தொடர்கள்
அனுபவம்
காடறிதல் 2 கல் மேல் நடந்த காலம்  இந்துமதி கணேஷ் 

20250605081640781.jpeg

இருள் முற்றிலும் விலகாத, பனி சூழ்ந்த ஒர் அதிகாலையில் சில்வண்டுகளின் ரீங்காரத்தை கேட்டபடி, பறவைகளின் ஓசையில் லயித்தபடி மலைகளில் நடக்க வேண்டும். புறச் சத்தங்களுக்கு நடுவே மலைகள் நம்முடன் மௌனமாய் உரையாடுகின்றன. "மலை என்பதுமாபெரும் நிசப்தம். மலையின் மௌனம் உலகின் களிப்பூட்டும் வாசனை" என்கிறார் எஸ். ராமகிருஷ்ணன், அந்த களிப்பூட்டும் வாசனையை நுகர்ந்த எவருக்கும் அகமும் புறமும் மலர்ந்த ஒரு பரவசம் வாய்த்துவிடும். உலகில் சூரியனும், நீரும், உயிர்களும் தோன்றும் முன்பே தோன்றிய பாறைகள் தான் எத்தனை தொன்மையானவை. எத்தனை கோடி ஆண்டுகளாக இந்த பாறைகள் வெயிலாய் சுட்டெரிக்கும் சூரியனையும், குளிராய் குளிர்ந்த நிலவையும், மினுக்கும் நட்சத்திரங்களையும் கண்டிருக்கும். அப்படியானால் இந்த மலைகளும் அதிலுள்ள பாறைகளும் நமக்கு மூதாய்கள் அல்லவா, இந்த மூதாயகளின் மடிசாயும் போதெல்லாம் உள்ளம் களிப்பெய்துவது வியப்பில்லையே.

சுற்றிலும் பச்சை போர்த்திய மலைகளை ரசித்தபடி பயணத்துக் கொண்டிருந்தோம். அந்த வனப்பகுதியில் தனியாய் நடப்பது தடைசெய்யப்பட்டிருக்கிறது, ஜீப்பில் மட்டுமே பயணிக்க அனுமதியுண்டாம். பறவைகளின் ஒலிகளும், சிற்றருவிகளின் சலசலப்பும் நம்மை நகரத்து இரைச்சலில் இருந்து மீட்டெடுத்தன. வண்டி நல்ல தார் சாலைகளில் இருந்து திரும்பி ஒற்றையடி பாதை போல பிரிந்த ஒரு கிளைச் சாலையில் பயணிக்கத் தொடங்கியது. அந்த பாதையில் சாலையே இல்லை, முழுக்க கற்களாலும் பாறைகளாலும் நிறைந்திருந்திருந்தது அந்த வழித்தடம். மெதுவாக சென்ற ஜீப்பில் இருந்து பார்த்தபோதே அந்த இடத்தை நடந்து கடப்பது எவ்வளவு கடினம் என்பது புரிந்தது.

உச்சியில் சமதளம் கொண்ட ஒரு சிறு மலை தெரிந்தது. இத்துடன் ஜீப் நின்றுவிடும், நாம் நடந்து தான் மலைமீது ஏற வேண்டும் என்று நாங்கள் இறங்க தயாராகும் போது ஓட்டுநர், "யாரும் இறங்க வேண்டாம், நல்லா கெட்டியா கம்பியை பிடிச்சுக்கோங்க நாம மலை ஏறப்போறோம்" என்றார். திகைத்து விழிவிரித்து பார்த்தால் அந்த சிறிய மலையின் உச்சியில் ஏற்கனவே இரண்டு ஜீப்கள் நின்றுகொண்டிருந்தன. இந்த மலைக்கு நாம் ஜீப்பிலா ஏறப்போகிறோம் என்று நாம் வியந்து முடிப்பதற்குள் சிறிதும் தயக்கமின்றி எட்டு பேரை சுமந்த அந்த ஜீப்பை மலை மேலேற்ற தொடங்கினார் ஓட்டுநர்.

