வழக்கறிஞர் ஹென்றி திபேன்.....
திருபுவனம் இளைஞர் அஜித்குமார் போலீசால் தாக்கப்பட்டு இறந்து போன விஷயத்தை மதுரை கிளை உயர்நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்று வாதாடிய வழக்கறிஞர் ஹென்றி திபேன் சமூக அக்கறை உள்ள ஒரு மனித நேயர் அவருடன் ஒரு பேட்டி :-
1. அஜித்குமார் குற்றவாளியா ? நகை திருடினார் என்பது உண்மையா ?
அவர் குற்றவாளியா இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டியது போலீஸ் வேலை. எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். அது பற்றி போலீஸ் இதுவரை எந்த தகவலும் சொல்லவும் இல்லை.
2. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாததற்கு என்ன காரணம் ?
27-ஆம் தேதி அந்தப் பெண்மணி தந்த புகார் அடிப்படையில் மூன்று மணிக்கு திருபுவனம் காவல் ஆய்வாளர் இவரை விசாரிக்க அழைத்திருக்கிறார். கோவில் நிர்வாகம் கோவில் பெயர் கெட்டு விடக்கூடாது நீ போய் உள்ளதை சொல் என்று சொல்லி, அவருடன் கோவிலில் பணிபுரியும் பிளம்பர் ஒருவரையும் அனுப்பி இருக்கிறார்கள். நான்கு மணிக்கு அஜித்குமார் அந்த பிளம்பர் உடன் சென்று இருக்கிறார். அவரை விசாரித்து காவல்துறை ஆய்வாளர் அவரை அனுப்பி விட்டார். ஆனால் எங்கிருந்தோ வந்த அழுத்தம் காரணமாக மறுநாள் சி எஸ் ஆர் அதைத்தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. முதல் தகவல் அறிக்கையில் விசாரணை அதிகாரி பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அந்த அதிகாரி விசாரித்ததாக தெரியவில்லை. சிறப்புப்படை அஜித்குமாரை விசாரித்து இருக்கிறது. சிறப்புப்படை விசாரிப்பதற்கு சட்டத்தில் இடமில்லை, சட்டத்துக்கு முரணானது. விசாரணை என்ற பெயரில் ஒவ்வொரு இடமாக அவரை அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி அதன் காரணமாகத்தான் அவர் இறந்து போய் இருக்கிறார். இது முழுக்க முழுக்க சட்ட மீறல்.
3. கடுமையாக விசாரிக்கச் சொல்லி அழுத்தம் தந்த அந்த ஐஏஎஸ் அதிகாரி பெயர் ?
அது டிஎஸ்பி சண்முகசுந்தரத்துக்கு தான் தெரியும். அவர்தான் சிறப்புப்படை அனுப்பி நன்றாக கவனித்து விசாரியுங்கள் என்று சொல்லி இருக்கிறார். ஆனால் இவ்வளவு நடந்த பிறகு டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை காவல்துறை விசாரித்ததாக தெரியவில்லை. சண்முகசுந்தரத்துக்கும் யாரோ ஒருவர் அழுத்தம் தந்து இருக்கிறார். அதனால்தான் சட்டத்தைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சிறப்புப்படை வைத்து அஜித்குமாரை விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்து கொலை செய்திருக்கிறார்கள். நீதிபதிகள் கவனத்திற்கு நான் இதை எடுத்துச் சென்றபோது சிறப்புப்படை விசாரிக்க அதிகாரம் தந்தது யார் ? என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அரசு தரப்பால் சரியான பதில் தர முடியவில்லை.
4. காணாமல் போன நகை கிடைத்ததா அது இப்போது யார் வசம் இருக்கிறது?
இந்தக் கேள்விக்கு காவல் துறை தான் பதில் சொல்ல வேண்டும். உண்மையில் நகை காணாமல் போனதா என்ற கேள்வி கூட தற்சமயம் வரத் தொடங்கி இருக்கிறது. அந்த நகை எங்கே என்று துப்பு துலக்கி கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறை கடமை.
