தொடர்கள்
அரசியல்
தராத பேட்டி-மிஸ்டர் ரீல்

2025060419252495.jpeg

வைகோ 12 தொகுதிகளில் போட்டி போட ஆசைப்படுகிறீர்களாமே?

தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை பன்னிரண்டு. நானோ என் மகனோ இப்படி எல்லாம் பேசவே இல்லை எல்லாம் மல்லை சத்யா இப்படி ஒரு தகவலை பரப்பி வருகிறார், இதுதான் உண்மை. அதேசமயம் நாங்கள் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற கணிசமான சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை அதையும் நீங்கள் பார்க்க வேண்டும்.

திடீரென முதல்வரை சந்தித்திருக்கிறீர்கள் ?

அதற்கு காரணம் உங்களைப் போன்ற ரீல் மாஸ்டர்கள் தான் பாஜக கூட்டணிக்கு போகிறோம் அமைச்சர் பதவி என்றெல்லாம் சொல்லி விட்டீர்கள். அப்படியெல்லாம் இல்லை உங்களை விட்டுப் போக மாட்டேன் என்று முதல்வரை சந்தித்து கையில் அடித்து சத்தியம் பண்ணி விட்டு நீங்களாக பார்த்து ஏதாவது தொகுதி தந்தால் நிற்கிறோம். இல்லையென்றால் திராவிட கழகம் மாதிரி மக்கள் பணி செய்கிறோம் என்று சொன்னேன்.

சரி அதற்கு முதல்வர் என்ன சொன்னார் ?

திராவிட கழகம் எல்லாம் வேண்டாம் இருக்கிற ஒரு திராவிடர் கழகமே போதும். நீங்கள் சட்டசபைக்கு போட்டி போடுங்கள் சட்டசபை உள்ளேயும் வந்து சுற்றிப் பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

இதன் மூலம் முதல்வர் என்ன சொன்னார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?

அதாவது பாராளுமன்றத்தில் உங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கினோம். அதேபோல் சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதி உங்களுக்கு என்பதைத் தான் சொல்லி இருக்கிறார் என்பது எனது அரசியல் அனுபவ அறிவால் தெரிந்து கொண்டேன்.