தொடர்கள்
வலையங்கம்
வேண்டாம் மொழி அரசியல்

20250604181515646.jpeg

நன்றி: தினமணி

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு ஆட்சி செய்கிறது. இங்கு மராத்தி மற்றும் ஆங்கில வழி கல்வி பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஹிந்தி பொதுவான மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும் மூன்றாவதாக வேறு ஒரு மொழியை கற்க விரும்பினால் அதற்கு 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும் என்று திருத்தப்பட்ட அரசாணையை மாநில அரசு சமீபத்தில் வெளியிட்டது.

இதற்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மாணம் சேனா என பல கட்சிகள் இது ஹிந்தியை மறைமுகமாக திணிக்கும் முயற்சி என்று கண்டனம் தெரிவித்தனர். உத்தவ் தாக்கரே இதை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தார். இந்தப் போராட்டத்தில் நாங்களும் இணைவோம் என்று ராஜ் தாக்கரே கட்சியும் அறிவித்தது.

இந்த மும்மொழி திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து மகாராஷ்டிரா முதல்வர் இந்த இரண்டு உத்தரவையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

மகாராஷ்டிராவில் மராத்தி ஆதரவு குரல் தற்சமயம் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. மராத்தி பேசாத வர்த்தக அமைப்பு எங்களால் தொழில் நடத்த முடியவில்லை மொழி உணர்வாளர்களால் நாங்கள் தாக்கப்படுகிறோம் என்று புகார் அளித்திருக்கிறார்கள்.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அல்லது பாஜக அரசு ஒரு விஷயத்தை தங்களுக்கான அரசியல் காரணங்களுக்காக மறந்துவிடுகிறது. இந்தியாவில் மொழிவாரியாக தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் இன்றைய குஜராத் மாநிலம் இருந்தது. குஜராத்தி பேசும் மக்கள் தனி மாநிலம் கேட்டபோது அதை எதிர்த்து மொரார்ஜி தேசாய் அமைச்சராக இருந்தாலும் உண்ணாவிரதம் இருந்தார். குஜராத் பேசும் மக்களின் மொழி உணர்வை ஏற்றுக்கொண்டு அன்றைய மத்திய அரசு மகாராஷ்டிராவில் இருந்து குஜராத் என்று தனி மாநிலமாக அறிவித்தது.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்க்கப்பட்டாலும் இந்தி படிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இது மராட்டிய மாநிலத்துக்கும் பொருந்தும். மொழி அரசியலைத் தவிர்த்து உங்களுக்கு விருப்பமான மொழியை நீங்கள் கற்றுக் கொள்ளலாம் என்று பொதுமக்களிடம் விட்டுவிடுங்கள். அவர்கள் உங்களை விட புத்திசாலிகள்.