5. அடித்து கடுமையாக விசாரிக்க சொன்ன அதிகாரி யார்?
இப்போதைக்கு டிஎஸ்பி சண்முகசுந்தரம் பெயர் மட்டுமே வெளியே வந்திருக்கிறது. அவருக்கு மீறிய சக்தி யார் போன்ற விஷயங்கள் இன்னும் வெளிவரவில்லை. எங்கள் அமைப்பை பொருத்தவரை சட்டத்தின் ஆட்சியை மீறி தனிமனித சுதந்திரம் கேள்விக்குறியானல் அல்லது இது போன்ற காவல்துறை சித்திரவதைகள் நடக்கும்போது நாங்கள் சட்டப்படி என்ன நடக்க வேண்டுமோ அதற்காக போராடுவோம் இந்த வழக்கிலும் நாங்கள் அதை தான் செய்தோம். நாங்கள் உண்மையாக இருப்பதால்தான் நீதிபதிகள் எங்கள் கருத்துக்களை கவனத்துடன் கேட்டுக் கொண்டார்கள்.
6. இது போன்ற லாக்கப் மரணம் என்றாலே லட்சக்கணக்கில் பணம் வீட்டுமனை, குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்பது சரியான அணுகுமுறையா ?
இதுபோன்ற சட்டம் மீறலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருக்கிறது .அதைத்தான் இந்த அரசு செய்திருக்கிறது. ஆனால் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் வழங்கி இருக்கிறது. அஜித்குமார் சகோதரருக்கு வேலை வாய்ப்பு குடும்பத்துக்கு இலவச வீட்டு மனை தந்திருக்கிறது. திமுக சார்பில் 5 லட்சம் நிதியை அமைச்சர் பெரிய கருப்பன் வழங்கி இருக்கிறார். உண்மையில் இந்த விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று திமுக முக்கிய புள்ளிகள் சிலர் டிஎஸ்பி சண்முகசுந்தரத்துடன் சேர்ந்து 40 லட்சம் ரூபாய்க்கு காசோலை, 10 லட்சம் ரூபாய் ரொக்கம் என்று பேரம் பேசினார்கள். இதையும் நான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
7. முதல்வரே சிபிஐக்கு இந்த வழக்கை மாற்ற பரிந்துரை செய்தது அவருக்கே காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று வைத்துக் கொள்ளலாமா ?
நான் எப்போதும் ஒட்டுமொத்த காவல்துறையையும் குற்றம் சொல்ல மாட்டேன். காவல்துறையில் நேர்மையான உயர் அதிகாரிகளும் இருக்கிறார்கள், கீழ் மட்டத்திலும் கடமை தவறாத அதிகாரிகள் இருக்கிறார்கள். அதேசமயம் முதல்வர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஒரு தவறான முன் உதாரணம். காவல்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளை அழைத்து இந்த வழக்கை சரியாக விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வகை செய்யுங்கள் என்று அவர் உத்தரவிட்டிருக்க வேண்டும். இது உண்மையில் சிபிஐ விசாரிக்க வேண்டிய வழக்கு அல்ல. அங்கு ஏற்கனவே பல வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு வழக்கு கூட சிபிஐக்கு தான் அனுப்பப்பட்டது. ஏழு ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஒருவர் மீது கூட அவர்களால் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியவில்லை. அவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளை சிபிஐ நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்கிறது. காவல்துறை இலாக அமைச்சர் என்ற முறையில் இந்த வழக்கை தமிழக காவல்துறையில் உள்ள நல்ல அதிகாரிகளை வைத்து அவர் விசாரிக்க சொல்லியிருக்க வேண்டும். அவர் இந்த வழக்கை கை கழுவ பார்க்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது
8. அதிக அளவு லாக்கப் மரணம் திமுக ஆட்சியிலா அல்லது அதிமுக ஆட்சியிலா?
யார் ஆட்சியில் என்றெல்லாம் பார்க்க வேண்டாம் ஒருவர் லாக்கப் மரணம் என்றால் கூட அது தனி மனிதனுக்கான அநீதியாக தான் பார்க்க வேண்டும். இந்த ஆட்சியில் இதுவரை 31 லாக்கப் மரணம் நடந்திருக்கிறது என்று நான் நீதிமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறேன்.
