக்கொள்ள முடியும் என்பதற்கு கம்பன் விழா ஒரு சிறந்த முன்மாதிரி விழாவாக விளங்குகிறது.

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கு இத்தகைய விழா, ஒரு ஊக்க மருந்தாக உதவுகிறது.

இளைய சமுதாயத்திடம் நம் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற இலக்குடன் செயல்படும் லண்டன் கம்பன் விழா தொடர்ந்து வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துகிறோம்.