அந்த மலை பிளவுகளில் ஜீப் குதித்து குதித்து மேலேறிய போது எங்களுக்குள் அச்சமும் சிலிர்ப்பும் சேர்ந்து கொள்ள நாங்கள் அனைவரும் குழந்தைகள் போல கூச்சலிட்டோம். மற்ற ஓட்டுனர்கள் ஏறத் தயங்கிய தொண்ணூறு டிகிரி குத்து ஏற்றத்தில் கூட அனாயாசமாய் வண்டியை ஏற்றினார் எங்கள் ஓட்டுநர் ரஞ்சித். ஜீப்பில் இருந்து வெளியே எட்டி பார்த்தால் கிடுகிடு பள்ளதாக்கு நமக்குள் விதிர்ப்பை ஏற்படுத்தியது, சற்றே அதிகமாகி எட்டினால் நாம் ஒரு சிறு கல்லாய் உருண்டு விழுந்து விடும் சாத்தியகூறுகள் அதிகமுண்டு. மலையின் உச்சிக்கு போய் சேர்ந்து ஜீப்பை விட்டு இறங்கிய பிறகு தான் மூச்சே சீராக வந்தது. சுற்றிலும் எழில் கொஞ்சும் மலைகள் சூழ்ந்த, மனதை மயக்கும் அற்புதமான இடமது. ஒருபுறம் மன்னவன் சோலா என்று அழைக்கப்படும் சோலைக் காடுகள், மறுபுரம் தூவானம் அருவி, ஆங்காங்கே மேகங்களில் பொதிகளில் மறைந்தும் வெளிப்பட்டும் தெரியும் நீரோடைகள் என்று கண்களுக்கு இயற்கை பெரிய விருந்தளித்தது.

"விழித்துக் கொண்டபடியே அம்மா எழுப்புவதற்காக காத்து கிடக்கும் குழந்தை போலத் தான் மலை இருக்கிறது" என்ற எஸ். ராமகிருஷ்ணின் வரிகளை மலை மீது நின்றுகொண்டே அசைபோட்டுக் கொண்டிருந்தேன், இப்போது மலை விழித்திருக்குமா ? கண்டிப்பாக தூங்கி இருக்க வாய்ப்பில்லை என்பது போன்ற யோசனைகள் எழுந்தது. "இது மிக பெரிய சாகச பயணம் இல்லையா அம்மா ?" என்று கேட்ட குழந்தைகளுக்கு நம் தேக்கன் ஐயா பதிலளித்தார், "இது வெறும் சாகச பயணம் மட்டுமல்ல செல்லங்களா, இது ஒரு சரித்திர பயணம்" என்றார்.

சுற்றிலும் பசுமையான மலைகள் சூழ்ந்து நம் கண்களுக்கு விருந்தாக அமையும் அந்த இடத்தில் சரித்திர சிறப்புகள் என்ன இருக்க முடியும் என்ற யோசனையுடன் தேக்கனை பார்த்தோம். "ஆப்பிரிக்காவில் வாழும் மக்களை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா, இங்குள்ள தொல்குடி மக்களுக்கும் கிட்டத்தட்ட அதே போன்ற முக அமைப்பும் ஜாடையும், நிறமும் இருக்கும்" என்றார். வியப்பில் நாம் வாயடைத்து போக, ஒரு சின்ன குழந்தை, "அது எப்படி தாத்தா இவங்க அவங்களை மாதிரி இருப்பாங்க ? இந்த மக்கள் ஏரோப்பிளேன்ல அங்க போய்ருந்திருப்பாங்களோ ?" என்று ஒரு அறிவுபூர்வமான கேள்வியை எழுப்பினாள். "புத்திசாலி பாப்பா", என்று அவள் கன்னத்தை வருடியபடி, "அப்படியில்ல கண்ணு, ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி இந்தியா ஆப்பிரிக்கா எல்லாம் ஒரே கண்டமா இருந்திருக்கு, அப்போ இவங்க எல்லாம் ஒண்ணா இருந்திருக்காங்க. பிறகு இயற்கைல பல மாற்றங்கள் வந்து அந்த நிலங்கள் பிரிஞ்சு போச்சு, அதுனால மக்களும் பிரிஞ்சு போயிட்டாங்க ஆனாலும் அவங்க பழக்க வழக்கங்கள், முக அமைப்பு எல்லாத்துலயும் ஒரு ஒற்றுமை இருக்கு" என்றவுடன் எங்கள் அனைவருக்கும் அந்த தொல்குடியினரை பார்க்கும் ஆர்வம் எழுந்தது.