9. மேலதிகாரிகள் உத்தரவிட்டதை தான் எங்கள் கணவர்கள் செயல்படுத்தினார்கள் என்று கைது செய்யப்பட்ட காவலர்களின் மனைவிகள் சொல்லும் குற்றச்சாட்டை எப்படி பார்க்கிறீர்கள் ?
அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டு சரிதான் மேலதிகாரிகள் அடி நொறுக்கு சுடு என்று சொல்வதைத் தான் கீழ் மட்டத்தில் உள்ள காவல் அதிகாரிகள் செயல்படுத்துகிறார்கள். ஆனால் ஏதாவது பிரச்சனை என்றால் அவர்கள் தப்பித்துக் கொண்டு விடுகிறார்கள். கீழ்மட்டத்தில் உள்ள அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். நான் அவர்களுக்காக வருந்துகிறேன். அதே சமயம் சட்டத்திற்கு புறம்பான மேலதிகாரிகளின் உத்தரவுகளை செயல்படுத்த வேண்டும், என்ற அவசியம் யாருக்கும் கிடையாது. இதை கீழ்மட்ட அதிகாரிகள் தெரிந்து கொள்ளாததால் அல்லது புரிந்து கொள்ளாததால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். முடியாது என்று சொன்னால் உயர் அதிகாரி அவரை தற்காலிக பணி நீக்கம் செய்யலாம். அல்லது மாற்றல் உத்தரவு போடலாம். இது போன்ற செயல்களின் போது நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பல வழக்குகளில் நீதி வழங்கியிருக்கிறது. அதையும் கீழ் மட்ட காவல்துறை அதிகாரிகள் தெரிந்து கொள்வது அவசியம்.
10. புகார் தந்த நிகிதா என்ற பெண்மணியே ஒரு மோசடி பேர்வழி என்று சமூக வலைதளத்தில் பரவலாக சொல்லப்படுகிறது இது உண்மையா?
உண்மைதான் மூன்று முதல் தகவல் அறிக்கையும் தற்சமயம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அவர் எப்படிப்பட்ட மோசடிப் பேர்வழி என்பதை அந்த முதல் தகவல் அறிக்கையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது. ஆனால் காவல்துறை அந்தப் பெண்மணி மீது கைது நடவடிக்கை எடுத்தார்களா போன்ற விவரங்கள் எல்லாம் விளக்க வேண்டிய கடமை தற்சமயம் காவல்துறைக்கு இருக்கிறது. அவர் ஏற்கனவே திருமணம் ஆகிஅந்தக் கணவருடன் இல்லை ஒரு காவல்துறை ஆய்வாளர் கட்டுப்பாட்டில் இருக்கிறார் என்கிறார்கள். இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் காவல்துறை பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அப்படி பதில் சொல்லவில்லை என்றால் நீதிமன்றம் கேட்கும் இதே கேள்விகளை
11.காவல்துறை எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் உண்மையாக நடந்து கொள்வார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
முதலில் அப்படி ஒரு வாய்ப்பை நாம் வழங்கி இருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். மாவட்ட செயலாளர் ஆளுங்கட்சி மாவட்ட அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கவுன்சிலர் என்று ஆளும் தரப்பை சேர்ந்தவர்கள் பல வழக்குகளில் அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதில்லை முதலில் அவர்களுக்கு அந்த வாய்ப்பு தரட்டும் பிறகு பேசுவோம்.
12. சிபிஐ இந்த வழக்கை சரியாக விசாரிக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
நான் ஏற்கனவே சொன்னது தான் தமிழக காவல்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகளே இந்த வழக்கை விசாரித்து உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனையை வாங்கித் தர முடியும். என்னைப் பொறுத்தவரை முதல்வர் இந்த விஷயத்தில் தவறாக பரிந்துரை செய்து விட்டார் என்பதுதான்.
Leave a comment
Upload