தொடர்கள்
அழகு
குன்றுடையான் - மோகன் ஜி, சித்திரம் - தேவா

2025060411550823.jpg

உங்கள் மகள், மருமகள், மனைவி ஆகியோருக்கு பேறு காலமா? சுகப் பிரசவம் நிகழவும், பெற்றவள் நலம் மேம்படவும் மந்திரமாகச் செயல்படும் பதிகமொன்றைப் பார்ப்போமா?

முதலாம் திருமுறையில் திருச்சிராப்பள்ளியில் கோயில் கொண்ட தாயுமானவரைப் போற்றி, திருஞான சம்பந்தர் பாடிய பதிகத்தை இன்று சிந்திப்போம்.

பதிகம்:

நன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு

ஒன்று உடையானை உமை ஒரு பாகம் உடையானைச்

சென்று அடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்

குன்று உடையானைக் கூற என் உள்ளம் குளிரும்மே

பொருள்:

நன்மை ஒன்றினையே தன் இயல்பாகக் கொண்டு விளங்குபவனை;

தீயகுணங்கள் சிறிதுமில்லாத தூயவனை;

அதி வெண்மையுடன் விளங்கும் ரிஷபத்தை தன் வாகனமாக ஏற்றவனை;

உமையவளை தன்னில் ஒரு பாகத்தில் இருத்தி மகிழ்பவனை;

சிவ கடாக்ஷமன்றி அடையமுடியாத அருஞ்செல்வமான வீடுபேற்றை அருள்பவனை

திருச்சிறாப்பள்ளியின் குன்றினை தன் இருப்பிடமாக உடையவனை

போற்றித் துதிக்க எந்தன் உள்ளமும் குளிர்ந்து போகின்றதே!

மேல் விளக்கம்:-

நன்றுடையானைத் தீயதிலானை :

இறைவனின் அடிப்படையான குண விசேஷங்கள் இரண்டு வகை.

ஒன்று நன்மையே உருவாக இருந்து, நலமே அருளும் கருணை. ஆனந்தமயமானவனாக திகழும் தன்மை.

இரண்டாவது தீயவையான மும்மலங்களும் அண்டாத தூயவனாக இருந்து, பக்தர்களைத் தீதினின்று காக்கும் வல்லமை.

இந்தக் கோயிலைச் சார்ந்த இருகுளங்களுக்கும் நன்றுடையான் மற்றும் தீயதிலான் என்ற பெயர்களும் உண்டு.

நரை வெள்ளேறு ஒன்று உடையானை :

மிகத் தூய வெண்மைநிறம் கொண்ட ரிஷபத்தை வாகனமாக உடையவர் சிவபெருமான். தாயுமானவர் குடிகொண்டிருக்கும் திருச்சிராப்பள்ளி மலைக்குன்றை தென்திசையினின்று நோக்க காளையைப் போன்ற தோற்றம் தரும். இதைக் கண்ணுற்றே ஞானசம்பந்தர் ரிஷபத்தை பதிகத்திடையே வைத்தார் போலும்!

உமை ஒரு பாகம் உடையானை :

தன் ஆருயிர் துணையான உமையவளுக்கு தன் இடப்பாகத்தையே ஈந்த அண்ணல் சிவபெருமான். சக்தியில்லையேல் சிவமில்லையென்று உணர்த்தும் உமையொருபாகன் தத்துவம்.

சிவனைத் துதிக்க, தன்னால் சேரும் அன்னையின் அருளும். இல்லறத்தில் மனையாளுக்கு கௌரவம் தந்து நடத்துவர்க்கே அவருடைய அருள் என்று கூறாமல் கூறும் மகத்துவம்.

சென்று அடையாத திருவுடையானை :

திரு எனில் செல்வம். திருவெனில் லக்ஷ்மி. திருவுடையானை என்றதில் அளவற்ற செல்வத்திற்கு அதிபதி என்பதல்லவா பொருள்? ஆனால் சுடலைபூசி இரந்துண்டு காட்டில் திரிபவனல்லவா ஈசன்?! சிவத்திற்கு எதற்கு செல்வம்? அவை அடியார்க்கு அருள்வதற்கே அன்றோ? மஹாலக்ஷ்மிக்கு ஐஸ்வர்ய சம்பத்தை அருளியதே சிவனன்றோ? சிவாபராதம் செய்தவரிடமிருந்து முதலில் நீங்குபவள் லக்ஷ்மியே அல்லவா? சிவனுக்குகந்த வில்வத்தையே தனக்கும் விருப்பமாக அர்ச்சனையில் ஏற்பவள் அல்லவா லக்ஷ்மி?

போதாததிற்கு, செல்வங்களுக்கு அதிபதியான குபேரனும் சிவனாரின் நெருங்கிய தோழனாயிற்றே?

திரு என்ற சொல்லுக்கு மோட்சம், வீடுபேறு என்றும் பொருளுண்டு. ‘சென்று அடையாத திரு’ என்று சொன்னதில், அடைவதற்கு மிகவும் கடினமான வீடுபேறு அருள்பவன் என்று பொருள் கொள்ளுதலும் பொருத்தம்.

சிராப்பள்ளிக் குன்று உடையானை :

காவிரியாற்றின் தென்கரையில் விளங்கும் புராதானமான குன்று திருச்சிராப்பள்ளி குன்றாகும். பில்லியன் ஆண்டுகளுக்குமுன்பே தோன்றிய குன்றென நிலவியல் ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. இக்கோயிலின் மூலவரான ஈசன் ‘செவ்வந்தி நாதர்’ என்ற பெயருள்ளவர்.

இறைவனே ஒரு அபலைப் பெண்ணின் தாயின் உருவில் வந்து அவளுக்குப் பிரசவம் பார்த்ததால் தாயுமானவர் என்றும் அழைக்கப் பெற்றார்.

இவ்வளவு பெருமை வாய்ந்த குன்றில் கோயில் கொண்ட பெருமானைத் துதிக்க கவலைகள் நீங்கும். மனப்பாரம் அகலும். உள்ளமும் குளிரும்.

திருச்சிற்றம்பலம்