"இன்னொரு முக்கியமான விஷயம் கூட இங்க இருக்கு அது என்னன்னு பாத்து சொல்லுங்க பாக்கலாம் ?" என்றவுடன் தான் நாங்கள் அந்த மலையை முழுவதுமாக ஆராய்கிறோம், அதுவரை சுற்றி இருந்த மலைகளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறோம் என்பது அப்போது தான் புலப்பட்டது. அங்கே மிக அகலமாகவும் நீளமாகவும் கற்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருந்தன. அவற்றை காட்டி "இவை பெருங்கற்கால சின்னங்கள்" என்றார் தேக்கன். "அம்மா பெருங்கற்காலம் என்றால் இங்கிலீஷில என்னம்மா ?" என்று கேட்டான் ஆங்கில வழி கல்வியில் பயின்றுக் கொண்டிருக்கும் மகன். கற்காலத்தில்(stone age) மெகாலிதிக்(megalithic) அதாவது பெரிய பெரிய கல்லை எல்லாம் வச்சு அடுக்கி கற்திட்டைகளை மக்கள் உருவாக்கிய காலம்டா தம்பி. பெரும்பாலும் இறந்தவங்களுக்கு புதைகுழிகள்ல இப்படி அமைப்புகளை செஞ்சிருப்பாங்க அந்த நாட்களில் வாழ்ந்த கற்கால மக்கள்" என்றேன்.

"புதைகுழிகள் மட்டுமல்ல அந்த காலத்தை சேர்ந்த மக்கள் வசித்த வீடுகளும் இங்கேயே இருக்கின்றன" என்று மேலும் சில கற்கள் சேர்ந்து அமைந்து பெரிதாய் தெரிந்த குகை போன்ற ஒரு அமைப்பை காட்டினார் தேக்கன். விழிகள் விரிய அப்படியே சமைந்து போனோம் நாங்கள். "இது புதைகுழியல்ல வீடாக தான் இருக்கும் என்று எப்படி தெரிந்து கொண்டீர்கள் ஐயா ?" என்று நம் குழுவில் ஒருவர் கேள்வி எழுப்பினார். "அந்த கடவிற்குள் நான் நுழைந்து சென்று அங்கே சில மணித்துளிகள் இருந்திருக்கிறேன், மிக குளுமையான வசதியான இடமாக அது இருந்தது, எனவே இது நிச்சயமாய் புதைக்கும் இடமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை" என்றார் தேக்கன். புதைகுழிகள் சற்றே சிறியதாக இருக்கும் கற்பதுகைகள் என்று அதை சுட்டிக் காட்டிய போது, நம் முன்னோர்களின் ஆதிநிலத்தில் நாம் இன்று நின்று கொண்டிருக்கிறோம் என்ற சிலிர்ப்பு நமக்குள் எழுகிறது. அந்த கற்பதுகைகளுக்குள் சென்று சோதனை செய்து பார்த்த நம் தேக்கனை வியக்காமல் இருக்க முடியவில்லை.

