அவன் வரவில்லை என்றால் நலம் என்று தோழியின் காதில்
சொன்னாள் தலைவி .அவள் கூறுவதை நம்ப முடியாத தோழி, வியப்பில் ஆழ்ந்துப் போகிறாள்.
தலைவன் வருகைக்காக தினமும் வழி மேல் விழி வைத்துக்காத்திருக்கும் தலைவி இவ்வாறு பேசுவது அவளுக்கு மிகுந்தஆச்சர்யத்தைத் தந்தது.
ஏன் இவ்வாறு பேசுகிறாய் ? உனக்கு என்ன நேர்ந்தது ?" என்று
தலைவியை வினவுகிறாள்.
தலைவியின் முகத்தில் தெரியும் அச்சம் அவளைக் கவலைக்குள்ளாகியது. மீண்டும் மீண்டும் அதே கேள்வியைக் கேட்கிறாள் .
தலைவி மௌனம் கலைத்துப் பேசலானாள்.
என் காதலன் வரவு எப்போதும் மகிழ்ச்சியைத் தருவதுதான். ஆனால்
அவன் இப்போதெல்லாம் இரவு நேரத்தில் தான் என்னைச் சந்திக்க
வருகிறான் .
இந்த நள்ளிரவு நேரங்களில் பேய்கள் நடமாடிக் கொண்டுள்ளன . மக்கள்
ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனர் . இவ்வூரைக் காக்கும் கானவர்கள்
குறிஞ்சிப் பண்ணைப் பாடிக் கொண்டு வருகிறார்கள்.
வாள் போன்ற கோடுகள் கொண்ட புலி வலிமை மிக்க யானையுடன்
மோதுகையில் உறுமும் குரல் மலையில் ஒலிக்கிறது.
மலையின் அடுக்குகளில் இடி மின்னலுடன் மழை பெய்துக்
கொண்டிருக்கிறது.
அவர் வரும் மலைப்பாதையில் , நாகப்பாம்புகள் இடியோசைக்கு நடுங்கி
,நீலமணியை துப்பி விட்டு படமெடுத்தாடுகின்றன.
அச்சம் கொள்ளத்தக்க இந்த இரவில் அவன் வராமல் இருந்தால் நலம் .
அவன் பிரிவால் என் தோள்கள் சோர்ந்து , சரிந்தாலும் சரி,, அவன் இந்த
இரவு நேரங்களில் வராமல் இருக்கட்டும் என்றாள்.
தலைவியின் கவலை தோழிக்குப் புரிந்தது .அவளைப் பரிவோடு
அணைத்துக் கொண்டாள் அவள் .
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன் (குறள் 1167)
காமம் என்னும் கடலில் நீந்தியும் நான் கரை கண்டிலேன்., இரவெல்லாம்
நான் தனியாகத்தனே இருக்கிறேன் என்று உறங்காமல் தவிக்கும்
வள்ளுவன் காட்டும் நாயகி போல உள்ளம் குமுறினாலும் இந்த
நற்றிணை நாயகி தன் காதலனைத் தவிர்க்க நினைக்கிறாள் .
அவன் வரும் பாதையில் நாகமும், புலியும், யானையும் உலவும்.
மழையில் சிதைந்த மலைப்பாதையில் ஆபத்து என்று அஞ்சியே இரவில்
வராமல் இருந்தால் நலம் என்கிறாள் தலைவி .
குறிஞ்சித் திணைக்குரிய இப்பாடலை எழுதியவர் ஆலம்பேரி சாத்தனார்
என்னும் புலவர்.
இதுதான் அப்பாடல் .
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்
வாரார்ஆயினோ நன்றுமன் தில்ல
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்,
திருமணி அரவுத் தேர்ந்து உழல,
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே!
( நற்றிணை 255 )
வாள்வரி உழுவை "என்று புலியைக் குறிக்கும் சொல்லில், புலியின்
உடலில் உள்ள வரிகளுக்கு வாளை உவமையாக சொல்வது அருமை .
-தொடரும்
Leave a comment
Upload