இது சார்ந்து என்ன சந்தேகம் வேண்டுமானாலும் கேளுங்கள் என்று தேக்கன் சொன்னதும் அறிவார்த்தமான ஒரு கேள்வியை கேட்டார் கணவர். "எதற்காக இத்தனை உயரத்தில் இந்த மக்கள் வாழ்ந்தார்கள் ? ஏன் சமாதிகளை தங்கள் வீடுகளுக்கு பக்கத்திலேயே கட்டிக் கொண்டார்கள் ?" என்று கேள்விக்கு, "உயரத்தில் இருந்து கொண்டு கீழே சென்று வேட்டையாடவும் வேளாண்மை செய்யவும் வசதியாக இருக்கும்" என்று பதிலுரைத்தவர். "இவ்வளவு பெரிய கற்களை எப்படி தூக்கி வந்திருப்பார்கள், எப்படி அவைகளை ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி இருப்பார்கள், சமாதிகளை ஏன் வீட்டுக்கு அருகிலேயே அமைத்தார்கள் என்பதெல்லாம் இன்னும் புதிராகவே இருக்கும் விஷயங்கள் தான், மேலும் அங்குள்ள பொருட்களை இதுவரை கார்பன் டேட்டிங்(கனிமப் பொருட்களின் காலத்தை அளவிடும் முறை) செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று" என்றார்.

அந்த இடம் கேரளா வனப்பகுதியை சேர்ந்தது. முருகன் மலை என்று தமிழிலும், முருகன் கடவு என்று மலையாளத்திலும் அழைக்கப்படுகிறது. மலையாளிகள் இந்த கற்பதுகைகளை முனியறைகள் என்றே அழைக்கின்றனர். அந்த பகுதியில் மட்டுமே கிட்டதட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு கற்பதுகைகள் இருக்கின்றனவாம், ஆனால் அந்த இடம் தொல்லியல் துறையால் முறையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தபடவில்லை. வெறும் சுற்றுலா தலமாக மட்டுமே அறியப்படுகிறது என்பது தான் பெரும் வேதனை. முருகன் மலை என்று கூகிளில் தேடினால் கூட இங்குள்ள தொல் எச்சங்கள் பற்றிய எந்த குறிப்பும் இல்லை என்பது வருந்ததக்க ஒன்று. அந்த இடத்தில் ஒரு சிறு முருகன் கோவிலும் உண்டு, பங்குனி உத்திர நாட்களில் கூட்டம் அலைமோதி அந்த முருகன் மலையையே நிறைத்து விடுமாம். ஆனால் மக்களுக்கு அந்த இடத்தின் சரித்திர சிறப்புகள் தெரிந்திருக்கவில்லை. நாங்களே தேக்கனுடன் இந்த காடறிதல் பயணத்தில் சேராமல் தனியாக அந்த இடத்திற்கு சென்றிருந்தால் சுற்றி இருக்கும் மலைகளையும் முருகன் கோவிலையும் மட்டும் கண்டுவிட்டு சில பல புகைப்படங்களுடன் சென்றிருப்போம், தேக்கனான கோவை சதாசிவம் ஐயாவுடன் பயணித்ததால் மட்டுமே இத்தனை அறிய விஷயங்களை அறிந்து கொள்ளும் சாத்தியங்கள் எங்களுக்கு அமைந்தது.

20250605081907357.jpeg

குளுமையான அந்த வானிலை நம்மை குதூகல படுத்தினாலும், ரயிலில் வந்த களைப்பு தீர குளித்தால் மட்டுமே புத்துணர்வு கிடைக்கும் என்று நாம் நினைத்ததை புரிந்து கொண்ட தேக்கன், அடுத்து எங்களை ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்து சென்றார். ஆனால் செல்லும் முன்பு எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை ஒரு பத்து நிமிடம் விளக்கினார். இவ்வளவு கவனம் தேவையா என்று நாம் மனதிற்குள் நாம் உச்சுக்கொட்டிக் கொள்ள, அங்கு போய் சேர்ந்த பிறகு தான் அவருக்கு தேக்கன் என்று பேர் வைத்தது எவ்வளவு சரி என்று புரிந்தது.

தொடர்ந்து பயணிப்போம்......